இந்தியா

மண்டல் கமிஷனால் ஏற்பட்ட நன்மைகளை சீர்க்குலைக்கும் இந்துத்துவம்? - கட்டுரை வெளியிட்ட லண்டன் பேராசிரியர்!

பட்டியலின, பழங்குடியின உறுப்பினர்களை நீக்கிவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில், இந்தி பேசும் மாநிலங்களில், பா.ஜ.க. வாய்ப்பளித்த பொதுப்பிரிவு வேட்பாளர்களில் 62% பேர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள்.

மண்டல் கமிஷனால் ஏற்பட்ட நன்மைகளை சீர்க்குலைக்கும் இந்துத்துவம்? - கட்டுரை வெளியிட்ட லண்டன் பேராசிரியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘இந்துத்துவம் - மண்டல் ஆணையத்தால் ஏற்பட்ட நன்மைகளை சீர்குலைக்குமா?’ என்கிற பொருளில், THE RETURN OF UPPER CASTE POLITICS என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் (10.02.2021) ஆங்கில நாளேட்டில், இலண்டன் கிங்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜாபர்லோ கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் லண்டன் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜாபர்லோ எழுதியுள்ள கட்டுரை வருமாறு:-

இந்து தேசியவாதம் என்பது பொதுவாக ஓர் இன-சமயவாத இயக்கமாக வரையறுக்கப்படுகிறது. ஆனால், அதன் கடைசிக்கட்ட விரிவாக்கம் என்பது முதன்மையாக மண்டல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதற்கான எதிர்வினையே என்கிற வகையில், அடையாளக் குறிப்பான்களுடன் (IDENTITY MARKERS) அதற்கு எந்த அளவுக்குத் தொடர்புள்ளதோ அதே அளவுக்கு சமூகக் காரணிகளுடனும் அதற்குத் தொடர்பிருக்கக்கூடும். மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அன்றைய பிரதமர் வி.பி. சிங் நடைமுறைப்படுத்தியதுமே, ஆர்கனைசர் (ஆர்.எஸ்.எஸ் இதழ்), "எதிர் நோக்கியிருக்கும் சூத்திரப் புரட்சியால் நிகழும் எந்த விளைவையும் எதிர்கொள்வதற்கான தரும மற்றும் ஆன்மப் படைகளைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசரத் தேவை" குறித்து எழுதியது. மண்டலின் இரண்டாம் கட்டம் நிகழ்ந்த போதோ, அதே செய்தித்தாள் "தகுதிக்கான (MERIT) கடைசி அரணையும் தகர்ப்பதிலே காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விடாப்பிடியாக இருக்கிறது" என்று எழுதியது.

இந்து-தேசிய சித்தாந்தம்!

2004-லும் மீண்டும் 2009-லும் பா.ஜ.க. தோற்றதும், அதனை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கும்; இந்து தேசிய சித்தாந்தம் மற்றும் அதன் அடித்தளத்தின் நலன்களுக்கு எதிரான கொள்கைகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்குமான உத்தியைத் தீட்டுவது மிக அவசரமானது. குஜராத்தில் நரேந்திர மோடி தொடங்கியிருந்த தேசிய-பெருந்திரள்வாதம் (NATIONAL POPULISM) அதற்கு மிகச்சரியான மாற்றீடானது. அச்சுறுத்துலாக விளங்கும் பிறருக்கு எதிராக இந்துக்களின் இருப்புக்கான பாதுகாப்பு என்ற பெயரில் சாதியத் தடைகளைக் கடக்கவும்; இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளைக் கவரவும் அதனால் இயன்றது.

இது மதப்பிரிவினையால் மட்டுமல்லாது, அதுவரை உயர்சாதியினரோடு அடையாளப்படுத்தப்பட்டு வந்த பா.ஜ.க.வின் சூத்திரக் கலப்பாலும் நிகழ்ந்தது. மோடியே பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து வந்தவர் ஆதலால், தான் டீ விற்றவன் என்ற கதையாடலை வளர்க்கவும், ஆங்கிலம் பேசும் தில்லி அதிகாரப்பீடத்தால் பாதிப்புக்குள்ளானவன் என்பது போலக்காட்டவும் அவர் செய்தார். பின்னது, பல பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இருந்த ஓர் உணர்வாகும்.

மண்டல் கமிஷனால் ஏற்பட்ட நன்மைகளை சீர்க்குலைக்கும் இந்துத்துவம்? - கட்டுரை வெளியிட்ட லண்டன் பேராசிரியர்!

நடுத்தர வகுப்பினரின் ஆற்றாமையை அறுவடை செய்த மோடி!

ஏனெனில், அவர்களில் பலரும் மண்டல் பரிந்துரைகள் அமலானதும் மேலெழத் தொடங்கியிருந்தார்கள் என்றாலும், நடுத்தர வகுப்பினராக முடியவில்லை. அவர்களின் ஆற்றாமையை மோடியால் அறுவடை செய்து கொள்ள முடிந்தது. வேலைவாய்ப்புகளை உருவாக்க ‘குஜராத் மாதிரி’யைப் பயன்படுத்துவேன் என அவர் உறுதியளித்தது இதனை மேலும் எளிதாக்கியது. பா.ஜ.க.வுக்கு ஏற்கனவே நகர்ப்புற மற்றும் உயர் சாதி நடுத்தர வகுப்பினரின் ஆதரவு இருந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை மோடி கூடுதலாகக் கொண்டு வந்து சேர்த்தார். 2009-இல் 22% ஆக இருந்த பா.ஜ.க.வை ஆதரிக்கும் இதர பிற்படுத்தப் பட்டோரின் அளவானது, 2014-இல் 34% ஆகவும், 2019-இல் 44% ஆகவும் எகிறியது. இது மோடியின் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததை விளக்கும். அதே வேளையில், அதற்குத் தொடர்புடைய; ஆனால் நேரெதிராக, உயர் சாதி அரசியல்வாதிகளின் மீள் வருகையையும் விளக்குகின்றது.

இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து, 2014 மற்றும் 2019-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45% பேர் உயர்சாதிகளைச் சேர்ந்தவர் ஆவர். உயர் சாதியினரின் இந்த அதீதப் பிரதிநிதித்துவத்தை பா.ஜ.க. போட்டியிட வாய்ப்பளிப்பதில் காண முடிந்தது. பட்டியலின மற்றும் பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில், இந்தி பேசும் மாநிலங்களில், பா.ஜ.க. வாய்ப்பளித்த பொதுப்பிரிவு வேட்பாளர்களில் 62% பேர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இதில் பிற அனைத்துக் கட்சிகளின் ஒன்றிணைந்த கணக்கு 37% ஆகும். 2019-இல் மோடி அமைத்த அரசில், 55 அமைச்சர்களில் 47% பேர் உயர் சாதியினர், 13% பேர் ஆதிக்க சாதியினர் (ஜாட்கள், படேல்கள் மற்றும் ரெட்டிகள் உட்பட), 20% பேர் இதர பிற்படுத்தப்பட்டோர், 11% பேர் பட்டியலினத்தவர், 7% பேர் பழங்குடியினத்தவர். இவை போக ஒரு இசுலாமியர் மற்றும் ஒரு சீக்கியர்.

பொதுத்துறையின் அழிவு!

இதற்கிணையாக, இட ஒதுக்கீட்டு முறையையும் மோடி அரசு மாற்றியமைத்துவிட்டது. முதலாக, பொதுத்துறையின் அழிவு பட்டியலினத்தவருக்கென ஒதுக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதில் வந்து முடிந்தது. அதே நேரத்தில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேர்ந்தெடுக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை 2014 மற்றும் 2018க்கு இடையில் 40% வீழ்ந்து 1,236இல் இருந்து 759 ஆனது. இரண்டாவதாக, இந்திய நிர்வாகத்துறையில் நேரடி நியமனத்தை (LATERAL ENTRY) ஏற்படுத்தியது, இட ஒதுக்கீட்டு அமைப்பை நீர்த்துப்போகச் செய்தது. மூன்றாவதாக, 2019-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) 10% இட ஒதுக்கீடு என்பது பின் தங்கிய நிலைக்கான வரையறையை மாற்றியமைத்ததுடன் அவ்வொதுக்கீடு பெரிதாக நலிவடையாத உயர் சாதியினருக்கே சேரும்படியும் செய்துவிட்டது. (EWS பிரிவில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருமான வரம்பாக ஆண்டுக்கு 8 இலட்சத்தை நிர்ணயித்ததன் வழியாக 95% உயர் சாதியினரை இப்பிரிவில் இட ஒதுக்கீடு பெறுவதற்குத் தகுதியானவர்களாக வழிவகுத்தது).

மண்டல் கமிஷனால் ஏற்பட்ட நன்மைகளை சீர்க்குலைக்கும் இந்துத்துவம்? - கட்டுரை வெளியிட்ட லண்டன் பேராசிரியர்!

அசுத்தம் என்ற கருத்தாக்கம்!

மேலும், உயர் சாதியினரின் ஒழுக்க மேன்மையை பா.ஜ.க. தலைவர்கள் பொதுவில் புகழ்ந்துரைக்கத் தொடங்கிவிட்டனர். எடுத்துக்காட்டாக, மக்களவைத் தலைவரும் இராஜஸ்தானில் இருந்து தேர்வானவருமான பா.ஜ.க.வின் ஓம் பிர்லா, "மற்ற எல்லாச் சமூகங்களுக்கும் வழிகாட்டும் வகையில் பிராமண சமூகம் எப்போதும் செயல்படுகிறது. ஆகவே, பிராமணர்கள் தங்கள் பிறப்பின் காரணமாகச் சமூகத்தில் உயர்ந்த மதிப்புடன் போற்றப்படுபவர்களாக உள்ளனர்" என்றார். ‘அசுத்தம்’ என்னும் கருத்தாக்கத்தின் மேல் தங்களுக்கு உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலான சாதி அடிப்படையிலான சடங்குகளிலும் பாஜக தலைவர்கள் ஈடுபட்டனர்.

யோகி ஆதித்தியநாத் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முன்பு அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தங்கியிருந்த முதலமைச்சருக்கான பெரிய இல்லத்தில் விரிவான சுத்திகரிப்புச் சடங்குகளுக்கு இந்துப் பூசாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சங் பரிவாரமானது இந்து உயர் சாதியினரின் ஒழுக்க மதிப்பீட்டு அமைப்பினையும் திணிக்க முயன்றது. ‘லவ்ஜிகாத்’துக்கு எதிராக ஏவப்பட்ட பாதுகாப்புப் பரப்புரைகள் இசுலாமியரைக் குறிவைத்த அதே வேளையில், உடனிகழ்வாகத் தாழ்த்தப்பட்ட சாதிகளும் அவற்றுக்கு இரையாகினர்.

தலித்துகளை தாக்கிய பசு பாதுகாவலர்கள்!

இது புதிதன்று. இருபதாண்டுகளுக்கு முன்பே, பாபுபஜ்ரங்கி என்னும் ஆமதாபாத்தைச் சேர்ந்த பஜ்ரங் தள் தலைவர், இசுலாமியர் அல்லது தலித் ஆண்களுடன் போகும் படேல் சமூகத்துப் பெண்களை "மீட்டு" தமது சமூகத்துக்குள்ளேயே ஒருவரை மணஞ்செய்து கொள்வதையும் உறுதி செய்தார். வரு நிகழ்வாக, 2014-இல், "இந்துக்களாக மாற விரும்பும் இசுலாமியர்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கென தனி சாதிப்பிரிவை உருவாக்குவோம்" என ஆதித்தியநாத் அறிவித்தார். சமுதாயக் கட்டுமானத்தில் சாதி வகிக்கும் பங்கைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. இதேபோல, தோல் வேலை செய்யும் தலித்துகளையும் "பசுப் பாதுகாவலர்கள்" தாக்கினர். 2016-இல், உனாவில் (மீண்டும் குஜராத்), தலித் தோல் பணியாளர்கள் பசுவைப்படுகொலை செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கையில், இந்துப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்டனர்.

சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செயலாற்றும் இத்தகைய குழுக்கள், பிற மதங்களுக்கு மாறும் தலித்துகள் மீதும் இதே போலத் தாக்குதல் நடத்தினர். கர் வாபசி (வீடு திரும்புதல்) இயக்கத்தாலும் தலித்துகள் பாதிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக 2018-இல், உ.பி.யில் இசுலாமியராக மதமாறிய ஓர் தலித் இளைஞரை பஜ்ரங் தள் செயற்பாட்டாளர்கள் மீண்டும் பழைய மதத்துக்கே மாற்றிவிட்டனர். இவ்வாறு சட்டத்தைக் கையிலெடுப்பதென்பது முன்பிருந்தே நடப்பதுதான். புதியது என்னவெனில், மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதும் இறைச்சிக் கொட்டில்களை முறைப்படுத்துவதுமாகும். இதனால் மீண்டும் தலித்துகளே பாதிக்கப்படுகின்றனர்.

லவ் ஜிகாத்துக்கு எதிரான அவசரச் சட்டம்!

2003-இல் இருந்தே குஜராத்தில், புத்த மதத்துக்கு மாற விரும்புவோர் மாவட்டக் குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள லவ் ஜிகாதுக்கு எதிரான அவசரச்சட்டமும் இது போன்ற சிக்கலை விளைவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், அரசின் ஒருபாற்கோடல் அதன் சட்டங்களிலும், அவசரச் சட்டங்களிலும் மட்டுமல்லாது காவல்துறையின் நடத்தையிலும் வெளிப்படுகிறது. இப்படி மலர்ச்சியை, ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று அழைக்கப்படுவோருக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் தலித்துகள் எவ்வாறு தனித்து நடத்தப்படுகின்றனர் என்பதில் இருந்து காட்டலாம்.

பீமா-கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரது வீட்டினைச் சோதனையிடுகையில், "உன் வீட்டில் பூலே, அம்பேத்கர் படங்கள் இருக்க, கடவுளர் படங்கள் ஏன் இல்லை?" என்று காவல்துறை வினவியதாம். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் மகளிடம், "உன் கணவர் ஒரு தலித்தாதலால் அவர் எந்த மரபையும் பின்பற்றுவதில்லை. ஆனால் நீ ஒரு பிராமணர். அப்படியிருக்க நீ ஏன் அணி கலன்களையோ குங்குமத்தையோ அணியாமல் இருக்கிறாய்? ஒரு மரபான மனைவியைப் போல் நீ ஏன் ஆடை உடுத்தியிருக்கவில்லை?"" என்று கேட்டார்களாம்.

ஆகவே, பா.ஜ.க.வின் எழுச்சியென்பது உயர் சாதி அரசியல் மற்றும் கொள்கைகளின் மீள்வருகைக்கு வழிவகுத்துள்ள மண்டலுக்குப் பிந்தைய எதிர்-புரட்சியை விளைவிப்பதோடு, சில உயர் சாதிய ஆசார நடத்தைகள் மற்றும் பண்புகள், அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் ஊக்குவிக்கப்படுவதிலும் சென்று முடியலாம். சமூக ஒழுங்கை வலியுறுத்தும் அதே அளவு அரசியல் அதிகாரத்தையும் அடிப்படையாய்க் கொண்ட இந்தப் புதிய ஆட்சி முறை வெளிக்காட்டும் கட்டுப்பாட்டுப் பாணியானது ஆர்.எஸ்.எஸ்-இன் மரபோடு மிகவும் ஒத்துப்போவதாக உள்ளது.

banner

Related Stories

Related Stories