உணர்வோசை

“சட்டமன்றத்துக்குள் எப்படி வந்தார் திருவள்ளுவர்..?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -6

அ.தி.மு.கவுக்கு அளிக்கிற வாக்கு என்பது எம்.ஜி.ஆருக்கு அளிக்கும் வாக்கு அல்ல என்பதை அ.தி.மு.க தொண்டர்கள் உணர வேண்டும்!

“சட்டமன்றத்துக்குள் எப்படி வந்தார் திருவள்ளுவர்..?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -6
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!

அந்தப் படத்துக்கு கதை வசனம் கலைஞர். பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். பாடி நடித்தவர் கலைவாணர். திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நான்கே ஆண்டில் வந்தது அந்தப் படம். தொண்டர்களை உணர்ச்சியைத் தட்டி எழுப்பியது மட்டுமல்ல, தி.மு.க என்றால் என்ன என்பதையும் சொன்னது அந்தப் பாடல்...

'தீனா... மூனா... கானா... எங்கள்

திருக்குறள் முன்னேற்றக் கழகம்

தீனா ... மூனா.... கானா

அறிவினைப் பெருக்கிடும்

பகுத்தறிவோடு நாட்டினர் வாழ

திருக்குறள் தந்தார் பெரியார் - வள்ளுவப்

பெரியார் - அந்தப்

பாதையிலே நாடு சென்றிடவே - வழி

வகுப்பதையும் அதன்படி

தீனா... மூனா...கானா...

நடப்பதும் எங்கள் -

கறுப்பு சிவப்பு என்ற

பேதத்தை நீக்கும் - தலை

கனத்தை குறைத்து நல்ல

தன்மையை உண்டாக்கும்..." என்று போகும் அந்தப் பாடல்.

சிலரின் பொழிப்புரைகளுக்குச் சிக்கியிருந்த திருக்க்குறளை மீட்டு வந்து பாமர்களது சிந்தனைக்கு பந்தி வைத்தது திராவிட இயக்கம். 'நாம் குறள் மதத்தைச் சேர்ந்தவர்கள்' என்று அறிவித்து திருக்குறள் மாநாடு நடத்தத் தொடங்கினார் பெரியார். அதற்குப் போட்டியாகச் சிலர் கம்பராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் தூக்கிச் செல்லத் தொடங்கினார்கள். குறள் என்பது இலக்கியம் அல்ல, அதுவே தமிழர் மெய்யியல் என்பதைச் சொன்னது திராவிட இயக்கம். முத்தமிழறிஞர் கலைஞர்,

திருவள்ளுவரின் தீபம் ஏந்திச் செல்லும் முதல்வராகவே ஆனார். அவரது வாழ்நாளில் குறள் தீபத்தை அணைய விடவில்லை.

நிலாவைப் பார்த்து நடந்து செல்வோர் அனைவர் கூடவும் அது வரும். அதைப் போலத்தான் வள்ளுவனும். எல்லார்க்கும் பொதுவானவர். அந்தப் பொதுமையை விளக்கும் வண்ணம் வேணுகோபால் சர்மா தீட்டிய ஓவியம் தான் இன்று காட்சிக்கு இருக்கிறது. இந்தப் படத்தை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்க நினைக்கிறார் கலைஞர். அது பக்தவத்சலம் ஆட்சி. 'திருவள்ளுவர் படத்தை மன்றத்தில் வைக்க கனம் முதலமைச்சர் அனுமதிக்க வேண்டும்' என்றார் கலைஞர். 'கனம் உறுப்பினர் தனது சொந்த செலவில் கொடுத்தால் வைக்கலாம்' என்றார் முதல்வர். 'நானே செய்து தருகிறேன்' என்றார் கலைஞர். மறுநாள் காட்சிகள் மாறியது. 'அரசே வைக்கும்' என்றார் முதல்வர். 'யார் வைத்தால் என்ன? வள்ளுவர் உள்ளே வர வேண்டும்' என்றார் கலைஞர். அப்படித்தான் மன்றத்துக்குள் வந்தார் குறளாசான்!

“சட்டமன்றத்துக்குள் எப்படி வந்தார் திருவள்ளுவர்..?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -6

பொதுப்பணித் துறையோடு சேர்த்து போக்குவரத்துக்கும் அமைச்சராக ஆனார் கலைஞர். தமிழகத்தில் ஓடும் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும், குறளையும் எழுதி வைக்க உத்தரவிட்டார். இது அந்தக் காலத்தில் அதிகமாக கிண்டலடிக்கப்பட்டது. 'யாகாவாராயினும் நா காக்க என்று எழுதப்பட்டுள்ளது யாருக்காக?" என்று ஒரு உறுப்பினர் கேட்டார். 'நாக்கு இருப்பவர் அனைவருக்கும்' என்றார் அமைச்சர் கலைஞர்!

முதல்வர் கலைஞரும் அமைச்சர் கண்ணப்பனும் திடீரென மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலுக்கு வந்தார்கள். சைவ மணம் கமழும் திருவள்ளுவர் அவர். இதனை மொத்தமாக மாற்றி மாபெரும் கோவிலாக எழுப்ப நினைத்துத்தான் வந்தார் முதல்வர். ஆனால், அந்த இடம் மிக மிகக் குறுகலானது. நடைமுறைச் சிக்கல்களும் இருந்தன. இருக்கும் கோவில் அப்படியே இருக்கட்டும், அதற்கு முழுமையான சீரமைப்புச் செய்வோம் என்று தொகையை ஒதுக்கினார்.குன்றக்குடி அடிகளார் தலைமையில் சீரமைத்தார். இப்படி ஒரு கோவில் இருப்பதே நாட்டுக்கு அப்போது தான் தெரியும்.

திருவள்ளுவர் பிறந்த காலத்தை கி.மு.31 என்று கணித்தார் மறைமலையடிகள். அதனை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதன்படி பார்த்தால் இன்று 2020 என்பதுடன் 31 ஐ கூட்டினால் 2051 என்று வரும். இதுதான் திருவள்ளுவர் ஆண்டு. தமிழறிஞர்களின் இந்த ஆண்டுக் கணக்கை முதல்வர் கலைஞர் 1971 இல் ஏற்றுக் கொண்டு தமிழக அரசின் அரசாணையாக வெளியிட்டார். அதுவே இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

மயிலை கோவிலை விரிவுபடுத்த முடியாத வருத்தத்தில் விரிவான இடம் பார்த்து அவர் கண்டுபிடித்ததுதான் நுங்கம்பாக்கம். 15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எழுப்பினார் கோட்டம். 500 சிற்பிகள், 1000 ஊழியர்கள் இரவு பகல் பாராது 14 மாதங்களில் எழுப்பிய மாபெரும் கோட்டம் அது. மொத்தச் செலவு 50 இலட்சம். 101 அடி உயரமுள்ள தேர் செய்து, அதில் கொண்டு போய் வள்ளுவரை உட்கார வைத்தார்.

'சேர,சோழ,பாண்டியர் மூவேந்தர் மூளையில் உதிக்காத சிந்தனை இது' என்று சொன்னவர் கவிஞர் சுரதா. 1976 சனவரி 23 ஆம் நாள் கட்டுமானப்பணி மொத்தமும் முடிந்தது. பிப்ரவரியில் திறப்புவிழா. சனவரி 30 ஆட்சி கலைக்கப்பட்டது. 10 யானைகள், 133 குதிரைகள், 1330 தமிழாசிரியர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள் நடந்து வர ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தார். சர்வாதிகாரம் அனைத்தையும் வீழ்த்தியது. கலைஞர் இல்லாமல் திறப்புவிழா நடந்தது. மொத்தமே ஐந்து நிமிடங்கள். பேசிய இரண்டு பேரும் ஆங்கிலத்தில் பேசினார்கள். கலைஞர் வைத்த அடிக்கல்நாட்டு கல்வெட்டும் வெளியில் வீசப்பட்டது. 'கல்லணை கட்டிய கரிகாலன் கல்வெட்டு வைக்கவில்லை. ஆனால் கல்லணை கட்டியவன் என்றால் கரிகாலனைத்தான் சொல்கிறது' என்று அன்று எழுதினார் கலைஞர்!

“சட்டமன்றத்துக்குள் எப்படி வந்தார் திருவள்ளுவர்..?” : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -6

தலைநகரில் கோட்டம் கட்டியதுமே குமரி முனையில் சிலை அமைக்க நினைத்தார் கலைஞர். அரசியல் அவரை அதிகமாக அலைக்கழித்த காரணத்தால் அமைதியாக இருந்தார். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவரது கனவுச் சிலை குமரி முனையில் எழுந்தது. 'என் வாழ்நாளில் மிகப்பெரிய ஆசையொன்று நிறைவேற்றப்பட்டு விட்டது. இருபத்தைந்து ஆண்டுகளாக எண்ணி எண்ணி விடுத்த பெருமூச்சு வீண் போகாமல் விண் முட்டும் சிலை விரிகடல் பரப்பின் எல்லையில் எழும்பிவிட்டது' என்று எழுதினார்.

தீனா... மூனா... கானா...

திருக்குறள் முன்னேற்றக் கழகம்!

திராவிட முன்னேற்றக் கழகம்!

திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி! என்று எப்படித் திருப்பிப் போட்டாலும் குறளும் கழகமும் ஒன்றாக இருக்கின்றன. இயங்குகின்றன!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். இதுதான் ஈராயிரம் ஆண்டு தமிழர் வாழ்வியல் இலக்கணம். இன்றைக்கு இந்த இலக்கணத்தை தலைக்கனம் பிடித்த சிலர் திரித்து எழுதப் பார்க்கிறார்கள். ஒன்றாய் ஒரு தாய் மக்களாய் வாழ்ந்தவர் மனங்களில் பிரிவினை எண்ணத்தை விதைத்து சிதைக்கப் பார்க்கிறார்கள்.

தமிழன் என்ற அடையாளத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். தமிழர்கள், தமிழர்களாக ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். தமிழர்கள் அனைவரும் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டால், அது தங்களுக்கு ஆபத்து என்று நினைக்கிறார்கள். தமிழர்களைப் பிரிப்பதன் மூலமாக தங்களை வளப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

காலம் காலமாக நாம் பார்த்த ஆரியச் சூழ்ச்சியானது இன்று பா.ஜ.க வேஷம் போட்டு அதற்குள் பதுங்கி வருகிறது. அந்த ஆரியச் சூழ்ச்சி தனது வழக்கமான அச்சுறுத்தும் பாணியைப் பயன்படுத்தி அ.தி.மு.கவை முழுமையாக விழுங்கிவிட்டது. அதிமுகவை விழுங்குவது என்பது அ.தி.மு.கவின் வாக்கு வங்கியை தான் விழுங்கிவிட்டதாக, கைப்பற்றி விட்டதாக பகல் கனவு காண்கிறது. இதனை அ.தி.மு.கவின் உண்மைத் தொண்டர்கள் உணர வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கருத்து வேறுபாடு கொண்டு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கினார் என்பது உண்மைதான். அப்படிப்பட்ட இயக்கத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தான் பெயர் சூட்டினார்!

கட்சிக் கொடியில் அண்ணாவின் படத்தை மறக்காமல் பொறித்தார். அந்த அண்ணா தி.மு.க இல்லை, இன்றைய அண்ணா தி.மு.க என்பதை உண்மையான அண்ணா தி.மு.க தொண்டர்கள் உணர வேண்டும். இப்போது இருப்பது அமித்ஷா தலைமையிலான அ.தி.மு.க.

நான்காண்டு காலக் கொள்ளையில் இருந்து தப்பிப்பதற்காக பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அ.தி.மு.கவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டார்கள் என்பதை உண்மை அ.தி.மு.க தொண்டர்கள் உணர வேண்டும். அ.தி.மு.கவுக்கு அளிக்கிற வாக்கு என்பது எம்.ஜி.ஆருக்கு அளிக்கும் வாக்கு அல்ல என்பதை அண்ணா தி.மு.க தொண்டர்கள் உணர வேண்டும்!

இத்தகைய குத்தகை ஆட்சி முடிந்து குறளாட்சி மலர்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பீர்!

நன்றி வணக்கம்!

- தொடரும்...

Related Stories

Related Stories