
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (25.11.2025) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில், 42,792 கோடி ரூபாய் முதலீட்டில், 96,207 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 111 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், 1,052 கோடி ரூபாய் முதலீட்டில் 4,502 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தித் தொழில் மேம்பாட்டிற்காக, ஆவாரம்பாளையத்தில் 14.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக, மூப்பேரிப்பாளையத்தில், 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.
அத்துடன், 9 நிறுவனங்களில், பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் :-
=> தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை :
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான திட்டங்களின் விவரம் பின்வருமாறு:
1) Yield Engineering Systems - அமெரிக்காவைத் தலைமையமாகக் கொண்ட, உலகின் முன்னணி குறைக்கடத்தி உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், கோவையில் தனது உற்பத்தி மற்றும் பொறியியல் திட்டத்தை அமைத்துள்ளது. உலக அளவில், குறைக்கடத்தி உதிரிபாகங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்நிறுவனம் கோவையில், 150 கோடி ரூபாய் முதலீட்டில் 50 புதிய வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், ஒரு விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
2) Mindox – சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம், குறைக்கடத்தி உதிரிபாகங்கள் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், 398 கோடி ரூபாய் முதலீட்டில் 460 புதிய வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், கோவையில் உள்ள அதன் உற்பத்தித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
3) Caliber Interconnects – சிங்கப்பூரைத் தலைமையமாகக் கொண்ட இந்த நிறுவனம், குறைக்கடத்தி மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் திட்டங்களை கோவை மற்றும் திருநெல்வேலியில் அமைத்துள்ளது. கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு, குறைக்கடத்தி மற்றும் மின்சக்தி மின்னணு உற்பத்தி சூழலை மேம்படுத்தும் நோக்கில், 3000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ஒரு விரிவாக்கத் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
4) சக்தி ஏர்கிராஃட் இண்டஸ்ட்ரி லிமிடெட் - திருப்பூர் மாவட்டத்தில் நவீன இரு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானங்களின் அசெம்ப்ளி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் அதிநவீன தொழிற்திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் முதலீட்டுடன் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நேரடியாக 200 நபர்களுக்கும், மறைமுகமாக சுமார் 1,000 நபர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேற்கண்ட முதலீடுகள், ஜவுளி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், பொது உற்பத்தி மற்றும் சுற்றுலா துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ளன. இம்முதலீடுகள் பரவலாக கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.
=> குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை :
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 1052 கோடி ரூபாய் முதலீட்டில் 4502 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
=> இரண்டு திறன்மிகு மையங்கள் அமைத்திட அடிக்கல் நாட்டுதல் :
வார்ப்புத் தொழில் மற்றும் பம்புகள் உற்பத்தித் தொழில் ஆகியவற்றில் கோவை மாவட்டம் முன்னணி மாவட்டமாக திகழ்ந்து வரும் நிலையில், இத்துறைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் அவர்கள் இரண்டு திறன்மிகு மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரம்:
* ஆவாரம்பாளையத்தில், உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் (Advanced Pumps & Motors) உற்பத்திக்காக ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence) 14.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட உள்ளது.
* மூப்பேரிப்பாளையத்தில், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டிற்காக (Foundary Skill and Castings Development) 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு திறன்மிகு மையம் நிறுவப்பட உள்ளது.
மேற்கண்ட திறன்மிகு மையங்களுக்கு, செயலாக்க முகமையாக, டிட்கோ நிறுவனம் இயங்கும். இதன்மூலம், திறன் வளர்ப்பு, பரிசோதனை மற்றும் ஆய்வு வசதிகள், கருவி உருவாக்கம், மறுசுழற்சி மற்றும் தொழில்நுட்ப – புதுமை மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான முழுமையான சேவைகள் வழங்கப்படும்.

=> கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி :
தொழில் மற்றும் கல்வித்துறை ஒத்துழைப்புடன் புதுமை மற்றும் ஆராய்ச்சியை வளர்ப்பதன் மூலம் அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ்நாடு அரசு, "தமிழ்நாடு பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அறக்கட்டளை" என்ற புதிய நிறுவனத்தை அமைத்துள்ளது. கோவை மண்டலத்தில் புதுமையான ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் புதிய தயாரிப்பு மேம்பாட்டை ஊக்குவிக்க, இந்நிறுவனம் 2.58 கோடி ரூபாய் ஆராய்ச்சிக்கான மானியத்துடன் 10 பயன்பாட்டு ஆராய்ச்சி (Applied Research) திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான முதல் தவணையாக 78 லட்சம் ரூபாய் இன்று முதலமைச்சர் அவர்களால் ஆராய்ச்சியாளர்களிடம் வழங்கப்பட்டது.
=> ஜவுளித் துறையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் :
மெசே ஃப்ராங்க்ஃபர்ட் இந்தியா நிறுவனம், தொழில்நுட்ப ஜவுளித்துறைக்காக 2026-ஆம் ஆண்டு முதல், கோயம்புத்தூரில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கண்காட்சி நடத்திட உள்ளது. தொழில்நுட்ப ஜவுளி சூழலமைப்பு மேம்படும் வகையில் மேற்கொள்ளப்படும் இம்முன் முயற்சிக்காக, வழிகாட்டி நிறுவனம் – கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறை, மெசேஃப்ராங்க்ஃபர்ட் இந்தியா நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே, ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
=> பணி நியமன ஆணைகள் வழங்குதல் :
9 தொழில் நிறுவனங்களின் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.






