முரசொலி தலையங்கம்

“CAA விவகாரத்தில் பித்தலாட்டத்தை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பழனிசாமி - ராமதாஸ்” : முரசொலி

பா.ஜ.க என்ன சொன்னாலும் தலையாட்டுவது, தமிழ்நாட்டில் வேடம் போடுவது என்பதை கூச்சமில்லாமல் பார்ப்பவர் பழனிசாமி.

“CAA விவகாரத்தில் பித்தலாட்டத்தை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பழனிசாமி - ராமதாஸ்” : முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பழனிசாமியைப் போல கடைந்தெடுத்த பொய்யர் தமிழ்நாட்டில் இதுவரை பிறக்கவில்லை. இனி பிறக்கவும் முடியாது! அ.தி.மு.க. சார்பில் ஒரு தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் 80வது வாக்குறுதி, ‘மைய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழே, “மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அ.இ.அ.தி.மு.க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தைக் கொண்டுவர ஆதரித்து வாக்களித்த கட்சி அ.தி.மு.க.! அவர்களுக்கு இப்படிச் சொல்வதற்கு வெட்கமில்லையா? அல்லது மக்களை மடையர்களாக நினைத்துக் கொள்கிறார்களா? மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து இருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய கொடுங்கோலர்கள், அதை அகற்றுவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்பது பச்சைத் துரோக நாடகமல்லவா?

மாநிலங்களவையில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:

அ.தி.மு.க.எம்பிக்கள்:

01. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

02. என். சந்திரசேகரன்

03. ஏ. முகமது ஜான்

04. ஏ.கே.முத்துக்கருப்பன்

05. ஏ. நவநீதகிருஷ்ணன்

06. ஆர். சசிகலா புஷ்பா

07. ஏ.கே. செல்வராஜ்

08. ஆர்.வைத்திலிங்கம்

09. ஏ. விஜயகுமார்

10. விஜிலா சத்யநாத்

பா.ம.க. எம்.பி.:

11. அன்புமணி ராமதாஸ் - இவர்களால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம், மாநிலங்கள் அவையில் நிறைவேறியது.

மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள்:

தி.மு.க. எம்.பி.க்கள்:

1. திருச்சி சிவா

2. ஆர்.எஸ்.பாரதி

3. டி.கே.எஸ். இளங்கோவன்

4. எம். சண்முகம்

5. பி. வில்சன்

6. வைகோ ( ம.தி.மு.க. எம்.பி.)

7. பி. சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)

8. டி.கே. ரங்கராஜன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.)

அதாவது ஆதரித்தவர்கள் 125 பேர் எதிர்த்து வாக்களித்தவர்கள் 105 பேர் அன்புமணி மற்றும் அந்த 10 அ.தி.மு.க எம்.பி.க்களின் ஓட்டுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறக் காரணம். அந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் ஆதரவு 125-11=114 ஆக குறைந்திருக்கும். எதிர்ப்பு 105+11=116 என்று உயர்ந்திருக்கும். எதிர்த்தவர்கள் 116 பேர் என்றும், ஆதரித்தவர்கள் 114 பேர் என்றும் வந்திருக்கும். குடியுரிமை திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். 116 க்கு 114 என்ற கணக்கில் சி.ஏ.ஏ. சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

“CAA விவகாரத்தில் பித்தலாட்டத்தை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பழனிசாமி - ராமதாஸ்” : முரசொலி

இவ்வளவு பித்தலாட்டத்தையும் செய்தது பழனிசாமியும் ராமதாஸும். ஆனால் இன்றைக்கு சிறுபான்மையினரின் வாக்குக்காக ரத்தப் பற்களோடு வருகிறார்கள். பா.ஜ.க. அரசின் பாதம் தாங்கி ஆதரித்துவிட்டு, இன்று தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினரை ஏமாற்ற பழனிசாமி நாடகம் ஆடுகிறார்.

குடியுரிமைச் சட்டமானது இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல; இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க சார்பில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்து வழங்கப்பட்டது.

அப்போது எல்லாம் குடியுரிமைச் சட்டத்தை முழுமையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். அந்தச் சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போல அப்போது கேட்டார் முதலமைச்சர். யார் பாதிக்கப்பட்டது, அவர்களைக் காட்டுங்கள் என்று கேட்டார் பழனிசாமி. அந்தச் சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறைகூடத் தெரியாமல், கேட்டார் முதலமைச்சர்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி, எல்லாம் தெரிந்தவரைப் போல குடியுரிமைச் சட்டம் குறித்து பெரிய வகுப்பு எடுத்தார் பழனிசாமி. அதை அவரது ஜால்ரா பத்திரிக்கைகள் அப்போதே பெரிய செய்தியாக வெளியிட்டன. இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, “குடியுரிமைச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, சிறுபான்மையினரும் இலங்கைத் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்'' என்று சொல்லிவிட்டு, “தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

“CAA விவகாரத்தில் பித்தலாட்டத்தை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பழனிசாமி - ராமதாஸ்” : முரசொலி

இசுலாமியர் மட்டுமல்ல; இங்குள்ள தமிழர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்படுவார்கள்'' என்றும் கூறினார். இது சட்டமன்றப் பதிவேட்டில் உள்ளது. அப்போதெல்லாம் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்துப் பேசிவிட்டு, இப்போது எதிர்ப்பது ஏன்? அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்துக் கூறி இருக்கும் பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி அவர்கள், “குடியுரிமைச் சட்டத்தின் சிறப்பு குறித்து அ.தி.மு.க.வினருக்கு விளக்கம் சொல்லப்படும். மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தில் மாநில அரசான அ.தி.மு.க அரசு தலையிட முடியாது. அ.தி.மு.க கொடுத்திருக்கும் வாக்குறுதியை திரும்பப் பெற வைப்போம்” என்று சொல்லியதாக ஊடகங்களில் வந்துள்ளது. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. சொல்லியிருக்கும் இந்தக் கண்டனத்துக்கு பழனிசாமியின் பதில் என்ன?

இதற்கெல்லாம் பழனிசாமி பதில் சொல்லமாட்டார். ஏனென்றால் அது அவருக்குத் தெரியாது. பா.ஜ.க என்ன சொன்னாலும் தலையாட்டுவது, தமிழ்நாட்டில் வேடம் போடுவது என்பதை கூச்சமில்லாமல் பார்ப்பவர் பழனிசாமி. அதனால்தான், அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதாகும் என்று மிகமிகச்சரியாக அடையாளம் காட்டி உள்ளார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

பாம்பு தன் சட்டையை உரித்தாலும் பாம்புதான் என்பதை உணராதவர்களா தமிழ் மக்கள்?

banner

Related Stories

Related Stories