முரசொலி தலையங்கம்

“உர விலையை உயர்த்தி போராடும் விவசாயிகளை பழிவாங்கும் மோடி அரசு” - முரசொலி தலையங்கம் கடும் குற்றச்சாட்டு!

டெல்லி எல்லைகளில் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை பழி வாங்கும் விதமாக உரத்தின் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ளது.

“உர விலையை உயர்த்தி போராடும் விவசாயிகளை பழிவாங்கும் மோடி அரசு” - முரசொலி தலையங்கம் கடும் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவை விடக் கொடியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள் என்பதற்கு ஒரு உதாரணம், விவசாயிகள் போராட்டத்தை இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது. நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் அது. இதுவரை 375க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளார்கள். கொரோனா முதல் அலையில் தொடங்கிய போராட்டம், இரண்டாவது அலையிலும் தொடர்கிறது. விவசாயிகள், கொரோனாவைப் பார்த்து பயப்படவில்லை.

மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களைப் பார்த்துத்தான் அதிகமாகப் பயப்படுகிறார்கள். கொரோனா என்ற இயற்கைப் பேரிடரை விட, மோடிஉருவாக்கிய செயற்கைப் பேரிடர்தான் மிக மிக அச்சம் தருவதாக இருக்கிறது! தனக்கு வேண்டிய சில கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைப்பதற்காக மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதுதான் மூன்று வேளாண் சட்டங்கள்.

வேளாண்மையைக் காப்பதாக இருந்திருந்தால், அதனை எதற்காக விவசாயிகள் எதிர்க்கப் போகிறார்கள்? கூடுதலாக சில சலுகைகளைச் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் அமைதியாகி இருப்பார்கள். ஆனால் விவசாயிகள் கோருவது, மூன்று வேளாண் சட்டங்களையும் அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான். அது ஒழிக்கப்பட்டால்தான் விவசாயம் வாழும், விவசாயிகள் வாழ்வார்கள் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் இருந்தே நசுக்க நினைத்தார்களே தவிர, அமைதியான பேச்சுவார்த்தையில் மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை.

விவசாயிகளுக்கு எதிராக விவசாயிகளையே தூண்டி விடுதல், விவசாயிகள் என்ற போர்வையில் தனது கட்சி ஆதரவாளர்களை உள்ளே நுழைத்தல், விவசாயிகளின் கூடாரங்களை தீ வைத்தல், யாரையாவது வைத்து தேச விரோதக் கருத்துக்களைப் பேச வைத்தல், விவசாயிகளை தேச விரோதிகளாகக் காட்டுதல், வன்முறையை விவசாயிகள் கையில் எடுக்கத் தூண்டுதல், கொரோனாவை காரணமாகக் காட்டுதல், வெளிநாட்டு சதி என்று கொச்சைப்படுத்துதல், காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று சொல்லுதல்,பெரும்பாலான விவசாயிகள் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு மதச்சாயம் பூசுதல், பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்களின் தூண்டுதல் என்று, சொல்லுதல் - என்று, கீழான காரியங்களைச் செய்து பார்த்தது பா.ஜ.க. அரசு.

இன்னொரு பக்கம் பேச்சுவார்த்தை நாடகங்களையும் நடத்தியது. நாங்கள் எப்போதும் பேசத் தயார் என்ற தகவலை மக்களுக்குக் காட்டினார்கள். கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக சட்டம் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். ‘கார்ப்பரேட்டுகள் விவசாயத்துக்குள் வந்தால்தான் விவசாயம் வளரும்' என்று வேளாண் துறை அமைச்சர் தோமர் சொன்னார். சட்டத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சொன்னார்கள். அதில் சில திருத்தங்கள் வேண்டுமானால் செய்யலாம் என்றார் தோமர். குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் சேர்க்கச் சொன்னார்கள். அதனை இறுதி வரை சேர்க்க மறுத்து விட்டது மோடி அரசு.

குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால், கார்ப்பரேட் கம்பெனிகள் திட்டமிட்டு வைத்துள்ள லாபத்தை அடைய முடியாது. அதனால் தான் அதனை மோடி அரசு ஏற்கவில்லை. உடனே தங்களுக்குச் சார்பான விவசாய சங்கங்களை வைத்து, அரசு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் என்பது மாதிரியான செய்திகளை உருவாக்கினார்கள். இப்படி போலியான செய்திகளை உருவாக்குவதில்தான் மோடி ஆட்சியின் பிம்பம் அடங்கி இருக்கிறது. ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், "உழவர்களிடையே அச்சத்தின் சூழலை உருவாக்கும் பொருட்டு, பலவகையான தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. உழவர்களின் தர்ணாவை வலுக்கட்டாயமாக மாற்றுவது என்பதும் இதில் அடங்கும்.

“உர விலையை உயர்த்தி போராடும் விவசாயிகளை பழிவாங்கும் மோடி அரசு” - முரசொலி தலையங்கம் கடும் குற்றச்சாட்டு!
Anindito Mukherjee

டெல்லியின் எல்லைகளிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் போராடும் விவசாயிகள் முறையான பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் மறுக்கவில்லை. கொரோனாவைக் கூட பொருட்படுத்தாமல், பா.ஜ.க. சில தேர்தல் பேரணிகளை நடத்துவது கேலிக்குரியதாக உள்ளது. அதேசமயம் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அரசாங்கம் அதை மிகவும் கடுமையாகக் கையாள்கிறது. போலிச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் உழவர்களிடையே அச்சத்தின் சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை, உழவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்; அதற்குப் பொருத்தமான பதிலைக் கொடுப்பார்கள்.

அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடருமாறு உழவர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்ற அதே நேரத்தில், அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் முடிந்தவுடன் மற்ற உழவர்களும் டெல்லி எல்லைகளை அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் மீது நிதித் தாக்குதலை மத்திய அரசு தொடுத்துள்ளது. அதுதான் உரங்களின் விலை உயர்வு. உரங்களின் விலையை தீர்மானிக்கும் உரிமையை உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களி டம் மத்திய அரசு கொடுத்துவிட்டது.

இதை விட அந்த நிறுவனங்களுக்கு சாதகமான விஷயம் என்ன இருக்க முடியும்? அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள். 58 சதவிகிதம், 51 சதவிகிதம் என உயர்த்தி விட்டார்கள். கேட்டால் மத்திய அரசு, எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்வார்கள். விவசாயிகளை அரசாங்கம் வேறு வழியில் பழிவாங்குவதே இந்த நடவடிக்கையாகும். எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கு பெண்கள் கூட்டமாக வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இளைஞர்கள் பெரும் கூட்டமாக வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். போராட்டம் நடக்கும் வட்டாரத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சம்யுக்தா கிசான் மோச்சா (எஸ்.கே.எம்) அமைப்பின் சார்பில் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்டப் போராட்டங்களை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக மே மாதம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது. அறுவடைக் காலம் நெருங்கினாலும் போராட்டக் களத்தில் இருந்து விலகுவதில்லை என்று இருக்கிறார்கள் விவசாயிகள். அநேகமாக ஆட்சியில் இருந்து பா.ஜ.க.வை அகற்றும் போராட்டத்துக்கான அடிக்கல்லாக விவசாயிகள் போராட்டம் மாறிக் கொண்டு இருக்கிறது.

banner

Related Stories

Related Stories