தமிழ்நாடு

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடா – N.D.A.-வா என்ற ஜனநாயகப் போரில் நாம் வெல்வோம் ஒன்றாக!

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (07-02-2026) விருதுநகரில் நடைபெற்ற கழக இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ஆற்றிய எழுச்சியுரையின் விவரம்:-

இங்கே கூடியிருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது, மற்றவர்களுக்கு என்ன தோன்றும் என்றால், “தி.மு.க. என்றால் பிரமாண்டம்! அதிலும், இளைஞரணி என்றால் பிரமாண்டம்! இன்னும் சொன்னால், உதயநிதி என்றால் பிரமாண்டம்!” ஏனென்றால், பலருக்கும் பொதுக்கூட்டங்களை நடத்துவதே பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால், நமக்கு, மாநாடுகள் என்பது வாரா வாரம் நடக்கக் கூடியதாக இப்போது ஆகிவிட்டது. இந்த மாநாடு மட்டுமல்ல; ஏற்கனவே நடந்தியிருக்கும் மாநாடுகள் மட்டுமல்ல; இந்த மாதம் மட்டும் 5 மாநாடுகள் நடைபெற இருக்கின்றன. அதற்குத் தொடக்கமாக, இந்த விருதுநகர் மாவட்டத்தில், இந்தச் சந்திப்பைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் தம்பி உதயநிதி அவர்களை, நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், தலைமைக் கழகத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன்! அதேபோன்று, இளைஞரணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய பாராட்டுகளை விருதாக, இந்த விருதுநகரில் வழங்குகிறேன்!

விருதுநகர் என்று சொன்னாலே, நமக்கு நினைவிற்கு வருவது, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள்! பெருந்தலைவர் காமராசர் என்று சொன்னாலே, அனைவருக்கும் நினைவிற்கு வருவது, மதிய உணவுத் திட்டம்! அதுபோன்று, இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் என்று சொன்னால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது, காலை உணவுத் திட்டம்!

விருதுநகரில் மாநாடு நடந்தது என்றால், அடுத்து வருகின்ற தேர்தலில், நம்முடைய வெற்றி உறுதி! நினைத்துப் பார்க்கிறேன்... 2004-இல் ‘தென்மண்டல மாநாடு' நடத்தினோம்! 40-க்கு 40 வெற்றி பெற்றோம்! 2019-இல் தேர்தல் பரப்புரையை இங்கே இருந்து தொடங்கி, 39 இடங்களைக் கைப்பற்றினோம்! 2023-இல் “நாற்பதும் நமதே” என்று இங்கே சொல்லித் தொடங்கிதான், 2024-இல் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம்!

இப்போது, 2026. புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா? நம்முடைய டார்கெட் என்ன? வெல்வோம் இருநூறு! அதற்காக உழைக்க நீங்கள் ரெடியா? “கான்ஃபிடெண்டாக” இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, என்னுடைய நம்பிக்கையும் இன்னும் பல மடங்காகி, உற்சாகத்தைக் கூட்டுகிறது!

இந்த விருதுநகர் மாவட்டத்தில் கால் பதித்ததுமே, எனக்குப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தது! தம்பி உதயநிதி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்... இந்த மாவட்டத்தில் என்னுடைய காலடித் தடம் பதியாத கிராமமே கிடையாது! அந்தளவிற்கு இளைஞரணியைத் தொடங்கியபோது, அப்போது இந்த ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளராக இருந்த, அண்ணன் தங்கபாண்டியனுடன் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று, நான் கொடியேற்றி இருக்கிறேன்! எப்போது விருதுநகருக்கு வந்தாலும், அந்தப் பாசத்தையும், நேசத்தையும் குறைவில்லாமல் கொடுப்பவர்கள்தான், இந்த விருதுநகர் மாவட்ட மக்கள்!

இந்த விருதுநகர் மண்ணில் மருது சகோதரர்களைப் போன்று இணைந்து பணியாற்றி, கழகக் கோட்டையைக் கட்டிக் காக்கும் - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கும், தங்கம் தென்னரசு அவர்களுக்கும், என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்! பாருங்கள், இரண்டு பேரும் எழுந்து ஒரே நேரத்தில் வணக்கம் வைக்கிறார்கள்.

நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்களைப் பொறுத்தவரைக்கும், மிகவும் பாசக்காரர். யாரைப் பார்த்தாலும், அண்ணாச்சி, அண்ணாச்சி என்றுதான் அழைப்பார். பாசமாகப் பழகுவார். இதுவரைக்கும், தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, இந்த 5 ஆண்டுகளில் சுமார் 22 இலட்சம் நபர்களுக்குப் பட்டாக்களை அவர் மூலமாக வழங்கியிருக்கிறோம்! அப்படிப்பட்ட சாதனைத் துறையை வழிநடத்தும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்!

அதேபோன்று, இந்த மாநாட்டை மிக மிக எழுச்சியோடும், ஏற்றத்தோடும் ஏற்பாடு செய்திருக்கிறார், நம்முடைய நிதி அமைச்சர் - அருமைச் சகோதரர் – இனிய சகோதரர் தங்கம் தென்னரசு அவர்கள்! எந்தத் துறையைக் கொடுத்தாலும், அந்தத் துறையில் தனி முத்திரையை பதிக்கக் கூடியவர் அவர்! பன்முக ஆற்றல் கொண்டவர் அவர்! தமிழ் ஆர்வலர்! இந்த மாநாட்டின் மூலமாகவும் புது முத்திரையை பதித்திருக்கிறார்!

இங்கே இருக்கும் இளைஞரணியினர், இவர்கள் இரண்டு பேரையும் பாருங்கள்! கே.கே.எஸ்.எஸ்.ஆர் சீனியர்! தங்கம் தென்னரசு இளையவர். ஆனால், இரண்டு பேரும் ஒற்றுமையாக – ஒருவருடன் ஒருவர் இணைந்து, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நீங்கள் அனைவரும் இவர்களைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்! இவர்கள் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு!

இங்கே கூடியிருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களை நான் கேட்க விரும்புவது, உங்களைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது! காரணம், நான் பார்த்துப் பார்த்து வளர்த்த இளைஞரணியில், உங்களையெல்லாம் பார்க்கும்போது, அந்த மகிழ்ச்சி டபுள் ஆகிறது, ட்ரிபுள் ஆகிறது!

நம்முடைய திராவிட இனத்தின் மேன்மைக்காக - தமிழ்மொழியின் உயர்வுக்காக - தனித்துவமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக – உங்கள் அனைவரையும் கொள்கைப் பிடிப்போடும் – கழகப் பற்றோடும் - வளர்த்தெடுக்கிறார், இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்!

உதயநிதியின் செயல்பாடுகளை நான் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்! ஏதோ பெயரளவிற்கு இளைஞர்களை அரசியல் இயக்கத்தில் சேர்த்தால் போதும் என்று உதயநிதி செயல்படவில்லை! இளைஞரணி நிர்வாகிகளை மிகவும் சிஸ்டமேட்டிக்காக - பூத் அளவில் தொடங்கி, மாநில அளவு வரைக்கும் தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, உங்களை ‘நியூ ஏஜ் திரவிடியன் ஸ்டாக்’-ஆக உருவாக்குகிறார். நீங்கள் ஒவ்வொருவரும்தான் - தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுகள்! பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வாரிசுகள்! முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வாரிசுகள்! நீங்கள்தான், அடுத்து நம்முடைய கழகத்தையும் – தமிழ்நாட்டையும் காப்பாற்றப் போகிறீர்கள்.

நான் வரும் வழியில், செல்போனில் மாநாட்டின் நிகழ்ச்சிகளை எல்லாம் கவனித்துக் கொண்டு வந்தேன். சிவா பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சைக் கேட்டபோது, அதை நான் சொல்ல வேண்டும்; நானும் வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்த மேடைக்கு வந்தேன்.

உங்களுக்கெல்லாம், இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நான் வெளியிட்ட வீடியோவில், மூன்று விஷயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதில் முதலாவது, எதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான். நம்முடைய அடிப்படைக் கொள்கைகள் என்ன? சமூகநீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, மொழியுணர்வு, இன உணர்வு!

மொழியுணர்வையும், இனவுணர்வையும் எடுத்துக் கொண்டால், நம்முடைய தாய்மொழியான தமிழுக்குப் பல்வேறு கால கட்டங்களில், ஆபத்து வந்தபோது, கடுமையாகப் போராடி தடுத்திருக்கிறோம்! ஆனாலும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து இன்றைக்கும் நம்முடைய தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்று தொங்கிக் கொண்டு இருக்கிறது! மொழியை அழித்தால், நம்முடைய அடையாளத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்! அதை முறியடிக்க நீங்கள் வேண்டும்!

அடுத்து, முக்கியமான கொள்கை சமூகநீதி! நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து டிகிரி வாங்கியிருப்பீர்கள், உங்கள் அப்பா-அம்மாக்களில் பலர் படித்திருப்பார்கள். ஆனால், உங்கள் தாத்தா-பாட்டி அவர்களுடைய நிலைமை என்னவாக இருந்தது என்று நினைத்துப் பாருங்கள்? நமக்கெல்லாம் கல்வி எதற்கு என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள்... வேலைகளில் நமக்கு இடம் கிடைக்காது, இருக்காது! அந்த அநீதியை இடஒதுக்கீட்டால் உடைத்து, சமூகநீதியை நிலைநிறுத்தினோம்! ஆனால், இப்போது ‘நீட்’ போன்ற தேர்வுகளைக் கொண்டு வந்து, பழைய நிலைமையை உண்டாக்குகிறார்கள்! இதைத் தடுக்க உண்மையான வலிமையுள்ள ஒரே இயக்கம், நம்முடைய இயக்கம்தான்! அதற்குத்தான் நீங்கள் வேண்டும்!

அடுத்து, நம் உயிர்க் கொள்கை மாநில சுயாட்சி! மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா! இந்தியா என்பது கூட்டமைப்பு. இங்கே கூட்டாட்சிக்கு எவ்வளவு மதிப்பளிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும், மாநிலங்களுக்கு அதிகாரங்களே இல்லாத நிலைமைதான் இருந்தது! அவ்வளவு ஏன், மாநில முதலமைச்சர்களால், விடுதலை நாளில்கூட தேசியக் கொடியை ஏற்ற முடியாத நிலைமைதான் இருந்தது. இன்னும் நிறைய பிரச்சினை. இதையெல்லாம், போராடி, இந்த நிலைமைகளை மாற்றி, ஓரளவிற்காவது அதிகாரங்கள் மாநிலங்களுக்குக் கிடைப்பது போன்று செய்தோம்! மாநிலக் கட்சிகளால், ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று இந்தியாவில் முதன்முதலில் ஆட்சியமைத்துக் காட்டியதே இந்த தி.மு.க.தான்! மறந்துவிடாதீர்கள். நம்முடைய தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் அத்தனை மாநிலங்களுக்கும் நாம் உரிமைகளைப் பெற்றுத் தந்தோம்!

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆனால், இப்போது மீண்டும் மாநிலங்களின் அதிகாரங்களை ஒன்றியத்தில் கொண்டு சென்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மாநிலங்களை முனிசிபாலிட்டிகள் போன்று மாற்ற வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள்! மாநிலக் கட்சிகளே இருக்கக் கூடாது என்று பா.ஜ.க. செயல்படுகிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்! இதைப் பாதுகாப்பதற்கு நீங்கள் தேவை!

அடுத்து, நம்முடைய உறுதிக் கொள்கை சுயமரியாதை! இடுப்பில் கட்டியிருந்த துண்டு, தோளுக்கு வந்த வரலாறு அது! தன்மானம்தான் உயிர்மூச்சு என்று தமிழினம் தலைநிமிர்ந்த வரலாறு! ஒவ்வொரு தனிமனிதரின் சுயமரியாதையையும் காப்பாற்றி, தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றால், இப்போது, அடிமைகளும் - துரோகிகளும், எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு, ஒட்டுமொத்த மாநிலத்தின் சுயமரியாதையையும் அடகு வைக்க முயற்சி செய்கிறார்கள்! அதனால்தான், “தமிழ்நாடு தலைகுனியாது” என்று சொல்லும் தெம்பும், திராணியும், நெஞ்சுரமும் கொண்டிருக்கும் ஒரே இயக்கமாக, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கிக் கொண்ருக்கிறது! சுயமரியாதையை விட்டுக் கொடுக்கும் கூட்டத்தை வீழ்த்த நீங்கள் அனைவரும் தேவை!

அதனால்தான் சொன்னேன், தமிழ்நாட்டிற்கும் - தமிழினத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் நீங்கள் தேவை! உங்களைப் போன்ற உடன்பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமானால், ஒரு நூற்றாண்டு மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது!

இரண்டாவதாக, நேற்று நான் சொன்னேன். இளைஞர்களான நீங்கள் எவ்வாறு கொள்கையுடன் செயல்பட வேண்டும்? மொழிப்பற்றுடன் மொழி ஆற்றலும் கொண்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். அதிக புத்தகங்களைப் படியுங்கள்! திராவிட இயக்க வரலாற்றைச் சொல்லும், யூடியூப் வீடியோக்களைப் பாருங்கள். நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்த அறிஞர்களின் பேச்சுகளை கேளுங்கள். பேருந்து, இரயிலில் பயணம் செய்யும்போது, நீங்கள் அதற்காக தினமும் ஒரு மணிநேரம் செலவு செய்யுங்கள். உங்கள் சிந்தனைகளைக் கோவையாக எழுதிப் பழகுங்கள்! யாரோ எழுதியதை ஃபார்வார்டு செய்வதைவிட, நீங்கள் எழுதியதை அடுத்தவர்கள் ஃபார்வார்டு செய்ய வேண்டும். அந்தளவிற்கு நீங்கள் சிறப்பாக எழுத வேண்டும்! சிறு சிறு கூட்டங்களில் பேசுங்கள். சோஷியல் மீடியாவில் பேசி வீடியோஸ் போடுங்கள். கலந்துரையாடல் நடத்துங்கள். பல தரப்பு மனிதர்களையும் சந்தித்து உரையாடுங்கள். கழகத்தின் கொள்கைகளைப் பரப்புங்கள். நாம் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள். இவையெல்லாம்தான் கழகத்தையும் வளர்க்கும்! உங்களையும் வளர்க்கும்!

நாம்தான் ஏழாவது முறையும் ஆட்சி அமைக்கப் போகிறோம். நம்முடைய எதிரிகள் உட்பட யாருக்கும் இதில் சந்தேகம் கிடையாது. ஆனால், நாம்தான் எப்படியும் வெற்றி பெறப் போகிறோமே என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. பரம்பரை பரம்பரையாகத் தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! இதுதான் உங்களுக்கான டாஸ்க்! செய்வீர்களா...

மூன்றாவதாக நான் சொன்னது, எதற்காக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்று. இந்தியாவில் எந்த மாநிலத்திலும், ஒரு அரசு ஐந்தே ஆண்டுகளில், நாம் செய்தததைப் போன்று இவ்வளவு சாதனைகள் செய்ததாக வரலாறு உண்டா! ஒன்றிய அரசின் ரேங்கிங் ஆனாலும் சரி, நேஷனல் மேகசின்கள் வெளியிடும் ரேங்கிங் ஆனாலும் சரி, எக்கனாமிஸ்ட் மாதிரி இண்டர்-நேஷனல் இதழில் வரும் செய்திகள் ஆனாலும் சரி, அனைத்து ரேங்கிங்கிலும் தமிழ்நாடுதான் ‘டாப்’! தமிழ்நாடுதான் ‘சூப்பர் ஸ்டார் ஸ்டேட்’. அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. இதை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்!

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதோ ஒரு திட்டத்தில் பயனடையும் வகையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரமாக மகளிர் உரிமைத் தொகை! அவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யக் கட்டணமில்லா விடியல் பயணம்! சொந்த ஊரை விட்டு வெளியூரில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு மாவட்டந்தோறும் தோழி விடுதிகள்! அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தால், மாதம் ஆயிரம் ரூபாய் தரும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்! அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள்! அதன் மூலமாக இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்! அந்த வேலைவாய்ப்புகளைப் பெற, நான் முதல்வனில் திறன் பயிற்சி! மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள், சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் திட்டங்கள் என்று உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

நீங்கள் கெத்தாகச் சொல்லலாம்... இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்களும் இருக்காது; இத்தனை பயனாளிகளும் இருக்க மாட்டார்கள்! தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடு மட்டும்தான்! ஒன்றிய அரசு மாநிலங்களை ஒப்பிட்டு எந்தத் துறையில் விருதுகள் கொடுத்தாலும், அதைத் தமிழ்நாடுதான் வாங்குகிறது!

இவ்வாறு, அனைத்திலும் நாம் ‘நம்பர் ஒன்’-ஆக இருந்தாலும், பட்ஜெட் என்று வந்துவிட்டால் நமக்கு ஒன்றும் கிடையாது! இந்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்தாவது, ஏதாவது ‘எலக்‌ஷன் ஸ்டண்ட்’ செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்! கடைசியில் அதுவும் இல்லை. வழக்கம்போல ஈரத்துண்டுதான்!

தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் தொடர்ந்து என்ன கேட்கிறோம்? எங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய கல்வி நிதியைக் கொடுங்கள், மெட்ரோ நிதியைக் கொடுங்கள், பேரிடர் நிவாரண நிதியைக் கொடுங்கள், ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதியைக் கொடுங்கள், புதிய ரயில் திட்டங்களைக் கொடுங்கள், ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதியைக் கொடுங்கள், வரி வருவாயில் 50 சதவிகிதமாகக் கொடுங்கள், “நீட்”டில் இருந்து விலக்கு கொடுங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுங்கள், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறைக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வாக்கு கொடுங்கள், கீழடி அறிக்கையைக் கொடுங்கள், இதையெல்லாம்தான் நாங்கள் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்கிறோம்! ஆனால், அவர்கள் நமக்குக் கொடுத்தது வெறும் ஜீரோ! அப்போது நாமும் அவர்களுக்கு எலக்‌ஷனில் அதையேதான் திருப்பித் தர வேண்டும். பா.ஜ.க. மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக N.D.A. கூட்டணியும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் போன்றே, சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ ஆக வேண்டும்!

தமிழ்நாட்டிற்கு ஜீரோ என்று சொன்ன ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பா.ஜ.க.வின் கிளைச் செயலாளராக மாறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி இப்போது முழுவதுமாக N.D.A. பழனிசாமியாக மாறி நிற்கிறார்! “நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்” என்று சொல்வது போன்று, மைக் முன்னால் நின்று கொண்டு, “நான்தான் கூட்டணிக்குத் தலைமை, நான்தான் கூட்டணிக்குத் தலைமை” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். சொல்லவில்லை... புலம்பிக் கொண்டிருக்கிறார்!

இந்த நிலையில், ஒரு வித்தியாசமான போராட்டத்தை இப்போது அவர் அறிவித்திருக்கிறார். பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் 125 நாள் வேலைத் திட்டத்தை நாம் தடுக்கிறோமாம். அதற்காகப் போராட்டமாம். அவர் முதலில் அந்தச் சட்டத்தைப் பற்றி எதையாவது படித்தாரா? அந்தச் சட்டத்தின் பெயரை அவரால் சொல்ல முடியுமா? அப்படி இருந்தால், அவருடைய அறிக்கையில் அதை ஏன் குறிப்பிடவில்லை? 100 நாள் வேலை என்பது, உரிமையாக இருந்தபோதே 50 நாள்கூட பா.ஜ.க. அரசு வேலை தரவில்லை! இப்போது எவ்வாறு 125 நாள் கொடுப்பார்கள்? இதில் என்ன என்றால், இனி மாநில அரசுதான் 40 விழுக்காடு நிதியைத் தர வேண்டும் என்று வேறு மாற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் பழனிசாமி அவர்களுக்குத் தெரியுமா, தெரியாதா? என்ன சட்டம், என்ன திருத்தம் செய்திருக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியாமல், இவர் வந்தால் 150 நாட்களுக்கு உயர்த்துவோம் என்று வேறு அறிவித்திருக்கிறார். ஓனரை மிஞ்சிய லேபராக இப்போது இருக்கிறார் பழனிசாமி அவர்கள்.

அவர்கள் கூட்டணியில் இருக்கும் டிசைனைப் பாருங்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்குப் பிறகு, முதலில் சசிகலா அவர்களை முதலமைச்சராக்க நினைத்தார்கள். அது முடியாமல் போன காரணத்தினால்தால், கூவத்தூரில் வைத்துப் பழனிசாமியைக் கொண்டு வந்தார்கள். தனக்குப் பதவி கொடுத்தவர்களையே கட்சியில் இருந்து நீக்கினார் பழனிசாமி! கடந்த தேர்தலில் அனைவரும் பிரிந்து பிரிந்து நின்றார்கள். இப்போது, அதில் பாதி பேர் பா.ஜ.க.வுடனே திரும்ப வந்து சேர்ந்து கொண்டு இணைந்துவிட்டார்கள். இவர்கள் மொத்தத்தில் மக்கள் நலனுக்காக கூட்டணி நடத்தவில்லை. இவர்களுக்குள்ளே ‘மியூசிக்கல் சேர்’-தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நடக்க இருக்கும் தேர்தல், ஒட்டுமொத்த தமிழ்நாடு வெர்சஸ் N.D.A.! இதில் நாம் தமிழ்நாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.க.விற்கு புதிது இல்லை! தினமும் காலையில் சூரியன் உதிப்பதைப் போன்று அவர்களுக்கு அது ஒரு ரொட்டீன்! ஆனால், இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.க.வும், சுயநலத்துக்காகச் சுயமரியாதையை விற்று டெல்லிக்கு சேவகம் செய்யும் அடிமை அ.தி.மு.க.வும் அடையப் போகிறது. இதுவரை அடைந்த வெற்றிகளைவிட மிகப்பெரிய வெற்றியைத் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அடையப் போகிறது.

வளர்ந்த தமிழ்நாட்டை, மேலும் சிறந்த தமிழ்நாடாக உயர்த்துவோம். முன்னேறிய தமிழ்நாட்டை இன்னும் முற்போக்கான தமிழ்நாடாக உயர்த்துவோம். அதற்கு இளைஞரணியினர் உங்களுடைய முழு உழைப்பைக் கொடுக்க வேண்டும். உங்கள் உழைப்பிற்கான உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும்!

உதயநிதி அவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். என்னுடன் இளைஞரணியில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்தார்கள் என்று நேற்று வெளியிட்ட வீடியோவில் கூட நான் சொல்லியிருக்கிறேன். இதுகுறித்து ஒரு லிஸ்ட்டேகூட எடுத்துப் பார்த்தேன். இப்போது அமைச்சரவையில், இளைஞரணியில் இருந்தவர்கள் பத்து பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். 24 பேர் MLA-க்களாக இருக்கிறார்கள். 4 பேர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்கள். மேயராக 3 பேர் இருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த கேபினட்டிலும் இளைஞரணியில் இருந்து அமைச்சர்களாகத் தேர்வாகி இருந்தார்கள். அப்படிப்பட்ட நான் மறந்துவிடுவேனா... என் மூத்த பிள்ளை இளைஞரணி. சொன்னாரே, தம்பி உதயநிதி. நீங்கள் உண்மையாக உழைத்தால், உங்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் உங்களைத் தேடி வரும். உங்கள் சீனியர்ஸ் போன்று, உங்கள் முன்னோடிகளைப் போன்று, நீங்களும் உழைக்க வேண்டும்!

மூத்தோரை மதித்து - இளையோரை அரவணைத்து - உடன்பிறப்புகள் அனைவரும் ஒரு தாய் மக்களாக அன்பு செலுத்துங்கள்! உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

உழையுங்கள்! அதுவும், உங்கள் தனித்தன்மை அனைவருக்கும் தெரிவது போன்று உழையுங்கள்! உங்கள் உழைப்பால் கழகத்தையும், மாநிலத்தையும் உயர்த்துங்கள்! அடுத்து வெற்றி மாநாட்டில் மீண்டும் சந்திப்போம்! தமிழ்நாடா – N.D.A.-வா என்ற ஜனநாயகப் போரில் நாம் வெல்வோம் ஒன்றாக!

Related Stories

Related Stories