மு.க.ஸ்டாலின்

“கிரிமினல் கேபினெட்டால் கொரோனா காலத்திலும் குறையாத குற்றங்கள்” - அதிமுக அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்

“அ.தி.மு.க. அரசின் அமைச்சரவையை ‘கிரிமினல் கேபினெட்’ என்று நான் குற்றம்சாட்டினேன். கொரானா காலத்திலும் அத்தகைய குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிர குறையவில்லை!” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“கிரிமினல் கேபினெட்டால் கொரோனா காலத்திலும் குறையாத குற்றங்கள்” - அதிமுக அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (27-09-2020), கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று 100 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதன் முழு விவரம் பின்வருமாறு:-

“கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறக் கூடிய முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் ஆற்றல் மிகுந்த செயல்வீரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும் மாலையும் காணொலி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொண்டர்களை, நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடிக் கொண்டே இருக்கிறேன். எந்தச் சூழலிலும் நம்மால் கட்சிப் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

இதன் உச்சக்கட்டமாக 3700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவையே காணொலி மூலமாக நடத்திக் கட்சியின் பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் அதில் தேர்வு செய்தோம். பல்வேறு தீர்மானங்களை, நாட்டு மக்களின் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து, மத்திய – மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நிறைவேற்றப்பட்டன.

75-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும் இணைய சேவை மூலமாக இணைக்கப்பட்டார்கள். ஒரே இடத்தில் கூடினால் எத்தகைய சிறப்போடு பொதுக்குழு பிரமாண்டமாக நடக்குமோ; அத்தகைய பிரமாண்டத்துடன் - எழுச்சியுடன் - உணர்ச்சியுடன் - பெருமிதத்துடன் அந்தப் பொதுக்குழுவை நாம் நடத்திக் காட்டினோம். தமிழகத்தில் மட்டுமல்ல; அகில இந்திய அளவில் எந்தக் கட்சியும் இவ்வளவு பெரிய பிரமாண்டமான கூட்டத்தை காணொலி மூலமாக நடத்தியதில்லை.

திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளைப் பொறுத்தவரை கோடு போட்டுக் காட்டினாலே ரோடு போடக் கூடியவர்கள் என்பதற்கு உதாரணம் தான், கரூர் மாவட்டத்தில் நடைபெறக் கூடிய இந்த முப்பெரும் விழா. கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளரான செயல்வீரர் செந்தில் பாலாஜி அவர்கள், காணொலி மூலமாகவே முப்பெரும் விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.

530-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 50 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கக்கூடிய வகையில் மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறார். இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன். இதேபோன்ற கூட்டங்களை மற்ற மாவட்டக் கழகங்களும் நடத்துவதற்கான பாதையைக் கரூர் மாவட்டக் கழகம் தொடங்கி வைத்துள்ளது.

“கிரிமினல் கேபினெட்டால் கொரோனா காலத்திலும் குறையாத குற்றங்கள்” - அதிமுக அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்

கொரோனா காலம் என்பதால் கூட்டங்கள் நடத்த இயலாது என்பது ஒருபக்கம் இருந்தாலும் - தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி இத்தகைய கூட்டங்களை நாம் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் காலத்தில் பத்திரிகைகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். புத்தகங்களை வெளியிட்டார்கள். நாடகங்கள் மூலமாகக் கொள்கையைப் பரப்பினார்கள். சினிமாக்களில் கதை வசனங்களின் மூலமாக தங்களுடைய இலட்சியங்களை எல்லாம் மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார்கள்.

இது தொழில்நுட்ப யுகம். அதனாலதான், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் மூலமாக நமது கொள்கைகளைப் பரப்பக்கூடிய பணியை செய்துக் கொண்டு வருகிறோம். இப்போது காணொலிகள் மூலமாகவும் ஒன்றிணைந்து நாம் நமது பரப்புரையைச் செய்து வருகிறோம். நாளைக்கு வேறொரு தொழில்நுட்பம் வந்தால் அதனையும் பயன்படுத்திக் கொள்வோம்.

என்ன சொல்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர - எதன் மூலம் சொல்கிறோம் என்பது முக்கியமல்ல. எமர்ஜென்சி காலமாக இருந்தாலும் - கொரோனா காலமாக இருந்தாலும் - நமது போராட்டங்கள் நடக்கும், நமது நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கரூர் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

1980-ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தலைவர் கலைஞர் அவர்களால் தி.மு.கழகத்தின் இளைஞரணி தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது இளைஞரணிக்கான ஒரு கொள்கை முழக்கத்தை தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.

அந்த முழக்கம், இந்தக் கொரோனா காலத்திலும் பொருத்தமானது என்பதால் அதனை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்!

"நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்; எங்கள் கால்கள் நடையை நிறுத்தா!

நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்; எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தா!

நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்; எங்களுடைய உதடுகளும், நாவுகளும் பேசுவதை நிறுத்தா!

காரணம் நாங்கள் ஆழமான கொள்கைகளுக்குச் சொந்தக்காரர்கள்! நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்!

அறிஞர் அண்ணாவின் தம்பிகள்!” - என்று தலைவர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்.

எந்தச் சூழலிலும் நடப்பதை நிறுத்த மாட்டோம்; எழுதுவதை நிறுத்தமாட்டோம்; பேசுவதை நிறுத்த மாட்டோம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன கட்டளையைத் தான் இன்று ஒவ்வொரு மாவட்டக் கழகமும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது.

கழகப் பணிகளுக்காகக் கூட அல்ல; மக்களுக்கு உதவிகள் செய்வதற்குக் கூட அனுமதி தராத இரக்கமற்ற அரசாங்கமாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கொரோனா கால ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்குவதற்குக் கூட இந்த அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கும் நீதிமன்றத்துக்குப் போய்த்தான் அனுமதி வாங்கினோம்.

அதன்பிறகு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தடையில்லாமல் உதவிகளை வழங்கினோம். ஊடரங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, மற்றவர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அத்தகைய உதவியை வழங்காமல் போயிருந்தால் தமிழகம் மிகமோசமான நெருக்கடியைச் சந்தித்திருக்கும்.

இதே கரூர் மாவட்டத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு கொடுத்த குடைச்சலை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வெண்டிலேட்டர் கருவிகள் வாங்குவதற்கு ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாயை செந்தில் பாலாஜி அவர்கள் ஒதுக்கீடு செய்தார்கள். இதற்கான அனுமதிக் கடிதத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துவிட்டார்.

ஆனால், அவரது பரிந்துரையை மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டார். சட்டமன்ற உறுப்பினர் அவரது தொகுதிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று காரணமும் சொன்னார். கொரோனா போன்ற கொடிய வைரஸ் பரவி வரும் காலத்தில் மக்களுக்கு உதவி செய்யக் கூட அனுமதி மறுத்தார்கள். அப்போதே இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். போராட்டங்களும் நடந்தன.

அரவக்குறிச்சி மக்கள் அதிகமாக வந்து சேர்வது கரூர் மருத்துவமனை என்பதால் இவ்வாறு நிதியை அக்கறையுடன் ஒதுக்கி இருக்கிறார் செந்தில் பாலாஜி. இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்து கரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவை ரத்து செய்துள்ளது. "கொரோனா என்ற அசாதாரணமான, கொடிய சூழல் நிலவும் இந்த நேரத்தில் செந்தில் பாலாஜியின் பரிந்துரையை ஏற்கலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிக்கும் நிதியைப் பயன்படுத்தலாம். எனவே கரூர் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்கிறேன்" என்று தீர்ப்பு அளித்துள்ளார்கள்.

இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடி, அவர்களது அனுமதி பெற்றுத்தான் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக நாம் தயங்கப் போவதில்லை; பின்வாங்கப் போவதில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் வீட்டுக்கு விளக்காகவும் நாட்டுக்குத் தொண்டனாகவும் இருக்க வேண்டும் என்றுதான் பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது அரசியல் கட்சி அல்ல; தேர்தலில் நிற்க வேண்டும், பதவிகளை அடைய வேண்டும், அமைச்சராக வேண்டும் என்பதற்காக கழகம் தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இன உரிமை பெற்றவர்களாக, மொழி உணர்ச்சி கொண்டவர்களாக ஆக வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களும் தமிழ்நாடும் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. அதனால் தமிழர்கள் எப்போது பாதிக்கப்பட்டாலும் கழகம் துணை நின்றது.

கழகம் தோன்றிய காலத்தில் கைத்தறி நெசவாளர்கள் நெருக்கடியைத் தீர்க்க கைத்தறி துணிகளை விற்பனை செய்த இயக்கம் தி.மு.கழகம். விவசாயிகளுக்காக அவர்களோடு சேர்ந்து உழைத்த இயக்கம் தி.மு.கழகம். தொழிலாளர் உரிமைக்காக போராடிய இயக்கம் தி.மு.கழகம்.

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக சலுகைகள் பெற்றுத்தர வாதாடிய இயக்கம் தி.மு.கழகம். இப்படி ஒவ்வொரு தரப்பினர் நலனுக்காகவும் உழைத்த காலத்தில், அதிகாரத்தை அடைந்தால் அவர்களுக்கு நாமே நேரடியாக உதவிகளை, சலுகைகளை வழங்கலாம் என்ற நோக்கத்துடன் தான் கழகம் அரசியலில் குதித்தது. ‘ஆட்சியில் இருந்தால் செயல்படுத்துவது - ஆட்சியில் இல்லாவிட்டால் செய்ய வைப்பது’ - இதுதான் கழகத்தின் முழக்கமாக நேற்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.

அதனால் தான் எழுபது ஆண்டுகள் கடந்தும் கழகம் கம்பீரமாக நிற்கிறது. ஒருமுறை அல்ல; ஐந்து முறை தமிழகத்தை ஆளும் பொறுப்பை நாட்டு மக்கள் கழகத்துக்குக் கொடுத்தார்கள். அந்தப் பெருமையைக் கழகத்துக்குப் பெற்றுத்தந்த 100 முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலக் கட்டுப்பாடுகள் இருப்பதால் கரூருக்கு நேரடியாக என்னால் வர முடியவில்லை. 100 முன்னோடிகளுக்கு நான் எனது கைகளால் பொற்கிழிகளை வழங்க முடியாதது ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், நம் கரூர் மாவட்டக் கழக முன்னணியினர் நமது முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன். நீங்கள் தான் இந்த இயக்கத்தின் அடித்தளம். உங்கள் அடித்தளத்தில் தான் நாங்கள் நடந்து வருகிறோம். நீங்கள் உருவாக்கிய கொள்கைக் கோட்டையின் மீதுதான் நாங்கள் அமர்ந்துள்ளோம்.

உங்களின் வியர்வையும் - ரத்தமும் தான் இந்த இயக்கத்தை உருவாக்கியது. தான், தனது என வாழாமல் - கழகம், நமது என்ற நோக்கத்துடன் வாழ்ந்த பெருமக்கள் நீங்கள். இந்த மூத்த முன்னோடிகளையே இன்றைய இளைஞர்கள் தங்களது வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும். முன்னோடிகளைப் போற்றுதல் என்பது காலம் காலமாக தமிழ்ப்பண்பாட்டின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்று. அந்தப் பண்பாட்டின் அடையாளமாக மூத்த முன்னோடிகளை பாராட்டி இருக்கிறோம்.

எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் உழைத்தவர்களான நீங்கள் அனைவரும் எத்தகைய தியாகத்தைச் செய்திருப்பீர்கள், எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பீர்கள் என்பதை நான் அறிந்தவன் என்பதால் இங்கிருந்தபடியே உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்.

“கிரிமினல் கேபினெட்டால் கொரோனா காலத்திலும் குறையாத குற்றங்கள்” - அதிமுக அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்

நீங்கள் இன்றைய தலைமுறையை வழிகாட்டுங்கள். உற்சாகப் படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நாளைய தினம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். மண்ணைக் காப்பாற்றுவதற்கு, மக்களைக் காப்பாற்றுவதற்கு, விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு, வேளாண்மையைக் காப்பாற்றுவதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

எனக்கு முன்னால் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயச் சட்டங்களின் மிகமோசமான சூழலை எடுத்து விளக்கினார்கள். இந்தியா விவசாய நாடு; இந்தியாவே கிராமங்களில் தான் வாழ்கிறது என்று சொல்கிறோம். ஆனால் ஒரு விவசாய நாடு போடுகிற சட்டமானது விவசாயிகளுக்கு விரோதமாக, வேளாண்மையைச் சிதைப்பதாக இருக்கும் என்று யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவசர அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. ஏனென்றால், இது மிக முக்கியமான பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. மத்திய அரசு கொண்டு வரும் விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் - மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்துக்குத் தலையாட்டிய எடப்பாடி அரசைக் கண்டித்தும் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாங்கள் மட்டுமல்ல; பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் இந்தச் சட்டங்களை எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரே விலகி உள்ளார். இதை விட மிகப்பெரிய எதிர்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். தான் ஆதரிக்கிறது மட்டுமில்லாமல்; மற்றவர்களையும் ஆதரிக்கச் சொல்கிறார். “நானும் விவசாயி, நானும் விவசாயிதான்” என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர; விவசாயியாக நடந்துகொள்ளவில்லை!

விவசாயிகள் விரோதச் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா? பச்சைத் துண்டு போட்டு நடித்தவரின் பச்சைத் துரோகம் இது!

இந்தத் துரோகச் சட்டத்தை ஆதரித்ததால் தான், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுகிறார். கொரோனாவை முதலமைச்சர் பழனிசாமி கட்டுப்படுத்திவிட்டார் என்று சொல்லி இருக்கிறார். மாநில உரிமைகளுக்காக போராடாத தலையாட்டிப் பொம்மையாக பழனிசாமி இருப்பதால் தான் பிரதமர் மோடி அவரைப் பாராட்டுகிறார்.

மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியாகத் தான் இருக்கும். இதுமாதிரியான கொலை பாதக ஆட்சியை இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை; இனியும் பார்க்க முடியாது.

இதுவும் முழுமையான எண்ணிக்கை அல்ல. பரிசோதனை பண்ணாதே.... கொரோனா தொற்றை அதிக எண்ணிக்கையாகச் சொல்லாதே... மரணத்தைக் காட்டாதே... என்று முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். அதுதான் இந்த அரசாங்கத்தில் நடக்கிறது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாத நிலை ஏற்பட்ட பிறகு, கொரோனாவால் இறந்தவர்களை வேறு காரணங்களால் இறந்துவிட்டதாகக் கூறும் அடுத்த திருட்டுத் தனத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி ஓர் அரசாங்கத்தைத்தான் பிரமாதமான அரசு என்று கூறி பிரதமர் பாராட்டுகிறார்.

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று ஐந்து மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எடப்பாடி அரசு அதைச் செய்யவே இல்லை. ஊரடங்கு இருந்தால் தானே இழப்பீடு கேட்பீர்கள், இதோ ஊரடங்கையே தளர்த்திவிட்டோம் என்று சொல்லி அனைத்துக்கும் திறப்புவிழா நடத்திவிட்டார்கள்.

அனைத்தையும் திறந்து வைத்துவிட்டு, அதை ஊரடங்கு காலம் என்று சொல்வதை மாதிரிக் கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் கொரோனாவை வைத்து அடிக்கும் கொள்ளைகள் குறையவில்லை. கொரோனா கோடீஸ்வரர்கள் என்று புதிய வர்க்கமே அ.தி.மு.க. ஆட்சியில் உருவாகிவிட்டார்கள். அவர்களுக்கு மட்டும் தான் கொரோனா பயன்படுகிறது.

இந்த அமைச்சரவையை ‘கிரிமினல் கேபினெட்’ என்று நான் குற்றம் சாட்டினேன். அத்தகைய குற்றங்கள் அதிகம் ஆகியிருக்கிறதே தவிரக் குறையவில்லை. இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது 3500 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம், இந்தப் புகாரை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று உத்தரவு போட்டது.

நேர்மையானவராக இருந்தால், யோக்கியராக இருந்தால், தனது கையில் கறைபடாதவராக இருந்தால் பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்?; புகாரை எதிர்கொண்டிருக்க வேண்டும். எந்த விசாரணைக்கும் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் மட்டும் தான் பழனிசாமி பதவியில் இருக்கிறார். வெளியில் இருக்கிறார். உச்சநீதிமன்றம் அந்தத் தடையை நீக்கினால் சி.பி.ஐ. வழக்கை பழனிசாமி எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் மகா யோக்கியரைப் போல ஊர் ஊராக போய்க்கொண்டு இருக்கிறார்.

கொடநாடு ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த படுகொலைகள் - அதையொட்டி நடந்த தற்கொலை - அதைத் தொடர்ந்து நடந்த விபத்துகள் - மர்ம மரணங்கள் ஆகியவை குறித்து இதுவரை பொதுவெளியில் முறையான விளக்கம் அவரால் சொல்லப்பட்டதா? அவரை பகிரங்கமாக பத்திரிகையாளர் மாத்யூ குற்றம் சாட்டினாரே? பதவியில் இருக்கும்போதே மர்மமான காரியங்கள் கொண்ட குற்றச்சாட்டுகள் வந்ததே? இதுதான் முதலமைச்சர் பதவிக்கு அழகா?

துணை முதலமைச்சர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தி.மு.க. சார்பில் தரப்பட்டது. அவர்கள் அதனை எடுத்து முறையான விசாரணை செய்யவே இல்லை. அதன்பிறகு நீதிமன்றம் போனோம். நீதிமன்றம் இதன்மீது விசாரணை நடத்துங்கள் என்று உத்தரவு போட்டார்கள். ஆனால் விசாரணையை முடக்கி வைத்துள்ளார்கள்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான புகார்களை வரிசைப்படுத்தினால் அரைமணி நேரம் ஆகும். அதனால் தான் அவரை நான் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று சொல்லாமல் ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வேன். இந்த அமைச்சரவையில் அதிகம் சம்பாதித்த அமைச்சர்களில் முதலிடம் அவருக்குத் தான்.

பல்வேறு பினாமிகளின் மூலமாக டெண்டர்களை அவரே எடுத்து அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டு இருக்கிறார். நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு என்று தங்கமணி மீது புகார் கொடுத்து இருக்கிறோம். கொரோனாவை வைத்து ஊழல் செய்ய முடியும் என்பதை இந்தியாவுக்குக் காட்டியவர் அமைச்சர் விஜயபாஸ்கர். மருந்துகள் வாங்கியதில் ஊழல், கிட்ஸ் வாங்கியதில் ஊழல், தூய்மைப் பொருள்கள் வாங்கியதில் ஊழல் என்று மொத்தமும் ஊழல் மயம்.

இன்னும் ஆறு மாதம் கூட கொரோனா நீடித்தால் சந்தோஷப்படும் மனிதராக ஒருவரைச் சொல்லவேண்டுமானால் அது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கராகத் தான் இருப்பார்.

குட்கா வியாபாரிகளிடம் கமிஷன் வாங்கியதால் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியவர் அவர். விசாரணையில் இருப்பவர் அவர். ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாயைப் பட்டுவாடா செய்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள் மீது புகார்கள் இருக்கிறது. இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் கொடுத்த புகார்களே மலையளவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையிலும் டெல்லி சி.பி.ஐ-யிலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட கேபினெட்டை ‘கிரிமினல் கேபினெட்’ என்று சொல்லாமல் என்ன சொல்வது? இந்த கிரிமினல் கேபினெட்டை, கோட்டையை விட்டு துரத்தி சிறையில் வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்!

இந்த ஆட்சியில் மொத்த மக்களும் நிம்மதியாக இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நெசவாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தொழிலாளிகள் வேலைகளை இழக்கிறார்கள். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. சிறு, குறு தொழில்கள் மொத்தமாக நசிந்துவிட்டன. மத்திய தர வர்க்கம் விரக்தியாகி விட்டது. தொழில் அதிபர்களுக்கும் தொழில் முன்னேற்றம் இல்லை. விலைவாசி அதிகமாகி விட்டது. எல்லாக் கட்டணங்களும் உயர்ந்துவிட்டது. சலுகைகள், மானியங்களை துண்டித்துவிட்டார்கள். பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துவிட்டது. மத்திய அரசு எல்லா வகையிலும் மக்களுக்கு சலுகைகளை தருவது இல்லை. மத்திய அரசுக்கு மக்களைப் பற்றி அக்கறையே இல்லை. மொத்தத்தில் அவர்கள், அவர்களுக்காக ஆண்டு கொள்கிறார்கள். அவர்கள், மக்களுக்காக ஆளவில்லை!

மக்களுக்காக, மக்களைப் பற்றி கவலைப்படக் கூடிய, மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய, மக்களது எதிர்பார்ப்பை செய்து கொடுக்கக் கூடிய ஒரே ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். அதனை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாம் அதற்கான பணிகளைத் தொடங்குவோம்.

கொரோனாவை விடக் கொடிய ஊழல் வைரஸ் கூட்டத்தை இந்தக் கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும்!

தந்தை பெரியாரின் சமூகநீதி ஆட்சியை அமைப்போம்!

பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி ஆட்சியை அமைப்போம்!

முத்தமிழறிஞர் கலைஞரின் நவீனத் தமிழகத்தை உருவாக்குவோம்!

அதற்கு கரூர் முப்பெரும் விழாவில் சபதம் எடுப்போம். நன்றி வணக்கம்!” இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories