எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றிய அரசு, ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. மேலும் தங்களது இந்துத்துவ கொள்கையை இவர்களை கொண்டு திணித்து வருகிறது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலத்தை கடத்தி அரசு நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை போதித்து வருகிறார்கள்.
தற்போது, கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், காவிக் கொடி ஏந்திய பாரத மாதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொண்டு வந்துள்ளார். இதற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளுநரின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிராக சட்டரீதியாக போராட ஆலோசனை நடத்தி வருகிறது கேரள அரசு. இந்நிலையில் ஆளுநருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரம் என்ன என்பது குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள சிவன்குட்டி, ”அரசியலமைப்பின் கீழ் மாநில ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்கள், கடமைகள் குறித்து உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன என்பதை விளக்கும் பாடங்கள் திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் இடம்பெற உள்ளது.
உயர்நிலை பள்ளி புத்தகங்களில் வரவிருக்கும் மாற்றங்களின் ஒரு பகுதியாக இருக்கும். பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.பிறகு 11, 12ஆம் வகுப்புகளிலும் கொண்டு வரப்படும்” என தெரிவித்துள்ளார்.