இந்தியா

“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டில் கரீப் பருவ நெல் கொள்முதல் இலக்கினை 23.50 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 47.50 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” :  பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மிகப்பெரிய உயர்வை எட்டியுள்ளது. புதிய சாதனை அளவைப் படைத்துள்ள இந்த சூழ்நிலையில், கரீப் பருவ கொள்முதல் அளவிற்கான இலக்கினை உயர்த்திடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (14.3.2026) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாடு ஒரு முக்கிய நெல் உற்பத்தி மாநிலம் என்றும், 2025-2026 ஆம் ஆண்டின் கரீப் பருவத்தில் 20.50 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை பாசனத்திற்காக உரிய நேரத்தில் திறக்கப்பட்டதுடன், சாதகமான தட்பவெப்ப நிலைகள் காரணமாக அதிக பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டதாலும்;

மேம்படுத்தப்பட்ட பயிர் மேலாண்மை முறைகள், சிறந்த பாசன கட்டமைப்பு வசதி மற்றும் விவசாயிகள் அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை பயிரிட்டது ஆகிய காரணிகளால், மாநிலத்தின் நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையை அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனை முன்னறிந்து தான் 17.11.2025 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், அரிசி கொள்முதல் இலக்கை 16.00 இலட்சம் மெட்ரிக் டன்களிலிருந்து (LMTs), பருவ இறுதியில் கொள்முதல் செய்யப்படும் அளவிற்கேற்ப திருத்தி அமைக்குமாறு கோரியிருந்ததையும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடப்புப் பருவத்தில், 12.03.2026 தேதி நிலவரப்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும் (TNCSC), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் (NCCF) இணைந்து 36.63 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்துள்ளன என்றும், இது, 2024-2025 ஆம் ஆண்டு KMS பருவத்தின் இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 24.17 இலட்சம் மெட்ரிக் டன்னோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” :  பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

நடப்புப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 36.63 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லிலிருந்து, சுமார் 24.91 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி அரவை செய்யப்படும் என தெரிவித்து, ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 16 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் இலக்கானது தற்போதைய கொள்முதல் அளவின்படி ஏற்கனவே அடையப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நெல் கொள்முதல் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 50,000 மெட்ரிக் டன் என்ற விகிதத்தில் தொடர்ந்து இருந்து வருவதால் எதிர்வரும் நாட்களிலும் இதேநிலை நீடிக்கலாம் என்றும், மொத்த நெல் கொள்முதல் அளவு 47.50 இலட்சம் மெட்ரிக் டன்னை எட்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, சுமார் 32.00 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி அரவை செய்யப்பட்டு, பெறப்படும் நிலை ஏற்படும் என்றும் தனது முந்தைய கடிதத்தில் தான் ஏற்கனவே கோரியிருந்தவாறு, கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்குவதை உறுதி செய்யவும்;

கரீப் பருவத்தில் 2025–2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16.00 இலட்சம் மெட்ரிக் டன்களிலிருந்து 32.00 இலட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றியமைத்திடத் தேவையான உத்தரவுகளை வழங்குமாறு இந்தியப் பிரதமர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories