ஆங்கிலப் பெரும் பேராசிரியரும், தலைசிறந்த மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் கா. செல்லப்பன் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு வருமாறு :
ஆங்கிலப் பெரும் பேராசிரியரும் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளரும் ஒப்பிலக்கியத்தின் திறனாய்வுச் சுடராகவும் நூற்றுக்கணக்கான மாணவச் செல்வங்களுக்கு வழிகாட்டியாகவும் ஆங்கில இலக்கியத் துறையில் மங்காப் புகழ் கொண்டவராகவும் விளங்கிய பேராசிரியர் கா.செல்லப்பன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்னாரது மறைவு தமிழ், ஆங்கில இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கி, திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத் துறையின் தனிப் புகழ்த் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் செல்லப்பன் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர். எண்ணற்ற ஒப்பியல் நூல்களை எழுதியவர், மொழி பெயர்த்தவர். நான்கு தலைமுறைகளை உருவாக்கியவர்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு ஆங்கில கவிஞர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய நாட்டுக் கவிஞர்களை அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். ஷேக்ஸ்பியரையும் இளங்கோவடிகளையும் ஒப்பியல் செய்து பெரும் படைப்பினைப் படைத்தவராவார். முத்தமிழறிஞர் கலைஞரின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதில் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறப்புக்கும், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெரும் சிறப்புக்கும் உரியவராவார்.
இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நாவலான ‘கோரா’வின் மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர். மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக 2006-ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருதையும், 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதையும் பெற்றவர். இத்தனை சிறப்புகளை ஒருங்கே கொண்டிருந்த மாபெரும் அறிஞரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மாணவர்களுக்கும், அறிவுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.