முரசொலி தலையங்கம்

மனிதனை நினைக்கச் சொல்லும் திராவிட மாடல்; மனிதனை மறக்கச் சொல்லும் குஜராத் மாடல் - முரசொலி தலையங்கம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு படுக்கை இல்லாமல் சாலைகளில் நோயாளிகளை தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் மாடல் குறித்து முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

மனிதனை நினைக்கச் சொல்லும் திராவிட மாடல்; மனிதனை மறக்கச் சொல்லும் குஜராத் மாடல் - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நரேந்திர மோடியின் உண்மையான முகத்தை கொரோனா காட்டிக் கொடுத்துவிட்டது. கொரோனாவை வரவிடாமல் தடுக்கவும் முடியவில்லை, வந்த கொரோனாவை விரட்டவும் தெரியவில்லை, பரவிய கொரோனாவை மேலும் பரவாமல் செய்யவும் முடியவில்லை, இறுதியாக வந்த தடுப்பூசியைக் கூட அனைத்து மக்களுக்கும் வழங்கவும் முயலவில்லை.

இந்த வகையில் பிரதமரின் இயலாமை - போதாமை - அக்கறையின்மை ஆகிய அனைத்தும் பட்டவர்த்தனமாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இவர் பிரதமராக ஆவதற்கு முன்னால் என்னவெல்லாம் சொன்னார்கள்? குஜராத் மாடலாம்! அது சொர்க்க புரியாம்! மொத்த இந்தியாவில் அதுவே முன்னேறிய மாநிலமாம்! அங்கு வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்! இப்படி ஒரு முதலமைச்சர், இந்தியாவுக்கு பிரதமராக வந்தால் எப்படிஇருக்கும்? என்றெல்லாம் போலியான பிம்பம் ஒன்றைக் கட்டமைத்து இந்திய மக்களின் தலையில் கட்டினார்கள்.

பேஃக் நியூஸ் செக்கிங்' அதிகமாக பரவாத அந்த 2013 ஆம் ஆண்டில் இந்தியாவே குஜராத்தை எச்சில் ஒழுக பார்த்தது. ஆனால் இன்றைக்கு உண்மை நிலைமையை அறியும் போது ரத்தம் உறைய பார்க்கிறது. படுக்கை இல்லை, மருத்துவமனை இல்லை, மருத்துவர் இல்லை, செவிலியர் இல்லை, மருந்து இல்லை, எதுவுமே இல்லை. இதுதான் குஜராத். நோயாளிகளை படுக்க வைக்க படுக்கைகள் இல்லாததால், ஆம்புலன்ஸ் வாகனங்களில் வைத்துள்ளார்கள். அப்படியே வரிசை கட்டி நிற்கிறது வாகனங்கள்! உள்ளே படுக்க வைக்க இடமில்லை, அதனால் கட்டில் போட்டு வெளியில் வைத்துள்ளார்கள்.

அதுவும் போதுமான படுக்கை இல்லை, ஒரே படுக்கையில் மூன்று பேர் படுக்க வைக்கப்படுகிறார்கள். உடல்களை தனித்தனியாக எரிப்பதற்கு நேரம் இல்லை. அதனால் மொத்தமாக போட்டு எரிக்கிறார்கள். அதில் அந்த தகன மேடையே உருகி எரிகிறது. ஏதோ ஒரு காட்டுக்குள் போட்டு மொத்தமாக எரிக்கிறார்கள். இதுதான் மோடி மூன்று முறை ஆண்ட குஜராத் மாநிலத்தின் நிலைமை. இதுதான் இரண்டு முறை இந்தியாவை ஆளும் மோடி ஆட்சியில் அவரது சொந்த மாநிலத்தின் நிலைமை.

மனிதனை நினைக்கச் சொல்லும் திராவிட மாடல்; மனிதனை மறக்கச் சொல்லும் குஜராத் மாடல் - முரசொலி தலையங்கம்!

சொந்த மாநிலத்தில் ஒரே ஒரு புதிய அரசு மருத்துவமனையைக் கூட அவர் உருவாக்கவில்லை என்ற புள்ளி விபரம் இப்போது வெளியாகி உள்ளது. இதுதான் குஜராத் மாடல். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள். இதுதான் திராவிட மாடல்! 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு - ஐம்பது வருஷமா நாடு கெட்டுவிட்டது, நான் பேண்ட்போடுவது இல்லை என்று சிலர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்களே அந்த திராவிட மாடல் உருவாக்கிய பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன? வாழ்ந்தால் குஜராத்தில் வாழ வேண்டும், ஆண்டால் மோடி ஆள வேண்டும் என்று யாகம் நடத்திய அந்த குஜராத்தின் இன்றைய நிலைமை என்ன? திராவிட மாடல் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

குஜராத் மாடல், மக்கள் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்தது ‘Dravidian Model' என்ற புத்தகம். ஆய்வாளர்கள் அ.கலையரசன், எம்.விஜயசங்கர் ஆகிய இருவரும் இணைந்து எழுதியது. அதில் மாநில சுகாதாரக் கட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து Democratizing Care என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதனை பத்திரிக்கையாளர் முரளிதரன் மொழி பெயர்த்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுப்பாட்டைஉருவாக்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த கட்டமைப்பு இங்குதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசுக்குச் சொந்தமான கட்டடங்களில் பாதி கட்டடங்கள் சுகாதாரம், கல்வி சார்ந்தவை. மத்திய அரசு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்தாலும், ஆரம்ப நிலை மருத்துவத்தை வழங்குவதை நோக்கியே தமிழ்நாடு தனது நிதியை செலவழித்திருக்கிறது. மக்களுக்கான மருத்துவ வசதிகளை அளிப்பதில் மிக முக்கியமான கட்டமைப்பு இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான்.

இந்திய சராசரியோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மிக அதிகம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 27,215 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 32,884 பேருக்குதான் ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 12 கிராமங்களுக்கு ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது. இந்தியாவில் 25 கிராமங்களுக்கு ஒன்று என்றுதான் இருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாகவும் கூடுதல் வசதிகளோடும் செயல்படுகின்றன. மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 89 சதவீதத்திற்கு மேலானவை 24 மணி நேரமும் செயல்படுகின்றன.

ஆனால், இந்திய அளவில் 39 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களே 24 மணி நேரமும் செயல்படுகின்றன. அகில இந்திய அளவில் வெறும் 27 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும்தான் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டில் 74 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதில் 72 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலையங்களில் பெண் மருத்துவர்கள் இருக்கிறார்கள். 95 சதவீத இடங்களில் மகப்பேறு வார்டு இருக்கிறது. இப்படி ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கிவிட்டாலும், அதில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் ஆகியோர் தேவை. இதற்கு மருத்துவக் கல்லூரிகள் தேவை.

இப்படியான மருத்துவ பணியாளர்களை உருவாக்குவதில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. இந்தியா வகுத்திருக்கும் விதிகளைக் காட்டிலும் அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருப்பது இதற்கு முக்கியக் காரணம். இந்திய அரசின் விதிகளின்படி 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 15 மருத்துவக் கல்லூரிகள் இருந்தால் போதுமானது. ஆனால், அப்போதே தமிழ்நாட்டில் 45 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்தியா முழுவதுமே 385 மருத்துவக் கல்லூரிகள்தான் இருக்கின்றன என்ற நிலையில் 12 சதவீத கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன என்றாலும், மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது. நேஷனல் ஹெல்த் ப்ரொஃபைல் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கையின்படி பார்த்தால், பத்தாயிரம் பேருக்கு 17.7 மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 10,000 பேருக்கு 8.7 மருத்துவர்களே இருக்கிறார்கள்.

பதிவு செய்யப்பட்ட செவிலியர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் 10,000 பேருக்கு 44.4 பேர் இருக்கின்றனர். இந்திய அளவில் 10,000 பேருக்கு 22 செவிலியர்களே இருக்கின்றனர். "" - என்று அந்த நூலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதை முரளிதரன் தொகுத்து தருகிறார். இவை ஒரு சில புள்ளி விபரங்கள் மட்டும்தான். திராவிட மாடல் ‘மனிதனை நினை' என்றது. குஜராத் மாடல் ‘மனிதனை மற' என்கிறது. அவ்வளவுதான்!

banner

Related Stories

Related Stories