மு.க.ஸ்டாலின்

“விளக்குமாறில் கொள்ளையடித்த ஆட்சி இது” - எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!

முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், வேலைவாய்ப்பின்றி தவிக்கும் 9,260 பேர் வேலை வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர்!

“விளக்குமாறில் கொள்ளையடித்த ஆட்சி இது” - எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கே ஒன்றும் செய்யாத முதலமைச்சர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இன்று (18-01-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் – எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“எடப்பாடி தொகுதிக்குட்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் இந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஏராளமான சகோதரிகள் கூடி இருப்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை நான் கலந்துகொண்ட கிராம சபைக் கூட்டங்களிலேயே அதிக அளவு மக்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் ஒன்றாக இந்த எடப்பாடி தொகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டம் அமைந்திருக்கிறது.

நீங்கள் எல்லோரும் உங்கள் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்திருப்பது போல் வந்து இருக்கிறீர்கள். இதைக் காணும் போது நீங்கள் எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்ற முடிவெடுத்து உறுதியோடு - கட்டுக்கோப்போடு வந்திருப்பது தெரிகிறது. நாங்கள் ரெடி! நீங்கள் ரெடியா?

இங்கு வந்திருக்கும் அனைவரும் பேச விரும்புவார்கள். ஆனால் அதற்கு நேரம் இடம்கொடுக்காத காரணத்தினால், 10 பேர் உங்களது சார்பாகப் பேச விருப்பப்பட்டு பெயர் கொடுத்ததன் அடிப்படையில், அவர்களைப் பேச அழைக்கவிருக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா தலைமையில் ஆட்சிக்கு வந்து பிறகு, அவரது மறைவின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் பணிகளும் நடைபெறவில்லை. இந்த இலட்சணத்தில் இந்த எடப்பாடி தொகுதி என்பது முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்த தொகுதி. நீங்கள் அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கவில்லை; சட்டமன்ற உறுப்பினராகத் தான் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்கள் அம்மையார் ஜெயலலிதாவை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தீர்கள். அவர் இறந்து விட்ட காரணத்தால், ஓ.பி.எஸ் முதலமைச்சராக வந்து, அவர் தூக்கப்பட்டு, சசிகலா அவர்கள் முதல்வராக வர முடிவு செய்து, அவர் சிறைக்குச் செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டதால், யாரை முதலமைச்சராக நியமிக்கலாம் என்று யோசித்தபோது பழனிசாமி அவர்கள் முதலமைச்சரானார். எப்படி முதலமைச்சராக வந்தார் என்பதை நீங்கள் சமூக வலைதளங்களில் பார்த்து இருப்பீர்கள். என்ன நடந்தது? ஊர்ந்து ஊர்ந்து வந்து முதலமைச்சரானார். முதலமைச்சராகி தமிழ்நாட்டுக்கு எந்தத் திட்டமாவது செய்திருக்கிறாரா? இந்தத் தொகுதிக்காவது ஏதாவது செய்திருக்கிறாரா?

எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். ஜெயலலிதா அவர்களும் ஒரு மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். இலட்சக்கணக்கானோர்க்கு வேலைவாய்ப்பு வழங்கப் போவதாக அவர் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை. அவரது மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் உலக முதலீட்டாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்திருக்கிறது; பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிறேன் என்று இவர் சொன்னார்.

தமிழ்நாட்டில் வேலை கொடுக்காதது பற்றி வேண்டாம்; இந்த எடப்பாடி தொகுதியில் யாருக்காவது இந்த அ.தி.மு.க. ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? தயவு செய்து கேட்கிறேன்.

இதோ இந்த மேசையில் அடுக்கி வைத்திருப்பதைப் பாருங்கள். இது என்ன தெரியுமா? வேலை வேண்டும் என்று கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த எடப்பாடி தொகுதியிலிருந்து மட்டும் படித்த பட்டதாரி இளைஞர்கள் 9600 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். பதிவு செய்த அந்த நகல் தான் இது. ஆதாரத்தோடு இங்கே வைத்திருக்கிறோம். இதில் ஒருவருக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? இல்லை.

இந்தத் தொகுதிக்கு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் 234 தொகுதிகளுக்கும் அவர் எப்படி செய்ய முடியும். எனவே அப்படிப்பட்ட இந்த ஆட்சியை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும் என்பதை உங்கள் உணர்வுகள் மூலமாக நான் புரிந்து கொண்டேன். ஆகவே பேசக் கூடியவர்கள் தயவு செய்து சுருக்கமாகப் பேசிடவும்.

எல்லாரும் பேசியதைத் தான் பேசப் போகிறீர்கள். என்ன பேசப் போகிறீர்கள்? உங்கள் ஊரில் ரேஷன் கடை இருக்காது, பட்டா பிரச்சனை இருக்கும், குடிநீர் வசதி இல்லை, சாலை வசதி இல்லை, தெரு விளக்கு எரியவில்லை, பள்ளிக்கூடம் வேண்டும், மருத்துவமனை கட்டப்படவேண்டும், முதியோர் உதவித்தொகை இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை, 100 நாள் வேலைத்திட்ட நாள்களை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் கொடுக்க வேண்டும், சம்பளம் முறையாகக் கொடுக்க வழி இல்லை, வேலையில்லாப் பிரச்சினை என்பன போன்ற பிரச்சனைகளை நீங்கள் எடுத்துச் செல்லப் போகிறீர்கள்.

நான் சொன்னேன், 9,600 பேருக்குக் கூட இன்னும் வேலை கொடுக்கப்படவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளைச் சுருக்கமாக நீங்கள் எடுத்துப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நீங்க பேசிய பிறகு நிறைவாக நான் ஒரு 15 நிமிடம் நிச்சயமாக உங்களிடத்தில் பேசுவேன் என்ற உறுதியைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.”

இவ்வாறு கழகத் தலைவர் மக்கள் கிராம சபையைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.

கிராம சபை கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“இங்கே பேசியவர்கள் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் பெற்ற பயன் குறித்து, மருத்துவமனை பிரச்சினை, விசைத்தறி நெசவாளர்கள் பிரச்சினை, தண்ணீர் மற்றும் மணல் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தார்கள். இவை அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் செய்ய வேண்டும். ஆனால் தற்போது பழனிசாமி ஒருபுறம் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவரை முந்தும் அளவிற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஊழலாட்சித்துறை அமைச்சராக எடப்பாடியை விட இரண்டு மடங்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கு பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசிய நீங்கள் விலைவாசி பிரச்சனையைப் பற்றிப் பேச மறந்து விட்டீர்கள். இன்று விலைவாசி விஷம் போல் ஏறி கொண்டே போகிறது தி.மு.க ஆட்சியில் விலைவாசி ஏறியது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்டுச் சேமிக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம். இன்று சேமிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பே இல்லை.

1989-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். அதன் மூலமாகச் சுழல் நிதி, மானியத்தொகை, வங்கிக் கடன்களையெல்லாம் வழங்கினோம். அதன் மூலமாகப் பெண்கள் சிறு சிறு தொழில்கள் செய்து சுயமாக நின்று குடும்பத்தை வழிநடத்தும் அளவிற்கு வலிமை பெற்றார்கள். ஆனால் இன்றைக்கு அந்த மகளிர் குழுக்களும் சரியாக செயல்படவில்லை. இந்த இலட்சணத்தில் விலைவாசி விஷம் போல் ஏறி கொண்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சிலிண்டர் 250 ரூபாயாக இருந்தது. இப்பொழுது 750 ரூபாயாக உள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோ 38 ரூபாயாக இருந்தது. இப்போது 92 ரூபாயாக உள்ளது. உளுத்தம் பருப்பு தி.மு.க. ஆட்சி இருந்தபோது ஒரு கிலோ ரூபாய் 60. இப்பொழுது ரூபாய் 150. பாமாயில் எண்ணெய் தி.மு.க. ஆட்சியில் 48 ரூபாய். இப்பொழுது 120 ரூபாய். சர்க்கரை தி.மு.க. ஆட்சியில் 18 ரூபாய்க்குக் கிடைத்தது. இப்பொழுது 40 ரூபாய். கடலைப் பருப்பு கழக ஆட்சியில் 34 ரூபாய்க்குக் கிடைத்தது. இப்பொழுது 72 ரூபாய். இப்படி விலைவாசியைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் அரசினுடைய குறைபாடுகளை, இலஞ்ச ஊழல்களை நாம் எடுத்துச் சொன்னால் இந்த ஊர் எம்.எல்.ஏவான முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது. இந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தடையுத்தரவு போட்டார். கிராமசபைக் கூட்டம் தானே நடத்தக்கூடாது, நாங்கள் “மக்கள் கிராம சபைக் கூட்டம்” நடத்துகிறோம் என்று நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆத்திரத்தில் இப்போது அவரும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார். தொடங்கட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் முதலமைச்சர் என்பதை மறந்து, தரம் தாழ்ந்து பேசக்கூடிய நிலையில் இன்று இருக்கிறார்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரடியாக முதலமைச்சர் ஆகவில்லை. நீங்களெல்லாம் அவர் முதலமைச்சர் ஆவார் என்று நினைத்து வாக்களித்தீர்களா? அவர் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் வாக்களித்தீர்கள். அதன் மூலமாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அதைத் தான் நாம் சொல்கிறோம்.

அதற்காக, கலைஞர் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களால் தான் முதலமைச்சர் ஆனார் என்று விஷயம் அறிந்தவர் போல் பேசிக் கொண்டு இருக்கிறார். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாவலர் அவர்களைத் தேர்ந்தெடுக்கலாமா - தலைவர் கலைஞர் அவர்களைத் தேர்ந்தெடுக்கலாமா? என்ற நிலை ஏற்பட்டது.

நாவலர் அவர்கள் தான் மூத்தவர். அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் மனமுவந்து சொன்னார்கள். ஆனால் பலர் தலைவர் கலைஞர் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அன்றைக்கு தி.மு.க.வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களும் வலியுறுத்தினார்கள். இதெல்லாம் பழனிசாமி அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

நான் எம்.ஜி.ஆர் அவர்களுடைய பரம ரசிகன். அவரது திரைப்படம் வெளிவந்தால் பள்ளியைப் புறக்கணித்துவிட்டு அந்தத் திரைப்படத்திற்குச் செல்லக் கூடியவன் நான். தலைவர் கலைஞர் அவர்களால் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் திரைப்படத்துறையில் முன்னேறினார். எப்படி சிவாஜி கணேசன் அவர்களை ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலமாகக் கதாநாயகன் ஆக்கினாரோ, அதேபோல், இராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி என்று தன்னுடைய திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் அவர்களை நடிக்க வைத்து, மந்திரிகுமாரி திரைப்படத்தின் மூலமாகப் பெரிய கதாநாயகனாக உருவாக்கித் தந்தார்கள். இதெல்லாம் வரலாறு, பழனிசாமிக்குத் தெரியாது.

தலைவர் கலைஞர் அவர்களது பெயரைச் சட்டமன்றத்தில் சொன்னவரிடம், எனக்குத் தலைவர் கலைஞர் தான் என்று சொன்னவர், எம்.ஜி.ஆர். இதெல்லாம் வரலாறு. அந்தளவிற்குத் தலைவர் கலைஞர் அவர்கள் மீது பற்று கொண்டவர். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தலைவர் கலைஞர் அவர்களை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தபோது அவரும் ஆதரித்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அவர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றுகூடிக் கலந்துபேசி அவரைத் தேர்ந்தெடுத்தார்களா? இல்லை. காலில் ஊர்ந்து சென்றதால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த காட்சிகளை நீங்களே பாருங்கள்.

துரோகம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. துரோகம் செய்தே வளர்ந்தவர். துரோகம் செய்தே முதலமைச்சர் ஆனவர். முதலமைச்சர் பதவி யாரால் கிடைத்தது? சசிகலாவால் முதலமைச்சர் பதவி கிடைத்தது. அந்த சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்.

இவரது ஆட்டமெல்லாம் தேர்தல் வரும்போது முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே முடியப் போகிறது பாருங்கள். சசிகலா விடுதலையாகி வந்தவுடன், இவரது பதவிக்கு ஆட்டம் வரப் போகிறதா இல்லையா என்று பாருங்கள். எப்படி காலில் விழுந்து பதவியைப் பெற்றார். பெற்ற பிறகு என்ன மாதிரியான துரோகத்தைச் செய்தார் என்பதையெல்லாம் நீங்கள் வீடியோவில் பார்த்தீர்கள்.

இன்று அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா ஆட்சி… அம்மா ஆட்சி… என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதைத் தவறு என்று கூடச் சொல்லவில்லை. ஆனால் இதுவரைக்கும் அந்த அம்மா எப்படி இறந்தார் என்பதை எடப்பாடி கண்டுபிடித்து வெளியே சொன்னாரா? இல்லை.

நாமும் ஜெயலலிதாவும் எதிரெதிர்க் கட்சியினர் தான். நாம் என்றைக்கும் அவர்களது கொள்கைக்கு உடன்பட மாட்டோம். அரசியல் ரீதியாக அவர் நமக்கு எதிரி தான். ஆனால் அவர் ஒரு முதலமைச்சர். 1.1% வாக்கு அவர்களுக்கு அதிகம். அதனால் அவர்களது ஆட்சி. நமக்கு 1.1% வாக்குக் குறைவு. அதனால் நாம் எதிர்க்கட்சி.

என்னதான் இருந்தாலும், அவர்கள் நமக்கும் சேர்த்துத் தான் முதலமைச்சர். அப்படிப்பட்ட முதலமைச்சர் எப்படி இறந்தார்? என்ற செய்தி யாருக்காவது கிடைத்ததா? கிடைக்கவில்லை.

நான் இன்னும் கேட்கிறேன், ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தவுடன், சசிகலா அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். சசிகலா அவர்கள் சிறைக்குச் சென்று விட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தார்? ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். அப்போது அம்மா அவர்களது மரணம் மர்மமாக இருக்கிறது. இதை நான் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன். இதற்கு நீதி விசாரணை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சொன்னார். உடனே அவரை அழைத்துச் சரி செய்து, நீதி விசாரணை வைக்கிறோம், நீங்கள் துணை முதல்வராக வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று உட்கார வைத்தார்கள். நீதி விசாரணை வைத்தார்கள். ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை கமிஷன் அமைத்து 3 ஆண்டுகளாகிவிட்டது. இதுவரைக்கும் யார் குற்றம் செய்திருக்கிறார்? எப்படி இருந்தார்? என்ன சூழ்நிலையில் இருந்தார்? என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டது? அது உண்மையான மரணமா? மர்மமான மரணம்? எதாவது விசாரணை வந்ததா? இல்லை.

இதைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமிக்குக் கவலை இல்லை. அவரது கவலை எல்லாம் யார் சாலை ஒப்பந்தம் எடுக்கிறார்கள்? ஒப்பந்தக்காரர்களிடம் எப்படி கமிஷன் வாங்கலாம். 9,600 பேர் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. அதிலிருந்து கமிஷன் வராது. எங்கிருந்து கமிஷன் வருகிறது? எங்கிருந்து கொள்ளை அடிக்கலாம்? இதை எல்லாம் விட கொரோனா என்பது ஒரு கொடிய நோய். வாழ்வாதாரத்தை இழந்து தமிழ்நாட்டு மக்கள், இந்த நாட்டு மக்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஏன் உலகமே தவித்துக் கொண்டிருந்தது. அந்த நோய் வந்திருக்கிறதா எந்த கண்டுபிடிக்கக் கூடிய ஒரு சாதனம் வெளிநாட்டில் இருந்து வருகிறது. அதில் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், நாம் போடுகிற இந்த மாஸ்க். இது இலவசமாக அனைத்து ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். அதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இது அனைத்து இடங்களிலும் கொடுக்கப்பட்டதா? நான் கேட்கிறேன். பெயருக்கு ஒரு சில இடத்தில் கொடுத்தார்கள். முதலமைச்சர் எங்கு செல்கிறாரோ, அமைச்சர்கள் எங்குச் செல்கிறார்களோ அங்கு மட்டும் கொடுத்தார்களே தவிர அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. கொடுத்தது கூட ஒழுங்காக இல்லை. அதுவும் தரமில்லாததைக் கொடுத்துவிட்டார்கள். அப்படிப்பட்ட நிலையிலும் கொள்ளையடித்தார்கள்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், பிளீச்சிங் பவுடர். அதனைச் சுகாதாரத்திற்காகச் சாலை ஓரத்தில் போடுவார்கள். துர்நாற்றம் வரக்கூடாது, கொசு வரக்கூடாது, கிருமிகள் வரக்கூடாது என்பதற்காக கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் போட்டார்கள். அதிலும் கொள்ளையடித்து இருக்கிறார்கள். துடைப்பம் இருக்கிறதல்லவா விளக்குமாறு. அதிலும் கொள்ளையடித்த ஆட்சி தான் இந்த ஆட்சி.

இவ்வாறு கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமாகத் தான் இந்த எழுச்சியான கூட்டத்தை நான் பார்க்கிறேன்.

நிச்சயமாக, உறுதியாக எங்களுக்கெல்லாம் இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கையை விட உங்களுக்குத் தான் அதிகமாக நம்பிக்கையுடன், இந்த ஆட்சியை விரட்ட தி.மு.க ஆட்சி தான் தமிழ்நாடு உதயம் ஆகப்போகிறது என்ற நிலையில் எல்லாம் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

பல்வேறு பிரச்சினைகளை, குறைபாடுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன், இந்த ஸ்டாலின் இருக்கிறான்; நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். இங்கு ஒரு அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்புப் பிரச்சினை பற்றிய ஒரு மனுவைக் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பிரச்சினை பற்றி நாம் மாவட்ட ஆட்சித்தலைவர் இடத்தில் பேசுவோம். அதற்கு முடிவு வரவில்லை என்றால் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்குரிய தீர்வு நிச்சயமாகக் காணப்படும் என்ற உறுதி இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி உங்கள் அத்தனைப் பேருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பின்னர் “அ.தி.மு.க அரசை நிராகரிக்கிறோம்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

banner

Related Stories

Related Stories