முரசொலி தலையங்கம்

“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

“மண் செழிக்க... மக்கள் மகிழ...” என தலைப்பிட்டு, வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் சிறப்பை விளக்கிய முரசொலி தலையங்கம்!

“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மண் செழிக்க ... மக்கள் மகிழ... வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்ததும் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை வெளியிட உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதன் மூலமாக பல்வேறு திட்டங்கள் வேளாண்மை – உழவர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டதால் தமிழ்நாடானது வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகின்றது. இந்த திட்டங்கள் அனைத்தும் உழவர்களின் ஆலோசனைப்படி தீட்டப்பட்டவை ஆகும்.

இதுவரை வேளாண்மை நிதிநிலை அறிக்கையை 5 முறை தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் இதுவரை 28 கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் கலந்து கொண்ட உழவர்கள், அவர்களின் சங்கங்கள் சொன்ன ஆலோசனைகள்தான் திட்டங்களாகப் போடப்பட்டன.

வேளாண்மைத் துறையை நவீனமயமாக்குதல், உழவர்களின் வருமானத்தை உயர்த்துதல், வேளாண்மையில் உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரித்தல், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய இலக்குகளை தமிழ்நாடு அடைந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வேளாண் நிதிநிலை அறிக்கை மூலமாக 1,94,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 77,499 வேளாண் இயந்திரங்கள் கருவிகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி அடைந்திட ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை 707 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 61 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளார்கள். இதனால்தான் பாசனப் பரப்பு அதிகம் ஆனது. உற்பத்தியும் அதிகம் ஆனது.

6 ஆயிரத்து 48 ஏக்கர் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிர்களும், 52 ஆயிரத்து 664 ஏக்கர் தரிசு நிலங்களில் குறுகிய கால வேளாண் பயிர்களும் என மொத்தம் 58 ஆயிரத்து 712 ஏக்கர் தரிசுநிலங்கள் தற்போது சாகுபடி செய்யப்பட்டு, விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதுதான் இந்த அரசின் மகத்தான சாதனை ஆகும். 41 ஆயிரத்து 804 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளின் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி, சமன்செய்து, உழுது சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது மண்ணும் செழித்துள்ளது. மக்களும் மகிழ்ந்துள்ளார்கள்.

‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலமாக 21 லட்சம் உழவர்கள் பயனடைந்துள்ளார்கள். தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 இலட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 21 இலட்சம் பழச்செடிச் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 2,115 ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு சாகுபடிக்காக ஆழ்துளை, குழாய்க் கிணறுகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. 10,588 சிறுபாசனக் குளங்கள், வரத்துக்கால்வாய்கள், நீர்சேமிப்புக் கட்டுமானங்கள் தூர்வாரி மேம்படுத்தப் பட்டுள்ளன.

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோவையில் உருவாக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை உரிய தேதியில் ஜூன் 12 அன்று திறந்துவிடப்பட்டது. டெல்டா விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறுவைச் சிறப்புத் தொகுப்பு மூலமாக 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்.

முதன்முதலாக டெல்டா அல்லாத மாவட்டங்களில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 12.48 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதல் சாகுபடி ஆகியது.

இளையோரை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டப்படி 456 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க ஊக்குவிக்கப்பட்டது. ஆயிரம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பயிர் உற்பத்தித்திறனில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம். குறுதானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம் என்ற அளவில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு.

14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 125 உழவர் சந்தைகளில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் 30 நடமாடும் காய்கனி அங்காடிகள் செயல்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை வீதம் 37 மாவட்டங்களில் மாலை நேரங்களில் உழவர் சந்தைகளும் இயங்கி வருகின்றன.

“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணமாக,1,630 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனை 21 இலட்சம் விவசாயிகள் பெற்றுள்ளார்கள். பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், இழப்பீட்டுத் தொகையாக 5 ஆயிரத்து 720 கோடி ரூபாய் 32 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல்லுக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் ஊக்கத் தொகையையும் உயர்த்தி வழங்கி வருகிறது. 2025–26 ஆம் ஆண்டிற்கு, நெல்லுக்கு ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லாத காரணத்தால் தமிழ்நாடு அரசு குவிண்டால் ஒன்றிற்கு 2,500 ரூபாயினை விவசாயிகள் குறைந்தபட்சம் பெறும் வகையில் தற்போது சாதாரண ரகத்திற்கு 131 ரூபாயும் சன்ன இரகத்திற்கு 156 ரூபாயும் உயர்த்தி வழங்கியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.349/– சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டு ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் கரும்பு விலை மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ. 3.500/– ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

இவை அனைத்துக்கும் மேலாக, பருவம் தப்பாமல் மழை பெய்தது. தண்ணீர் பஞ்சம் இல்லை. உழவர்கள் நிலத்திலேயே இருந்தார்கள், சாலைக்கு வரவில்லை. அவர்கள் கோரிக்கை வைக்காமலேயே அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஐந்தாண்டு காலம் நல்ல காலம். இனி வரும் காலமும் அதுபோலவே அமையும்!

banner

Related Stories

Related Stories