
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நிதி உதவி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (UAPA/NDPS) கீழ் கைதாகி, ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்த ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அப்போது, UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமீன் என்பதே விதியாகவும், சிறை என்பது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். வழக்கின் தன்மையைப் பொறுத்து ஜாமீன் மறுக்கப்படலாமே தவிர, உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்காக மட்டுமே ஒருவருக்கு ஜாமீனை மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதனை விசாரணை நீதிமன்றங்களும், உயர் நீதிமன்றங்களும் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. மேலும், "அகில இந்திய அளவில் உபா சட்ட வழக்குகளில் 2% முதல் 6% வரை மட்டுமே தண்டனைகள் வழங்கப்படுகின்றன; அதாவது 94% முதல் 98% பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் இந்தத் தண்டனை விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே (0.89%) உள்ளது; அதாவது 99% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் நிலைதான் உள்ளது" என்று உச்ச நீதிமன்றம் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டியது.
மனுதாரருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் ஏழு நாட்களுக்குள் NIA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன், கடவுச்சீட்டை Passport ஒப்படைக்க வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளையும் விதித்தது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜால் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அப்போது, டெல்லி கலவர சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வின் குல்ஃபிஷா ஃபாத்திமா வழக்கு தீர்ப்பு குறித்து தங்களின் சட்ட ரீதியான ஐயங்களையும், கடுமையான விமர்சனங்களையும் இந்த அமர்வு பதிவு செய்தது.






