
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும்,தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை :-
இன்று இளைஞர் அணியின் தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மிகுந்த எழுச்சியோடும் உற்சாகத்தோடும் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்தினோம். ஒரு இயக்கத்தில் இருக்கின்ற ஓர் அணியின் நிர்வாகிகள் சந்திப்பை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த முடியுமா என்று அந்தத் திருவண்ணாமலை சந்திப்பைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்த்தது.
இன்று அந்தச் சந்திப்பையே மிஞ்சும் வகையில், விருதுநகரில் தெற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை நாம் நடத்திக் காட்டியிருக்கிறோம். இங்கிருக்கின்ற நிர்வாகிகள் உங்களின் எழுச்சியையும் மகிழ்ச்சியையும் பார்க்கும்பொழுது, இது வெறும் நிர்வாகிகள் சந்திப்பா அல்லது வரவிருக்கின்ற தேர்தலின் வெற்றி மாநாடா என்று சொல்லும் அளவிற்கு மிகுந்த எழுச்சியோடு நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.
பாசத்திற்கும் வீரத்திற்கும் பெயர் பெற்ற தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலிருந்து, 58 தொகுதிகளிலிருந்து ஒரு லட்சம் நிர்வாகிகள் வருகை தந்திருக்கிறீர்கள். வருகை தந்துள்ள அந்த ஒரு லட்சம் இளைஞர் படையை, நிர்வாகிகளை, உங்களுடைய சகோதரனாக, உங்களுடன் இணைந்து பணியாற்றுபவனாக வருக வருக என வரவேற்கிறேன்.
இப்படித் தொடர்ந்து நிர்வாகிகள் சந்திப்பை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய கழகத் தலைவர் அவர்களுக்கும், தலைமைக் கழகத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிர்வாகிகள் சந்திப்பு இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு இரண்டு பேர் மிக முக்கியக் காரணம். ஒருவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டா வழங்குபவர், இன்னொருவர் தமிழ்நாட்டு மக்களுக்கே நிதியை வழங்குபவர். அவர்கள் இருவருக்கும் நன்றி.
இந்தச் சந்திப்பிற்கான பணிகளை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் என் நன்றி. அதேபோல இளைஞர் அணி நிர்வாகிகளையெல்லாம் ஒருங்கிணைத்து அழைத்து வந்திருக்கின்ற மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதுநகர் மாவட்டம் சாதாரண மாவட்டம் கிடையாது. ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்களைத் தந்த மண் இந்த விருதுநகர் மண். எளிமையின் சிகரம் பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும் என்று போராடிய மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனார், திராவிட இயக்கக் கொள்கைகளைச் சமரசமில்லாமல் மக்களிடம் கொண்டு சேர்த்த வாலிப பெரியார் ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கலைஞரின் தென்னகத் தளபதி ஐயா வே.தங்கப்பாண்டியன் - இப்படி கழகத்திற்காக உழைத்த ஏராளமான செயல்வீரர்களைக் கொடுத்த மாவட்டம் இந்த விருதுநகர் மாவட்டம்.
மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஐயா தங்கப்பாண்டியன் அவர்களுக்கும் எங்களுடைய இளைஞர் அணிக்கும் மிக நெருங்கிய ஒரு தொடர்பும் பிணைப்பும் உண்டு. நம்முடைய கழகத் தலைவர் இளைஞர் அணியின் செயலாளராக இருந்த பொழுது, இளைஞர் அணியை உற்சாகப்படுத்த வேண்டும், அதிக வேலை வாங்க வேண்டும் என்று இளைஞர் அணியை வளர்ப்பதற்குத் துணையாக நின்று, எப்போதும் இளைஞர் அணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் ஐயா தங்கப்பாண்டியன் அவர்கள். அதனால் கலைஞர் அவர்கள் ஐயா தங்கப்பாண்டியன் அவர்களை அடிக்கடி, "என்ன தங்கப்பாண்டியன், நீ கலைஞர் அணியா அல்லது இளைஞர் அணியா?" என்று கேட்பதுண்டு. அப்படிப்பட்ட தங்கப்பாண்டியன் அவர்களின் வழியில், அவரின் மகன், கொள்கை வாரிசு அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களும் இன்று எங்களுடைய இளைஞர் அணிக்குப் பக்கபலமாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியிருக்கிறார். ஆகவே, அந்தப் பெருமையோடும் உணர்வோடும் இந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
இந்தியாவிலேயே ஒரு கட்சியின் இளைஞர் அணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளும் 50 லட்சம் உறுப்பினர்களும் கொண்ட ஒரே இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெருமை நம்முடைய இயக்கத்திற்கு மட்டுமே உண்டு.
இங்கே அண்ணன் திருச்சி சிவா அவர்கள் பேசும்பொழுது இளைஞர் அணியை ராணுவத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். ஒரு ராணுவத்திற்கு இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். ஒன்று கட்டமைப்பு வலிமை, அதாவது அடிப்படை நிர்வாக ரீதியான கட்டமைப்பு பலம். இரண்டாவது கட்டுப்பாடு. தங்களுடைய தலைவர் என்ன சொல்கிறாரோ அதைக் கட்டளையாக ஏற்று, கட்டுப்பாட்டோடு களத்தில் இறங்கிச் செய்து காட்டுவது. கழகத்தின் இளைஞர் அணிக்கும் இவை இரண்டுமே மிக முக்கியமான பலம்.
மாநிலம், மாவட்டம், ஒன்றியம் முதல் வாக்குச்சாவடி வரை இன்று நிர்வாகிகள் கொண்ட ஒரு வலுவான அமைப்புப் பலம் நம்முடைய இளைஞர் அணிக்கு உண்டு. அதேபோலக் கழகத் தலைவர் அவர்கள் சொல்கின்ற எந்தவொரு செயலையும் உடனடியாகக் களத்தில் இறங்கிச் செய்து முடிக்கின்ற சாமர்த்தியமும் நம்முடைய இளைஞர் அணிக்கு உண்டு.
உதாரணத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் நீர்நிலைகளைத் தூர்வாருவது, 'பொய்ப்பெட்டி' நிகழ்ச்சி மூலம் கழகத்திற்கு எதிரான அவதூறுகளுக்குப் பதிலளிப்பது. சிறுபான்மையினர் நலன் காக்க சி.ஏ.ஏ, என்.ஆர்.சி சட்டங்களை எதிர்த்தது. கொரோனா காலத்தில் மக்களுக்காக உதவி எண்கள் தொடங்கியது. மாணவர்களின் கல்வி உரிமை காக்க நீட் ஒழிப்பு உண்ணாவிரதம். தொகுதிதோறும் கலைஞர் நூலகங்கள். தொகுதிதோறும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள். 200-க்கும் அதிகமான இளம் பேச்சாளர்கள் தேர்வு. வாசிப்பை மேம்படுத்த முத்தமிழறிஞர் பதிப்பகம். கழக வரலாற்றை எடுத்துச் சொல்ல முரசொலியில் பாசறைப் பக்கம். கொள்கை உணர்வை ஊட்ட அறிவுத் திருவிழா.
இப்படி கழகப் பணி, மக்கள் பணி எனப் பல்வேறு முன்னெடுப்புகளை நம்முடைய இளைஞர் அணி செய்து, இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறது.
ஆனால் எந்த அமைப்பு பலமும் இல்லாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், கொள்கை என்றால் என்ன, லட்சியம் என்றால் என்ன என்று எதுவுமே தெரியாமல் வெற்றுக் கூச்சல் போடுகின்ற ஒரு கூட்டம் இன்று தமிழ்நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவிதப் பயனும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களால் அவர்களுக்கே எந்தப் பயனும் இல்லை. இதைத் தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.
இன்று நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்து, பவள விழா கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இன்று தி.மு.க-வின் வயது 76. ஆனால் இன்னமும் அதே இளமையோடும் வீரத்தோடும் போர்க்களத்தில் நிற்கிறது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். அப்படிப்பட்ட நம்முடைய கழகத்தின் வீரர்களைப் பயிற்சி அளித்து அனுப்புகின்ற அணிதான் நம்முடைய இளைஞர் அணி என்பதை நீங்கள் உணர வேண்டும்.
நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் 15 வயதில் இளைஞர் தி.மு.க-வைத் தொடங்கினார். அந்த இளைஞர் அணிக்கு விதை போட்டார். அன்று இந்த அணிக்குப் பெயர் 'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க'. கோபாலபுரத்தில் ஆரம்பித்த இளைஞர் அணி, இன்று தமிழ்நாட்டின் கோட்டையில் நம்முடைய தலைவர் அவர்களை அமர வைத்திருக்கிறது. கலைஞர் அவர்கள் அடிக்கடி, "என்னுடைய மூத்த பிள்ளை முரசொலி" என்று சொல்வார். அதேபோல நம் தலைவருக்கு மூத்த பிள்ளை எதுவென்று கேட்டால், அது நம்முடைய இளைஞர் அணிதான்.
இன்னொரு வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியை இங்கே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் 1976-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சொல்லப்போனால், தலைவர் அவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு இப்போது சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றன. அன்று ஓர் இளைஞராகச் சிறைக்குச் சென்ற நம்முடைய கழகத் தலைவர் அவர்கள், வெளியே வரும்பொழுது ஒரு பண்படுத்தப்பட்ட ஆற்றல் மிகுந்த தலைவராக வெளியே வந்தார்.
அன்றைக்கும் அதே துணிச்சலோடும், இன்றைக்கும் அதே வீரத்தோடும் பாசிச சக்திகளை எதிர்த்து நிற்கிறார். அதுமட்டுமல்ல, அப்போதும் இப்போதும் எப்போதும் மக்களோடு மக்களாக நிற்கின்ற ஓர் இயக்கமாக, களத்தில் நிற்கின்ற ஒரு தலைவராக நம்முடைய தலைவர் அவர்கள் இருக்கிறார்.
அதனால்தான் இன்று தி.மு.க-விற்கும் நம்முடைய முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனால் சங்கிகளுக்கு நம் மீது எப்போதும் ஓர் எரிச்சல், ஒரு கோபம்.
இதுநாள் வரைக்கும் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காத திரு. நரேந்திர மோடி அவர்கள், இப்போது தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார். என்ன காரணம்? தேர்தல். தேர்தல் வந்தவுடனேயே அவருக்குத் தமிழ்நாடு நினைவிற்கு வந்துவிடும். இனிமேல் மோடியைப் பிடிக்க முடியாது, அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார். திருக்குறள் சொல்வார், கடலுக்கடியில் சென்று தியானம் எல்லாம் செய்வார்.
சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். என்ன சொன்னார்? தமிழ்நாட்டிற்கு 'இரட்டை எஞ்சின்' அரசாங்கம் வேண்டும் என்று சொன்னார். திரு. பிரதமர் மோடி அவர்களே, நாங்கள் திராவிட மாடல் என்கின்ற 'ஒற்றை எஞ்சினை' வைத்தே ஏற்கனவே இரட்டை இலக்க வளர்ச்சியை , அதாவது 11.19% வளர்ச்சியை எட்டிவிட்டோம். நீங்கள் சொல்கின்ற அந்த 'இரட்டை எஞ்சின்' டப்பா எஞ்சினை வைத்துக்கொண்டு பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்கள் இன்னும் 6 சதவீத வளர்ச்சியைக்கூடத் தொடவில்லை. தமிழ்நாடு அடைந்திருக்கின்ற வளர்ச்சியில் பாதியைக்கூட நீங்கள் நெருங்கவில்லை.
பொதுவாகத் தேர்தலை எல்லாரும் 'ஜனநாயகத் திருவிழா' என்று சொல்வார்கள். ஒரு திருவிழாவில் என்னவெல்லாம் இருக்கும்? வானவேடிக்கை நடக்கும், மக்கள் உற்சாகமாக இருப்பார்கள், எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட ஓர் அணியாகத்தான் நம்முடைய தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, ஒரு மகிழ்ச்சியான அணியாக இன்று இருக்கிறது.
அதேபோலத் திருவிழா நேரத்தில் புதிய புதிய கடைகள் போடுவார்கள். மக்களைக் கூப்பிட்டுப் பொய் விளம்பரம் செய்து பொய் வியாபாரம் செய்வார்கள். பலூன் ஊதி குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவார்கள். அதுபோலத்தான் இன்று தேர்தல் என்றவுடன், தமிழ்நாட்டில் புதிய கடைகளை விரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். திருவிழா முடிந்தவுடன் அந்தக் கடைகள் எல்லாம் எப்படி மறைந்துவிடுமோ, அதேபோலத் தேர்தல் முடிந்ததும் அந்தப் புதிய கடைகள் அனைத்தும் காலி ஆகிவிடும். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்றென்றும் மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கும்.
அதுமட்டுமல்ல, திருவிழாக் கூட்டத்தில் பிள்ளைப் பிடிக்கும் கும்பலும், திருடும் கும்பலும் உள்ளே வருவார்கள். மிட்டாய், ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கித் தருகிறேன் என்று கூறி குழந்தைகளைக் கடத்தப் பார்ப்பார்கள். இப்போது அதேபோலத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது ஈடி வழக்கிலிருந்து நான் காப்பாற்றுகிறேன், ஃபெரா வழக்கிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கிலிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், சம்மந்தி ஒப்பந்தம் எடுத்த வழக்கைத் தீர்த்து வைக்கிறேன் என்று வழக்குகளைக் காட்டி இன்று ஓர் அடிமைக் கூட்டத்தைப் பாசிஸ்டுகள் சேர்த்திருக்கிறார்கள். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அடிமை அ.தி.மு.க பயப்படலாம், ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் எந்த உருட்டல் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டான்.

ஏனென்றால் எங்களை வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான ஒரு தலைவர். பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, தமிழ்நாடு ஒருபோதும் உங்கள் கையில் சிக்காது. ஏனென்றால் எங்கள் தலைவர் அடிக்கடி சொல்வது போல, தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.
சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. வழக்கம் போலத் தமிழ்நாட்டிற்கு எந்தத் திட்டத்தையும் வழங்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிக்கையைப் படித்து முடிப்பதற்கு முன்பே, தமிழ்நாட்டில் இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், 'மிகச்சிறந்த பட்ஜெட்', 'சிறப்பான பட்ஜெட்' என்று வாழ்த்துத் தெரிவிக்கிறார். அறிக்கை முழுவதையும் படித்துக் கூட முடிக்கவில்லை. முரட்டுப் பக்தர்கள், முரட்டுத் தொண்டர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் 'முரட்டு அடிமை'யைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான் இந்தியாவிலேயே இப்போது மிகப்பெரிய முரட்டு அடிமை.
அதுமட்டுமல்ல, மோடி தமிழ்நாட்டிற்கு வந்தவுடனேயே சூரியன் மறைந்துவிட்டது என்று சந்தோஷப்படுகிறார். நம் தலைவர் சொன்னார், "கால்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், தலைநிமிர்ந்து பார்த்தால்தானே உங்களுக்குச் சூரியன் தெரியும்" என்று. உடனே எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? "கால்களைப் பார்த்து நடந்தால்தான் எங்களால் நேராக நடக்க முடியும்" என்று ரொம்ப அறிவுப்பூர்வமாகக் கேட்டார். திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே, தலையை நிமிர்ந்து பாதையைப் பார்த்து, வழியைப் பார்த்து நடந்தால்தான் நேராக நடக்க முடியும். நீங்கள் திரு. மோடியின் காலையும் திரு. அமித்ஷாவின் காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால், உங்களைப் போல முட்டுச் சந்தில்தான் போய் நிற்க முடியும்.
இவ்வளவு காலம் அ.தி.மு.க, பா.ஜ.க-வின் கிளையாக இருந்தது. இன்று அ.தி.மு.க, பா.ஜ.க-வின் இலையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் பத்துத் தோல்விகளைக் கண்ட பழனிசாமியும், மொத்தத் தோல்வியைச் சந்தித்த மோடியும் என்னதான் கூட்டணி வைத்தாலும், தமிழ்நாட்டிற்குள் உங்களை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
கழக இளைஞர்கள், நம்முடைய இளைஞர் அணி தம்பிகள் எப்படிப்பட்டவர்கள் என்று பேரறிஞர் அண்ணாவே சொல்லியிருக்கிறார். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, கழக இளைஞர்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு எனப் பல்வேறு தாக்குதல்கள் நடத்தினார்கள். அப்பொழுது அண்ணா அவர்கள் சொன்னார் "உங்களுடைய தடியடியாலும் துப்பாக்கியாலும் சாதிக்க முடியாத இளைஞர் கூட்டத்தை, நான் என்னுடைய சுட்டுவிரலைக் காட்டினால் தமிழ்நாட்டு இளைஞர் படை சாதிக்கும்" என்று.
தலைவர் அவர்களே, அண்ணா அவர்கள் சொன்னது சுட்டுவிரல், நான் சொல்கிறேன், உங்களுக்குச் சுட்டுவிரல் கூடத் தேவையில்லை, நீங்கள் கண்ணசைத்தால் போதும், இங்கிருக்கின்ற இளைஞர் படை நீங்கள் சொல்வதைச் செய்து காட்டும்.
பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் எப்போதும் காப்பாற்றுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி தயாராக இருக்கும். கழகத் தலைவர் அவர்களுக்கு இந்த நேரத்தில் மீண்டும் ஒரு வேண்டுகோள். இளைஞர் அணியினர் நாம் களத்தில் உழைத்தால், அதற்கான அங்கீகாரத்தைக் கண்டிப்பாகக் கழகத் தலைவர் அவர்கள் வழங்குவார். முக்கியப் போட்டியில் விளையாடுவதற்கு முன்னால் பயிற்சி செய்வார்கள், அதுதான் கழகத்தின் இளைஞர் அணி. கண்டிப்பாகத் தலைவர் அவர்கள் அந்த அங்கீகாரத்தை நமக்கு வழங்குவார். உங்கள் சார்பாக ஏற்கனவே கோரிக்கை வைத்தேன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தலைவர் அவர்களும் தலைமைக் கழகமும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று. கண்டிப்பாகத் தலைவர் அவர்கள் அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கழகத் தலைவர் அவர்கள் நமக்கு ஓர் இலக்கு கொடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று காட்ட வேண்டும். 200 போதாது, 200-க்கும் அதிகமான தொகுதிகளில் நம்முடைய அணி வெற்றி பெற்றாக வேண்டும். குறிப்பாக இந்தத் தெற்கு மண்டலத்தில் இருக்கின்ற 58 சட்டமன்றத் தொகுதிகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் வென்றாக வேண்டும். அதற்கு வருகை தந்துள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் நீங்கள் ஒவ்வொருவரும் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
நம்மிடம் கொள்கைகள் இருக்கின்றன, அரசின் சாதனைகளைச் சொல்ல இருக்கின்றன. விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், 'நான் முதல்வன்' திட்டம். 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறோம். இப்போது 10 லட்சம் இளைஞர்களுக்கு மடிக்கணினி வழங்கிக் கொண்டிருக்கிறார் நம் முதலமைச்சர் அவர்கள். 100-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களுக்கு முதன்முறையாக அரசு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கியிருக்கிறோம்.
மக்களுக்கு இப்படி அடுக்கடுக்கான திட்டங்களைத் நம்முடைய தலைவர் செய்து கொடுத்திருக்கிறார். இவ்வளவு சாதனைகளையும் செய்துவிட்டு நாம் இன்று தைரியமாக மக்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறோம். மற்றவர்களைப் போல வீட்டுக்குள் சென்று உறங்கிவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை வெளியே வந்து முகத்தை மூடிக்கொண்டு திருட்டுத்தனமாக டெல்லிக்குச் சென்று சுற்றுகின்ற தலைவர் அல்ல நம்முடைய தலைவர்.
இங்கே வருகை தந்துள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் மக்களைச் சந்தித்து நம்முடைய சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள். இளைஞர் அணியினர், திராவிட மாடல் அரசின் தூதுவர்களாக நீங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். இன்னும் தேர்தலுக்குச் சரியாக 60 நாட்கள்தான் இருக்கின்றன. இந்த 60 நாட்களும் நீங்கள் ஒவ்வொருவரும் மக்களைச் சந்தித்து நம்முடைய பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் ஏன் மீண்டும் முதலமைச்சராக அமர வேண்டும் என்கின்ற பிரச்சாரத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
'மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள்' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்குச் சொன்னார். அந்த வகையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களுக்கான திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்று சிலர் மக்களைக் கண்டாலே அஞ்சி ஓடுகிறார்கள். தூக்கத்திலிருந்து எழுந்து வந்து இப்போது கண்டதையும் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கிருக்கின்ற லட்சக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் உங்கள் சார்பாக நான் சொல்கிறேன், எங்களுடைய 'உதயசூரியன்' சின்னம் என்பது சும்மா ஏதோ சுவரில் எழுதுகின்ற சின்னம் கிடையாது. கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் இதயத்திலும் இரத்தத்திலும் ஊறிப்போன சின்னம் உதயசூரியன். அண்ணா கண்டெடுத்த சின்னம் உதயசூரியன். கலைஞர் கட்டிக் காத்த சின்னம் உதயசூரியன். தலைவர் அவர்களால் வெற்றியை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கின்ற சின்னம் உதயசூரியன். உயிர் போனாலும் போகுமே தவிர, உதயசூரியன் சின்னம் எங்களை விட்டுப் போகாது.
ஆகவே அரசியல் அறிவே இல்லாத சில பேர்வழிகள் என்னதான் உளறினாலும் புலம்பினாலும் களத்தில் நின்று ஜெயிக்கப் போகின்ற கட்சி உதயசூரியன் சின்னம்தான், நம்முடைய கழகத் தலைவர் அவர்கள்தான். இன்று பிப்ரவரி ஏழாம் தேதி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மே ஏழாம் நாள் நம்முடைய கழகத் தலைவர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உறுதிமொழி ஏற்றார். மீண்டும் நம்முடைய தலைவர் அவர்கள் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்ற அந்த குரல் வருகின்ற மே மாதம் ஒலித்தாக வேண்டும். அதற்கு இளைஞர் அணி நிர்வாகிகள், தம்பிமார்கள் நீங்கள் அனைவரும் அதிக அளவில் உழைப்பைக் கொட்ட வேண்டும். அதற்கான உறுதியையும் சபதத்தையும் இந்த நிர்வாகிகள் சந்திப்பில் நாம் ஏற்போம்.
இளைஞர் அணியினர் விருதுநகரில் கூடினார்கள். கழகத்தின் வெற்றிக் கணக்கை தொடங்கினார்கள் என்று வரலாறு சொல்லட்டும்.






