உணர்வோசை

தி.மு.கவின் வெற்றியை தடுக்க ஆரியம் அதிகமாக துடிப்பதற்கு காரணம் என்ன? : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -5

அனைவரும் படியுங்கள் என்கிறது தி.மு.க. படிக்கவிடக்கூடாது என்ற பா.ஜ.கவினர் தி.மு.கவை எதிர்க்கிறார்கள்.

தி.மு.கவின் வெற்றியை தடுக்க ஆரியம் அதிகமாக துடிப்பதற்கு காரணம் என்ன? : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -5
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே! வணக்கம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுப்பதற்கு அ.தி.மு.கவை விட ஆரியம் தான் அதிகமாகத் துடிக்கிறது. என்ன காரணம்?

தமிழர்களை தமிழர்களாக ஒன்று சேர்த்து- தலை நிமிர்ந்த மனிதர்களாக மாற்ற நினைக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

அதை விரும்பாதவர்கள் தான் தி.மு.கவை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்!

* கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடிமக்கள் நாம்!

* 'பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்' என்ற வான்புகழ் வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப தமிழர்கள் அனைவரும் பழங்காலத்தில் ஒன்றாக வாழ்ந்தோம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்துக்கு அதன் தன்மைக்கு ஏற்ப வேறுபாடு இருந்ததே தவிர, மக்கள் மனதில் வேற்றுமை இல்லை. வேறுவேறு தொழில் செய்தோம். அவரவர் திறமைக்கு ஏற்ப அந்தத் தொழில் இருந்தது. தொழில் வேற்றுமை இருந்ததே தவிர அது உயர்வு - தாழ்வு வேற்றுமையாக இல்லை.

* இத்தகைய அன்பான சமூகத்தில் ஆரியம் விதைத்த விதை தான் சாதி. நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்பது தமிழ்ச் சமூகத்தில் என்று பரவியதோ அன்றே தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் ஒற்றுமை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சிந்தனையில் நஞ்சு கலந்தது. இந்த உயர்வு - தாழ்வு வேதத்தில் இருப்பதாகவும், அந்த வேதங்கள் தான் சாஸ்திரம் என்றும், அந்த சாஸ்திரங்களை மீறுவது பாவம் என்றும் சொல்லி பயமுறுத்தினார்கள்.

*இந்தப் பயத்தை மூலதனமாகக் கொண்டு ஆரியம் போட்ட ஆட்டத்தை வள்ளுவரும், கபிலரும், சித்தர்களும் மக்களுக்கு உணர்த்தினார்கள். வள்ளலாரும், வைகுண்டரும், அயோத்திதாசரும், தந்தை பெரியாரும் இயக்கம் தொடங்கித் தடுத்தார்கள்.

* தமிழர்களாய் ஒன்றானோம். கல்வி,வேலை வாய்ப்பைப் பெற்றோம். உயர்ந்தோம். உலகம் முழுக்கப் பரவினோம்.எந்த சாதியை வைத்துப் பிரித்தார்களோ அதே சாதியையை அளவீடாகக் கொண்டு சமூகநீதியைப் பெற்றோம். உயர்ந்தோம். உலகம் முழுக்கப் பரவி வாழ்கிறோம்.

* இதில் மண்ணைப் போட ஆரியம் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது. இதனைத் தமிழர்கள் முதலில் அடையாளம் காண வேண்டும்!

மனுவோ, ஆரிய ஆகமங்களோ, சமஸ்கிருத சாஸ்திரமோ, சமஸ்கிருத வேதங்களோ தமிழர் நெறி அல்ல.

உண்மையில் தமிழர் நெறி எது என்பதை திருவள்ளுவர், அவ்வையார், வள்ளலார் ஆகிய மூவரும் நமக்கு வடித்துத் தந்துள்ளார்கள்.

இதோ வள்ளுவப் பெருமான் சொல்கிறார்:

* பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்ப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் - என்று சொல்கிறார்!

இதோ நம் அவ்வைப் பிராட்டியார் சொல்கிறார்:

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றாங்கால்

நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கி லுள்ள படி - என்று சொல்கிறார்!

அருட்பெபெருங்கருணை வள்ளலார் சொல்கிறார்:

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்

அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே! - என்கிறார்.

இந்த தமிழர் நெறியைக் குலைக்க நினைக்கிறார்கள்!

திருக்குறளை 'தீக்குறள்' என்கிறார்கள்!

திருக்குறளை, சமஸ்கிருதத்தில் இருந்து திருடப்பட்டது என்கிறார்கள்!

மனுவை தான் திருவள்ளுவர் திருடிக் கொண்டார் என்கிறார்கள்!

திருக்குறளை தடை செய்ய வேண்டும் என்று எழுதும் அளவுக்கு 'தினமணி'க்கு கொழுப்பு வந்துவிட்டது!

தமிழை நீஷ பாஷை என்கிறார்கள்!

நம்முடைய தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் இலக்கியப் பாடல்களை மதிக்க மறுக்கிறார்கள்!

இறை நம்பிக்கை தமிழ்ப் பாடல்களை கோவில்களில் பாட மறுக்கிறார்கள்!

சமஸ்கிருதம் தான் வேதமொழி, கடவுள் மொழி என்கிறார்கள்!

தமிழர்களை கோவில்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள்!

தமிழர்கள் அர்ச்சனை செய்யக் கூடாது என்கிறார்கள்!

தமிழர்கள் வழிபாடு செய்தால் சாமி தீட்டாகி விடும் என்கிறார்கள்!

தமிழர்கள் யாரையும் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிப்பது இல்லை!

தமிழர்களை சூத்திரர்கள் என்று சொல்லி கீழாக நடத்துகிறார்கள்.

தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்கிறார்கள்!

இப்படி இந்தக் காலத்திலும் தமிழர்களை ஒடுக்கப்பட்ட இழிவான பிறவிகளாக நடத்துபவர்கள் தான், நமக்கு ஏதோ நன்மை செய்வதாக நடிக்கிறார்கள்!

தங்கள் இனத்துக்கு வந்த ஆபத்தை இந்துகளுக்கு வந்த ஆபத்தாக மாற்றுகிறார்கள்!

அவர்கள் காப்பாற்றப்பட்டதும், தமிழர்களை மீண்டும் சூத்திரர்கள் என்றே அழைப்பார்கள்!

இத்தகைய கூட்டம் தான் தி.மு.கவை எதிர்க்கிறது.

ஏன் இந்தக் கூட்டம் தி.மு.கவை எதிர்க்கிறது?

*தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு எது மேன்மையானதோ, உயர்வானதோ அதற்காக போராடும் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்! இது அந்தக் கூட்டத்துக்கு எப்படிப் பிடிக்கும்?

*அவர்களுக்கு சமஸ்கிருதம் தான் வேத மொழி, தாய்மொழி, தந்தை மொழி. நம்முடைய தமிழ் அவர்களுக்கு நீஷபாஷை. சூத்திரபாஷை. அந்த மொழியை அவர்கள் மதிக்கவே மாட்டார்கள்.

தி.மு.கவின் வெற்றியை தடுக்க ஆரியம் அதிகமாக துடிப்பதற்கு காரணம் என்ன? : அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே -5

தேவாரமும், திருவாசகமும், திருப்புகழும், திருவருட்பாவும் கொண்ட மொழி நம்முடைய தமிழ் மொழி. இத்தகைய தெய்வீகத் தமிழ் மொழியை, கோவில் வழிபாட்டு மொழியாக ஆக்கக்கூடாது என்று சொல்பவர்கள் அவர்கள். தமிழில் வழிபாடு செய்யலாம் என்று சொல்வது தி.மு.க. உத்தரவு போட்டது தி.மு.க. அத்தகைய கட்சி அவர்களுக்கு எப்படி பிடிக்கும்?

* அவர்களுக்கு அவர்கள் மட்டுமே கர்ப்பக்கிரகத்துக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமை உண்டு. தமிழர்களில் மற்ற சாதியினர் போய் அர்ச்சனை செய்தால் சாமி தீட்டாகி விடும். சாமி அழுக்காகி விடும். சாமி சிலைகளை தமிழர்கள் தொடக்கூடாது என்பது அவர்களது கொள்கை. ஆனால் தமிழர்கள் எந்த சமூகப் பிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஆகமம் கற்றுக் கொண்டால் ( மருத்துவக் கல்வி பயின்றவர் மருத்துவர் ஆவது போல!) அர்ச்சகர் ஆகலாம் என்று வழிவகை செய்யும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது தி.மு.க. அத்தகைய கட்சி அவர்களுக்கு எப்படி பிடிக்கும்?

* ஒரு காலத்தில் ஏகவலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டார்கள். ஆனால் இன்று வாழ்க்கையையே கேட்கிறார்கள்' என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். எனவே தமிழர்களின் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள் தி.மு.கவினர்.

* அதனால் அவர்கள் சாதி ரீதியான பகைமை காரணமாக தி.மு.கவை எதிர்க்கிறார்கள்!

இதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

அனைவரும் சமம் என்கிறது தி.மு.க. சமமில்லை என்ற பா.ஜ.கவினர் தி.மு.கவை எதிர்க்கிறார்கள்.

அனைவரும் படியுங்கள் என்கிறது தி.மு.க. படிக்கவிடக்கூடாது என்ற பா.ஜ.கவினர் தி.மு.கவை எதிர்க்கிறார்கள்.

இதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும்!

நன்றி வணக்கம்!

Related Stories

Related Stories