தி.மு.க

“தனது எஸ்டேட்டை காப்பாற்றிக்கொள்ள, குடிநீர் திட்டத்தை தடுக்கும் கே.பி.முனுசாமி” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

தருமபுரி மாவட்டம் - பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட சூடனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

“தனது எஸ்டேட்டை காப்பாற்றிக்கொள்ள, குடிநீர் திட்டத்தை தடுக்கும் கே.பி.முனுசாமி” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாதவர்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்; தனது எஸ்டேட்டைக் காப்பாற்றுவதற்காக, தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லவிடாமல் தடுப்பவர்தான் கே.பி.முனுசாமி” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (18-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட்டம் - பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட சூடனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கக்கூடிய உங்களையெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு, பூரிப்போடு வருக… வருக… வருக… என வரவேற்கிறேன். மிகுந்த ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள். எழுச்சியோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்.

இப்போது இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நாம் தொடங்கப் போகிறோம். இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கக்கூடிய காட்சியை பார்க்கும்போது, உள்ளபடியே எனக்கு பெருமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், சகோதரிகள், தாய்மார்கள் அதிக அளவிற்கு வந்திருக்கிறீர்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக அளவில் வந்திருக்கிறீர்கள். இதை நம் வீட்டில் நடக்கின்ற நிகழ்ச்சி போல, திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதுபோல எல்லோரும் ஆர்வமாக வந்திருக்கிறீர்கள்.

அவ்வாறு வந்திருக்கும் உங்கள் அத்தனை பேரையும் மாவட்டக் கழகத்தின் சார்பிலும், ஒன்றிய கழகத்தின் சார்பிலும், தலைமை கழகத்தின் சார்பிலும் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன்.

இப்போது இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றால், இது இங்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஊராட்சிகளிலும் இதை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகத்தில் இருக்கும் எங்களைப் போன்ற முன்னணியினர், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் எல்லாம் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போது இங்கு நான் வந்திருக்கிறேன் என்றால் இன்று மாலையில் நான் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குச் செல்கிறேன். இன்னும் சில மாவட்டங்களுக்கு செல்கிறேன். இப்படி பல மாவட்டங்களுக்கு நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன்.

ஏறக்குறைய 12,000-க்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. எல்லா ஊராட்சிகளுக்கும் செல்ல முடியாது. அதே போல மாநகராட்சியில் வார்டுகள் இருக்கின்றன. அதனால், எல்லோரும் பிரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.

நமது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி இவர்கள் எல்லாம் ஒவ்வொரு பக்கத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்கள் எல்லாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு உங்களிடத்தில் நான் வந்திருக்கிறேன். இந்த தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதியில், இந்த ஊராட்சிக்கு உங்களை எல்லாம் சந்திக்க நான் வந்திருக்கிறேன். இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கூட நடத்தக்கூடாது என்று தடை போட்டார்கள். ஏனென்றால் தாய்மார்கள் அதிக அளவில் வருகிறார்கள். கிராமம் முழுவதும் வருகிறது. அதுமட்டுமின்றி அருகிலுள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வந்துவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள் அதிகமான அளவிற்கு வருகிறார்கள்.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் பொறுத்தவரை வந்தவர்கள் அப்படியே உட்கார்ந்து, கடைசி வரைக்கும் இருந்து கவனிக்கிறார்கள். இப்போது உங்களில் 10 பேரை பேச வைக்கப் போகிறேன். அந்தப் பெயர்களை எல்லாம் நாங்கள் தயாரித்து வைத்திருக்கிறோம்.

எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை. ஆனால் எல்லோரும் பேசினால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் இதை முடித்து விட்டு மதிய உணவிற்கு நீங்களும் போகவேண்டும், நானும் போகவேண்டும். எனக்கு மாலையில் வேறு நிகழ்ச்சி இருக்கிறது. உங்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும்.

ஆதலால் அனைவரையும் பேச வைக்க வாய்ப்பு இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் கிராமத்தைப் பொறுத்த வரைக்கும் என்ன பிரச்சினை இருக்கும் என்றால், குடிநீர் பிரச்சினை இருக்கும், தெரு விளக்கு பிரச்சினை இருக்கும், சாலை வசதிகள் பிரச்சினை இருக்கும், சாக்கடை பிரச்சனை இருக்கும், சுகாதாரச் சீர்கேடு பிரச்சினை இருக்கும், பட்டா பிரச்சினை இருக்கும், சுயஉதவிக் குழு பிரச்சினை இருக்கும், ஓய்வு ஊதியப் பிரச்சினை இருக்கும், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து வசதிகள், ஏரி, குளம், மருத்துவமனைகள் இப்படிச் சில பிரச்சினைகள் எல்லா ஊராட்சிகளிலும் இருக்கும்.

10 பேர் பேசினாலே போதும். அதில் அவர்கள் நிச்சயமாக அனைத்தையும் பேசத்தான் போகிறார்கள். அதனால் எல்லாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த 10 பேரும் கூப்பிடும் போது எழுந்து, நின்ற இடத்தில் இருந்தே சுருக்கமாக 2 நிமிடத்தில் பேசுகிறீர்கள். 10 பேரையும் பேச வைத்துவிட்டு கடைசியாக நான் விரிவாக, நீங்கள் பேசுபவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி, நீங்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று எல்லாம் தெளிவாக எடுத்து சொல்லவிருக்கிறேன்.

இப்பொழுது நீங்கள் எல்லாம் ஒரு நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள். என்ன நம்பிக்கை என்றால் கடந்த 10 வருடமாக தமிழ்நாட்டில் ஒரு அக்கிரமமான, அநியாயமான அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பலனும், பயனும் கிடைக்கவில்லை. ஏற்கனவே கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சியை நடத்தி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னென்ன வசதிகள், என்னென்ன திட்டங்கள், என்னென்ன சாதனைகள் கிடைத்தது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

அதையெல்லாம் திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதை எல்லாம் நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது இந்த 10 வருடமாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆட்சியில் எப்படியாவது இருக்கவேண்டும், பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும், ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள். ஏன் என்றால் இன்னும் இருக்கப்போவது 4 மாதங்கள் தான்.

இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் கூட்டி இருக்கிறோம். நீங்கள் ஒரு குடும்ப உணர்வோடு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய கருத்துகளை உங்கள் அனைவரின் சார்பில் 10 பேர் பேசப் போகிறார்கள். இப்பொழுது அவர்களை நான் அழைக்கப் போகிறேன். அழைக்கப்படுகின்ற நேரத்தில் அவர்கள் இங்கே தங்களுடைய கருத்துகளை சுருக்கமாக பேசப்போகிறார்கள்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“மீண்டும் உங்களுக்கெல்லாம் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தொடக்கத்தில் இந்தக் கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றிச் சொன்னேன். நீங்களும் அதைப் புரிந்துகொண்டு எனக்கு மிகச் சிறப்பான வகையில் ஒத்துழைப்புத் தந்து, இங்கே 10 பேர் இந்த ஊர் பகுதி மக்கள் சார்பில் பல்வேறு கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள், கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள், பிரச்சினைகளையும் நீங்கள் பேசி இருக்கிறீர்கள்.

செல்வி அவர்கள் இங்கு இருக்கும் தண்ணீர்ப் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து தரணி அவர்கள் ஒகேனக்கல் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். நஞ்சுண்டன் அவர்கள் கூட்டுறவு ஆலைகளில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி சுட்டிக்காட்டி, வேதனையாக சில உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மகேஸ்வரி அவர்கள் ஒரு மாற்றுத்திறனாளி. அவர்களும் பேசினார். இங்கு தி.மு.க இருந்த போது பல்வேறு வசதிகள் இருந்தது. கலைஞர் அவர்கள்தான் மாற்றத்திறனாளிகள் என்ற சொல்லைக் கொண்டு வந்தார்கள்.

ஏன் என்றால் ‘உடல் ஊனமுற்றவர்கள்‘ என்று தான் அழைப்பார்கள். அது அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு ‘மாற்றுத்திறனாளிகள்‘என்ற பெயரைச் சூட்டி, அந்த்த துறையைத் தன் கைகளில் வைத்துக் கொண்டார் கலைஞர் அவர்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

ஆனால் இப்போது அந்த நிலை இல்லை என்பதை வேதனையோடு இங்கு அந்தச் சகோதரி குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதேபோல இடைநிலை ஆசிரியர் பிரச்சினைகளைப் பற்றி கலைவாணி அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்.

முனிரத்தினம் அவர்கள் இந்தப் பகுதி பின்தங்கிய நிலையில் இருக்கிறது. எந்த வளர்ச்சியும் அடையவில்லை என்று பேசினார்.

இங்கு இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வைச் சார்ந்தவர். அமைச்சராகவும் இருக்கிறார். அவருடைய வளர்ச்சிதான் அதிகமாக இருக்கிறதே தவிர, இந்த மாவட்டத்திற்கும் இந்தப் பகுதிக்கும் எந்த வளர்ச்சியும் இல்லை என்பதைப் பற்றியும் அவர் வேதனையோடு இங்கே சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

அதேபோல அமிர்தராஜ் அவர்கள் வேலைவாய்ப்புப் பிரச்சினை பற்றியும், சுயஉதவி குழுக்களைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லி, சுழல் நிதியை உயர்த்தி கொடுக்க வேண்டும், மானியத் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பதையும் சொன்னார்கள்.

உங்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ‘சுயஉதவிக் குழு‘ என்பதை முதன் முதலில் கலைஞர்தான் தொடங்கி வைத்தார்கள். இந்த தருமபுரி மாவட்டத்தில்தான் முதன்முதலில் தொடங்கி வைத்தார்கள் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அப்படித் தொடங்கி வைத்தபின், அந்த சுயஉதவிக் குழுக்கள் பொறுப்பை, அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராக இருந்த என்னிடம் தான் ஒப்படைத்து இருந்தார்கள். அப்பொழுது எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

சத்யா அவர்கள் இங்கு இருக்கும் ஏரிப் பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே இதுதான் ஒட்டுமொத்தமாக இங்கு இருக்கும் பிரச்சினை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.

தருமபுரி என்றால் என்னுடைய நினைவிற்கு வருவது ஒகேனக்கல் திட்டமும், மகளிர் சுயஉதவிக் குழுவும் தான் என்னுடைய நினைவிற்கு வரும். சுயஉதவிக் குழு ஏன் நினைவிற்கு வருகிறது என்றால், முதன் முதலில் இங்குதான் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

தொடங்கி வைத்தபோது, சுயஉதவிக் குழு என்பது பெண்களுக்காக, மகளிருக்காக உருவாக்கப்படுகிறது என்று சொன்னார். பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ வேண்டும், சுயமாக வாழ்க்கை நடத்த வேண்டும், எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கை உள்ளவர்களாக, சுயமரியாதை உணர்வோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான் அந்த சுயஉதவிக் குழு என்ற திட்டத்தை அவர்கள் உருவாக்கினார்கள்.

“தனது எஸ்டேட்டை காப்பாற்றிக்கொள்ள, குடிநீர் திட்டத்தை தடுக்கும் கே.பி.முனுசாமி” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

சுழல் நிதி, வங்கிக் கடன், மானியத் தொகை இதையெல்லாம் கொடுத்தார்கள். அதை வாங்கிக் கொண்டு பெண்கள் சிறு சிறு தொழில் செய்து, ஒரு குழு சேர்த்து, அந்தக் குழுவின் மூலமாக அந்தத் தொழிலைச் செய்து உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதுடன், தன்னம்பிக்கை பெற்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தை கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள்.

ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை. முன்பெல்லாம் நீங்கள் வங்கிகளுக்கு சென்றீர்கள் என்றால் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்தார்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் வங்கிப் பக்கமே செல்ல முடியவில்லை. உங்களை விரட்டி அடிக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். அந்த நிலைமை தான் இன்றைக்கு சுய உதவி குழுக்களை பொறுத்தவரைக்கும் இருக்கிறது.

ஒகேனக்கல் திட்டம் கொண்டு வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது முழுமையாக இந்த மாவட்டத்திற்கு வந்து சேரவில்லை.

தருமபுரி, கிருஷ்ணகிரி இந்த 2 மாவட்டத்தின் நீண்ட நாள் பிரச்சினை அது. அந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரைக்கும், அந்த தண்ணீரில் ஃபுளோரைடு கலந்து விடுகிறது - அந்த தண்ணீர் குடித்தால் எலும்புருக்கி நோய் வருகிறது - பல் எல்லாம் கரைபடிந்து கருப்பு நிறமாக மாறுகிறது – என்ற நிலை இருந்து வந்தது.

அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அறிவித்தார்கள். அறிவித்த பொழுது நான் துணை முதலமைச்சராக இருந்தேன்.

அப்பொழுது என்னை ஜப்பான் நாட்டுக்கு சென்று அங்கு இருக்கும் வங்கியில் கலந்து பேசி, இதற்கு வேண்டிய நிதி உதவியை கடனாகப் பெற்றுக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். நானும் சில அதிகாரிகளும் அங்கு சென்றோம்.

ஜப்பான் நாட்டிற்குச் சென்று கலைஞருடைய கருத்துகளை எடுத்துச் சொன்னோம். உடனடியாக அவர்கள் ஒப்புதல் கொடுத்தார்கள். ஒப்புதல் கொடுத்து அந்தத் திட்டத்தை இந்த பகுதியில் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் என்பது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு கலைஞர் தான் நேரடியாக வந்து தருமபுரியில் அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

தொடங்கிவைத்து அத்துடன் நிறுத்தி விடவில்லை. நான் ஒரு மாதத்திற்கு 4 முறை தருமபுரிக்கு வருவேன். கிருஷ்ணகிரிக்கும் வருவேன். என்ன வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? குழாய் பதிக்கப்பட்டு விட்டதா? எங்கெங்கு இணைப்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்? எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் நேரடியாக நான் வந்து விசாரித்தேன்.

அதுமட்டுமில்லாமல் ஒரு உயரதிகாரியை இங்கு போட்டு, ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தி கவனிக்க வைத்து கிட்டத்தட்ட ஒரு 80% வேலை முடிக்கப்பட்டது. இன்னும் 4 மாதங்கள் நாம் ஆட்சியில் இருந்திருந்தால் 100% பணியை முடித்து இருப்போம்.

ஆனால் தேர்தல் வந்துவிட்டது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாம் எதிர்க் கட்சியாக மாற்றப்பட்டோம். ஆளும் கட்சியாக அ.தி.மு.க வந்தது. அவர்கள் வந்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும். செய்த பணியை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தி இருந்தால் இந்த பிரச்சினை இருந்திருக்காது.

அந்த 20% வேலையைக் கூட முடிக்க முடியாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஏனென்றால் இந்தத் திட்டம் நிறைவேறினால் தி.மு.க.விற்கு பெயர் வந்துவிடும். கலைஞரை பாராட்டுவார்கள். ஸ்டாலினுக்கு இந்த சிறப்பு சென்றுவிடும் என்ற அரசியல் நோக்கத்தோடு அந்த திட்டத்தை அவர்கள் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

சட்டமன்றத்தில் பலமுறை நாங்கள் கேட்டோம். முறையான பதில் இல்லை. அதற்கு பிறகு 2 மாவட்டமும் சேர்ந்து பெரிய போராட்டம் நடத்தினோம்.

நிதியை ஜப்பானில் சென்று வாங்கி வந்து, கலைஞரை வைத்து தருமபுரியில் அடிக்கல் விழா நடத்தியது நாம். ஆனால் இந்த திட்டத்திற்காக நாமே போராட்டம் நடத்தியதுதான் அதில் வெட்கக்கேடு.

அதற்கு பிறகு ஏதோ பெயருக்கு வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். அந்த பணி முழுமை அடையவில்லை. இப்பொழுது சொல்கிறேன், தி.மு.க. ஆட்சிக்கு வந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் எங்கெங்கு அந்த ஒகேனக்கல் குடிநீர் திட்டம் வரவில்லையோ அங்கெல்லாம் உடனடியாக அந்த இணைப்பை கொடுத்து அதை நிறைவேற்றுவது தான் எங்களுடைய முதல் வேலை என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அதுபோலத்தான் இந்த ஆட்சியில் 10 வருடமாக மக்களுக்கு எந்த காரியமும் செய்யவில்லை.

உதாரணமாக, இந்த அமைச்சரைப் பற்றி சொன்னீர்கள். சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சராகவும் இருக்கிறார். உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடியவர் கவனத்திற்கு பலமுறை சென்றிருக்கும்.

உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். இந்த நீட் பிரச்சனை உங்களுக்கு தெரியும். இது எதற்கு என்றால் என்ன தான் பள்ளிக்கூடத்தில் உயர்ந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும், நேரடியாக யாரும் மருத்துவர் ஆக முடியாது.

அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதை எதிர்த்து இன்றைக்கு வரைக்கும் நாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் கொண்டு வந்தார்கள். ஆனால் கலைஞர் அதை அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் சென்று தடை வாங்கி வைத்திருந்தார். கலைஞர் இருந்த வரைக்கும் அது உள்ளே வரவில்லை.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் தலைவர் அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட வரவில்லை. ஆனால் இப்பொழுது எடப்பாடி முதலமைச்சராக வந்த பிறகு உள்ளே வந்து இருக்கிறது என்றால் என்ன காரணம்? மத்திய அரசுக்கு எடுபிடியாக எடப்பாடி இருக்கிற காரணத்தினால் அதை அனுமதித்து விட்டார்.

சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டு, ஒருமனதாக நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். இதுவரைக்கும் எந்த மரியாதையும் இல்லை.

அதனால் இன்றைக்கு வரை அனிதாவில் தொடங்கி 14 மாணவ - மாணவியர்கள் மருத்துவராக முடியாது என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்து இருக்கிறார்கள். இப்படி எல்லாம் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி, அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்க திட்டமிட்டார்கள். அவர்கள் திட்டமிட்ட பொழுது, அதை நான் தான் முதலில் அறிக்கை கொடுத்தேன். ஆனால் இதை கவனிக்க வேண்டியது யார்? கல்வித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய, இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டியவர் தான் இதை கவனிக்க வேண்டும்.

ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அதைப்பற்றி சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. இப்பொழுது நீங்கள் பேசுகிறபோது சொன்னீர்கள்.

பஞ்சப்பள்ளி அணையிலிருந்து பாலக்கோடு மாரண்டள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்படக்கூடிய வகையில் திட்டம் தீட்டி குடிநீர் தேவையை வழங்கியது தி.மு.க அரசு என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் உயர் கல்வித் துறை அமைச்சரான கே.பி.அன்பழகன், பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டம் தருமபுரிக்கு வருவதை நிறுத்தி விட்டார் என்ற புகார் மக்களிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

அதே போல தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை வைத்து தருமபுரி மாவட்டத்தில் 15 ஊராட்சிகள் பயன் அடையக் கூடிய திட்டம் கொண்டு வருவோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அன்றைக்கு உறுதி தந்தார்கள். நான் கேட்கிறேன், இதுவரைக்கும் அது நடந்திருக்கிறதா? அது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? இல்லை.

அதேபோல, அலையாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டி ஏரி வரை, வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வரும் திட்டத்தை நான் வெற்றி பெற்றவுடன் கொண்டு வருவேன் என்று அன்பழகன் சொன்னார். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

அதுமட்டுமில்லாமல் இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடத்தினார்கள். என்றைக்கு என்றால் நான் தேதியோடு சொல்கிறேன், நான் பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்.

நான் கலைஞருடைய மகன். எதையும் ஆதாரத்தோடு தான் பேசுவேன். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு முதலமைச்சர் வந்தார். அப்பொழுது முதலமைச்சர் அதை முடித்துக் கொடுப்பேன் என்று சொன்னார்.

நான் சொல்வது பொய்யல்ல, உண்மை. வீடியோ ஆதாரம் இருக்கிறது. 4 வருடங்களாக அந்த திட்டம் அப்படியே உள்ளது. ஒரு கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியின் லட்சணம்.

இதற்காகத்தான் இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று நாம் இன்றைக்கு கூடி இருக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல் வத்தல் மலையை சுற்றுலாத் தலமாக ஆக்க 2 வருடத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்கள். இது வரைக்கும் ஏதாவது நடந்திருக்கிறதா? இதுவரைக்கும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்களா? இல்லை.

அதே போல தருமபுரி மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படவேண்டும் என்று அறிவித்தார்களே தவிர இதுவரைக்கும் ஏதாவது அமைத்திருக்கிறார்களா? இல்லை.

பாலக்கோடு தொகுதியில் எண்ணேகொல் புதூர் என்ற கிராமத்திற்கு அருகில் தென்பெண்ணையாற்றின் உபரி நீரை வாய்க்கால் மூலம் தும்பலஅள்ளி அணைக்கு கொண்டு வரப்போவதாக கே.பி.அன்பழகன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்.

5 வருடம் ஆகியது. இதுவரைக்கும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவராவது அமைச்சர் உறுதிமொழி தந்தார். காப்பாற்றவில்லை என்று சொல்கிறோம்.

அமைச்சர் இல்லாமலேயே ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது கே.பி.முனுசாமி. இப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவர் அமைச்சர் இல்லை. ஆனால் அவர் அமைச்சர் போல ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதாவது பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய தூள்செட்டி ஏரி உட்பட பல ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை கால்வாய் அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் விடுவது தொடர்பாக 2016-ஆம் ஆண்டு கழக தேர்தல் அறிக்கையில் நாம் சொல்லி இருந்தோம்.

இந்த பாசன கால்வாயை தருமபுரி மாவட்டத்திற்கு இணைப்பு செய்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட மக்களும் பயன்பெறுவார்கள்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை போல பெரிய அளவில் நிச்சயமாக மக்களுக்கு பயன்பட்டு இருக்கும். ஆனால் இந்தத் திட்டத்தில் சில சச்சரவுகளை, சில தடங்கல்களை கே.பி.முனுசாமி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார் என்று இந்த பகுதி மக்கள் தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கே.பி.முனுசாமியின் எஸ்டேட் பாதிக்கப்படும் என்று அதைத் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஊரே இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை.

அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு முக்கியமாக விலைவாசி பிரச்சினை பற்றி அவசியம் சொல்லவேண்டும். இன்றைக்கு விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுது விலைவாசியைப் பொறுத்தவரை கட்டுக்குள் வைத்திருந்தோம்.

தி.மு.க ஆட்சி இருந்த போது சிலிண்டர் 150 ரூபாயாக இருந்தது. இப்பொழுது 750 ரூபாயாக உள்ளது. துவரம்பருப்பு ஒரு கிலோ 38 ரூபாயாக இருந்தது. இப்பொழுது 92 ரூபாயாக உள்ளது.

உளுத்தம்பருப்பு தி.மு.க ஆட்சி இருந்தபோது ஒரு கிலோ ரூபாய் 60. இப்பொழுது ரூபாய் 120. பாமாயில் எண்ணெய் தி.மு.க ஆட்சியில் 48 ரூபாய். இப்பொழுது 90 ரூபாய். சர்க்கரை தி.மு.க ஆட்சியில் 18 ரூபாய்க்கு கிடைத்தது. இப்பொழுது 40 ரூபாய். கடலைப்பருப்பு கழக ஆட்சியில் 34 ரூபாய்க்கு கிடைத்தது. இப்பொழுது 72 ரூபாய்.

ஆகவே விலைவாசி இந்த அளவிற்கு உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் இன்றைக்கு இந்த கிராம சபை கூட்டத்தை கூட்டி இதையெல்லாம் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி கொண்டு இருக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரைக்கும் அவர் ஏதோ படிப்படியாக வளர்ந்து முதலமைச்சர் ஆனேன் என்று ஒரு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் எப்படி ஆனார் என்பது உங்களுக்கு தெரியும்.

அவர் வளர்ந்து படிப்படியாக வரவில்லை. படிப்படியாக ஊர்ந்து வந்தார் என்பது நன்றாக தெரியும். சமூக வலைதளங்களில் நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்.

அவர் எப்படி வந்தார், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போட்டார்கள். அது கூட 1.1% வித்தியாசத்தில் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அதனால் நாம் ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது.

நாம் பெரிய எதிர்க்கட்சியாக வந்து உட்கார்ந்தோம். அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டார்கள். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு என்ன உடல்நல பாதிப்பு என்று யாருக்காவது தெரியுமா என்றால் யாருக்கும் தெரியாது.

முதலமைச்சர் ஒருவருக்கு பாதிப்பு என்றால் மக்களிடத்தில் சொல்ல வேண்டும். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதுதான் இறந்தார்கள். அண்ணா முதலமைச்சராக இருந்தபோதுதான் இறந்தார்கள்.

பேரறிஞர் அண்ணா மறைந்தபோது, 4 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர்கள் இறந்து போவதற்கு முன்னர் அப்பொழுது என்ன மருத்துவ சிகிச்சை செய்கிறார்கள்? என்ன மருந்து கொடுக்கப்படுகிறது? எந்த மருத்துவர் பார்க்கிறார்? என்ன சாப்பாடு சாப்பிடுகிறார்? எப்படி நோய் குணமாகி வருகிறது? பின்னடைவில் இருக்கிறதா? என்பதை எல்லாம் ஒரு நாளைக்கு 2 முறை அரசாங்கம் வெளியில் சொல்ல வேண்டும்.

அன்றைக்கு அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த சாதிக் பாஷா அவர்கள், வெளியே வந்து சொல்வார்கள். அதுதான் முறை. அதுதான் மரபு.

அதேபோல எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அவர் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எச்.டி.ஹண்டே அவர்கள் வெளியில் வந்து 1 மணி நேரத்திற்கு 1 முறை வெளிய வந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதுதான் முறை.

ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் கூட உண்மையைச் சொல்லவில்லை. ஒவ்வொரு மந்திரியும் வந்து, “அம்மா இட்லி சாப்பிட்டார்கள், அம்மா மோர் குடித்தார்கள், அம்மா ஜூஸ் குடித்தார்கள், அம்மா டி.வி பார்த்தார்கள்“ என்று சம்பந்தமில்லாத அமைச்சர்கள் எல்லாம் சொன்னார்கள்.

யாரையும் பார்க்க விடவில்லை. கவர்னர் வந்தார். மத்திய அமைச்சர்கள் வந்தார்கள். வெளி மாநிலத்தில் இந்த முதலமைச்சர்கள் வந்தார்கள். நானும் சென்றிருந்தேன். யாரையும் பார்க்க விடவில்லை. வாசலில் நிற்க வைத்து பேசி அனுப்பி விட்டார்கள்.

ஏனென்றால் அவ்வளவு மர்மமாக வைத்திருந்தார்கள். அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி முதலமைச்சர் கூட சொல்ல மறுத்தார்கள். திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்னார்கள்.

அதற்குப் பிறகு ஓ.பி.எஸ். முதலமைச்சராக உட்கார்ந்தார். ஓ.பி.எஸ். ஒரு 3 மாதங்களாக முதலமைச்சராக இருந்தார். அவர் மிகவும் அமைதியானவர். பொறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் சசிகலா அவர்கள் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி விட்டார்கள்.

ஏன் என்று கேட்டதற்கு, “நீங்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை பார்த்து சிரித்தாய்“. சிரித்ததற்காக பதவியை பறித்து விட்டார்கள். அதற்குப் பிறகு சசிகலா தானே முதலமைச்சர் ஆவதாக சொன்னார்கள்.

10 நாட்களில் முதலமைச்சர் ஆகலாம் என்று கவர்னர் உத்தரவு போட்டிருந்தார். 10 நாட்களில் முதலமைச்சர் ஆவதற்கு முன்னால் உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு தீர்ப்பு வருகிறது.

என்ன தீர்ப்பு? ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருட சிறை தண்டனை, 100 கோடி மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வந்தது.

அந்த அம்மையார் இறந்துவிட்டார். அவர்களுக்கு அந்த தண்டனை இல்லை. மற்ற 3 பேருக்கும் தண்டனை. 3 பேரும் சிறையில் தான் இருக்கிறார்கள். 27ஆம் தேதி வரப்போகிறார்கள் என்ற செய்தி வருகிறது.

அந்த பிரச்சினைக்குள் நான் போக விரும்பவில்லை. இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. கலைஞர் அவர்கள் அவ்வாறு வளர்க்கவில்லை. கலைஞர் அவர்கள் ஜனநாயக முறைப்படி தான் கடமையாற்ற வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பதவியை பறித்து விட்டார்கள். அப்போது அவருக்கு கோபம் வந்து, ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று, 40 நிமிடம் தியானம் செய்தார். அப்பொழுது ஆன்மாவோடு பேசினார்.

உங்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. தி.மு.க கேட்கவில்லை. நம் கூட்டணி கட்சிகள் இதை ஆரம்பிக்கவில்லை. அரசியல் கட்சிகள் இதை ஆரம்பிக்கவில்லை.

கேட்டது யார்? துணை முதலமைச்சராக இருக்கக் கூடியவர் தான் நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டார். ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நீதி விசாரணை கமிஷன் அமைத்து கிட்டத்தட்ட 4 வருடம் ஆகியது. இதுவரைக்கும் என்ன செய்தியும் இல்லை. 8 முறை ஓ.பி.எஸ். வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரைக்கும் அவர் வரவில்லை. இதுதான் இன்று இருக்கக் கூடிய நிலைமை.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தை கூட கண்டுபிடிக்க முடியாமல் மூடி மறைத்துக்கொண்டிருக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் தான் அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் இப்போது சொல்கிறேன், இன்னும் 4 மாதங்களில் தி.மு.க. தமிழ்நாட்டில் உங்கள் அன்போடு ஆதரவோடு ஆட்சிக்கு வரப்போகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், நீங்கள் சொன்ன கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம், அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பதையும் இந்த ஸ்டாலின் தான் செய்யப் போகிறோம்.

அரசியல் வேறு, எதிரி வேறு, துரோகம் வேறு, அது வேறு. ஒரு முதலமைச்சருக்கு இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை. ஆகவே தான் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அதைத்தான் செய்யப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories