
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பிப்.17 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதேபோல் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
அந்நிய முதலீடுகள் ஒரு நாட்டிற்குள் வரும்போது, அவை நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ள இடத்தில்தான் கணக்கில் காட்டப்படும். அந்த அலுவலகம் டெல்லி அல்லது மும்பையில் இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை, முதலீடு எங்கு வருகிறது என்பதை விட, அது எங்கு தொழிற்சாலையாக மாறிச் செயல்படுகிறது என்பதுதான் மிக முக்கியம்.
தொழில்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்வதில் எந்த மாற்றமும் இல்லை. அதிகப்படியான முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்.
எனவே, வெறும் FDI (Foreign Direct Investment) புள்ளிவிவரங்களை மட்டும் வைத்து நீங்கள் கணக்கிடக் கூடாது. இதனால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதமாக உள்ளது.முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 69 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் 26.09 சதவீதப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. ஒட்டுமொத்தமாகச் சுமார் 70 சதவீத திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.






