தமிழ்நாடு

ரூ. 9 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி : பணத்தை இழந்த முதியவர் விபரீத முடிவு - காவல்துறையின் அலட்சியம்!

அமைச்சர் தென்னரசுவின் பெயரைக் கூறி, அரசு அடுக்குமாடி வீடு வாங்கித் தருவதாகக் கூறி தவெக நிர்வாகி ரூ. 9 லட்சம் மோசடி செய்துள்ளார்.

ரூ. 9 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி : பணத்தை இழந்த முதியவர் விபரீத முடிவு - காவல்துறையின் அலட்சியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களது இரண்டு மகன்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், முதியவர்களான இந்த தம்பதி வேலைவாய்ப்பின்றித் தவித்து வந்துள்ளனர்.

இதனால், விஸ்வநாதன் டி.பி. சத்திரத்தில் இருந்த தனது சொந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு, மனைவியின் அண்ணன் வீட்டு அருகே குடியேறினார்.இதை அறிந்த விஸ்வநாதனின் மனைவியின் அண்ணன் மகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணிப் பொறுப்பாளருமான கலைவாணி, விஸ்வநாதனிடம் ”அமைச்சர் தென்னரசு மிகவும் நெருக்கமானவர் என்று கூறியுள்ளார்.

எனவே, அவரிடம் சொல்லி காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே சாலமங்கலத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அரசு கட்டியுள்ள அடுக்குமாடி வீடு வாங்கித் தருவதாகக் கூறி, விஸ்வநாதனிடம் இருந்து முதற்கட்டமாக ரூ. 7 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.ஆனால், சொன்னபடி வீடு வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளார்.

இதனால் வேறு வழியின்றி விஸ்வநாதன் தம்பதியினர் அதே ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். இந்தச் சூழலில், விஸ்வநாதன் வீட்டிற்கு வந்த கலைவாணி, அவரது ஏடிஎம் கார்டையும் திருடிச் சென்று, ரகசியமாக மேலும் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். அதுமட்டுமன்றி, விஸ்வநாதன் காஞ்சிபுரத்தில் வாங்கி வைத்திருந்த இடத்தின் அசல் ஆவணங்களையும் ஏமாற்றி வாங்கி வைத்துக்கொண்டு, அதைத் திருப்பித் தர மறுத்து வந்துள்ளார்.பணத்தையும் இழந்து, நிலத்தின் ஆவணங்களையும் பறிகொடுத்து நின்ற விஸ்வநாதன், பொறுமையிழந்து படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், தவெக அமைச்சர் தென்னரசு பெயரைக் கூறிக்கொண்டு, அரசியல் பலத்தோடு காவல் நிலையம் வந்த தவெக நிர்வாகி கலைவாணி, 'நான் 7 லட்சம் ரூபாய் வாங்கவே இல்லை, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது?' என்று கூறிப் பணத்தைத் தர முடியாது என கறாராக மறுத்துள்ளார். காவல்துறையினரும், 'நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது' என்று தவெக பெண் நிர்வாகிக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையம் சென்றும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற வேதனையுடனும், மன உளைச்சலுடனும் விஸ்வநாதன் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், மிகுந்த மனவேதனையுடன் தனது மனைவி மற்றும் மகன்களிடம், 'நான் எப்படியாவது அந்தப் பணத்தை உங்களுக்கு மீட்டுத் தருகிறேன்' என்று கூறிவிட்டு, திடீரென எலி மருந்தை எலிமருந்தைக் குடித்துள்ளார்.

அவர் மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் போராடிய முதியவர் விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதியவர் உயிரிழந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, படப்பை காவல்துறையினர் தவெக நிர்வாகி கலைவாணியிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. விஸ்வநாதனின் இறுதிச்சடங்குச் செலவிற்காக கலைவாணியிடமிருந்து வெறும் 1 லட்சம் ரூபாயை மட்டும் காவல்துறையினரே வாங்கிக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது விஸ்வநாதனின் குடும்பத்தினர் சொந்த வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல், தவெக நிர்வாகியின் அடுத்தடுத்த சூழ்ச்சிகளால் நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். வாழ வழியின்றி மிகவும் மோசமான சூழ்நிலையில் அந்தக் குடும்பம் தவித்து வருகிறது.'தவெக நிர்வாகி, அமைச்சர் தென்னரசுவின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றியுள்ளார்.

அவருக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சியினருக்குச் சாதகமாகவும் படப்பை காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்தப் புகாரை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, தற்போது வரை வழக்குப் பதிவு செய்யவில்லை. 7 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொடுத்து விடுகிறோம், பணம் கொடுக்கவில்லை என்றால் மட்டும்தான் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று அலட்சியமாகக் கூறுகின்றனர்' எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories