இந்தியா

பஞ்சாப்பில் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க!

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியையும் பா.ஜ.க. உடைத்துள்ளது.

பஞ்சாப்பில் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தது பா.ஜ.க. அதன்படி, சிவசேனா கட்சியிலிருந்து மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்களை வெளிவர செய்து அவரை முதலமைச்சர் ஆக்கியது. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை இழந்தார்.

இதேபோன்று, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் இரண்டாக பிளந்த பா.ஜ.க., அஜித்பவாரை துணை முதலமைச்சராக்கியது. அந்த வழியில் தற்போது டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியையும் பா.ஜ.க. உடைத்துள்ளது.

ஆம் ஆத்மியின் இளம் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவை முதலில் வளைத்து போட்ட பா.ஜ.க. தற்போது, அந்த கட்சியின் 10 மாநிலங்களவை எம்.பிக்களில் 7 பேரை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. இவர்களில் ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சக்னி, சுவாதி மாலிவால் ஆகிய 4 எம்.பிக்கள் விரைவில் பா.ஜ.க.வில் சேர உள்ளனர்.

பா.ஜ.க.வில் இணைந்துள்ள ஆம் ஆத்மி எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு மாநிலங்களவை தலைவருக்கு அக்கட்சி சார்பில் கடிதம் எழுதப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி எம்.பிக்களை விலைக்கு வாங்கியுள்ளதன் மூலம், பஞ்சாப் மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் இழைத்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடம் பயன்படுத்தப்பட்ட அதே வாஷிங்மெஷின் பஞ்சாப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த மான் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மக்கள் இந்த ஏழு எம்.பிக்களின் பெயரை நினைவில் வைத்து கொள்ளவேண்டும், அவர்களை பஞ்சாப் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று கூறினார். டெல்லியை தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்த மாநிலமான பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் 7 எம்.பிக்களை விலைக்கு வாங்கியுள்ளதன் மூலம் பஞ்சாப்பிலும் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. சதிதிட்டத்தீட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories