
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் தி.மு.க. கலந்து கொள்ளவில்லையாம். உடனே, மெத்தப் படித்த மேதாவிகள் சிலர் தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார்கள்.
தி.மு.க. தான் இந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சொல்லிய கட்சி. தென் மாநிலங்களையே எச்சரிக்கை செய்த கட்சி. எனவே, தி.மு.க.வுக்கு யாரும் அறிவுரை சொல்லத் தேவையில்லை.
தொகுதி மறுவரையறை தொடர்பாக 5.3.2025 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். விஜய்யையும் ஒரு கட்சித் தலைவராக மதித்து அழைப்பு விடுத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு விஜய்யும் கலந்து கொள்ளவில்லை.
அவர் கட்சியைச் சேர்ந்த யாரையும் கலந்து கொள்ளச் சொல்லவும் இல்லை. தமிழ்நாடு தனது எதிர்ப்பை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பதிவு செய்து கொண்டிருந்த போது விஜய், கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்.
அதை விட முக்கியமான 5.3.2025 அன்று அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். ‘நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியானது.“நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பற்றாக்குறை என்பது ஒரு மக்கள் பிரச்சினையே இல்லை.

அதைவிட மிக முக்கியமான ஜனநாயகம் சார்ந்த பிரச்சினைகள் நாட்டில் இருப்பதை நான் கீழே விவரித்து இருக்கிறேன். அவற்றைக் களைவதுதான் நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்” என்று அறிக்கை விட்டவர் எதற்காக இன்று அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்?
இப்போது அது மக்கள் பிரச்சினை ஆகிவிட்டதா? அல்லது அதை விட மிக முக்கியமான ஜனநாயகப் பிரச்சினைகள் அனைத்தையும் விஜய் தீர்த்து வைத்துவிட்டாரா?
காவிரிப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக, கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு ஆலோசனைக் கூட்ட நாடகத்தை விஜய் நடத்துகிறார். விஜயை நடத்த வைத்திருக்கிறார்கள். இதில் எதற்காக தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும்?
இந்த நாடகத்தை தி.மு.க. மட்டுமல்ல; அ.தி.மு.க.வும் புரிந்து கொண்டது. பா.ம.க.வும், தே.மு.தி.க.வும், ம.நீ.க.வும் புரிந்து கொண்டது. அதனால் தான் விஜய் கூட்டிய ஓரங்க நாடகத்தைப் பார்க்க அவர்களும் செல்லவில்லை.
விஜய் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக அதில் தி.மு.க. மாறுபட்ட நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்று பொருளல்ல. விஜய்க்கு அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான எந்த யோக்கியதையும் இல்லை என்பதுதான் பொருள்.
5.3.2025 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இதில் தென் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து 7 தென் மாநில முதலமைச்சர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார்கள். இதை மையமாக வைத்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினார்கள்.

22.3.2025 அன்று மறுவரையறையை முறைப்படுத்தும் முதல் கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநிலக் கட்சிகள் இதில் பங்கேற்றன. பிரதமரைச் சந்திக்க உடனடியாக கடிதம் எழுதினார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர இருப்பதை அறிந்து, 16.4.2026 அன்று கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏந்திச் சென்று போராட்டம் நடத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவின் நகலை எரித்தார். மாநிலம் முழுவதும் தி.மு.க.வினரும் அப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இப்படி 2025 - 2026 ஆண்டில் தொகுதி மறுவரையறையை முறைப்படுத்த, தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த எச்சரிக்கை விடுக்கும் வகையில் அனைத்தையும் செய்தது தி.மு.க. இதனை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, தென்
மாநில முதலமைச்சர்கள், அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் அறிவார்கள். விஜய்க்குத் தெரியவில்லை. தெரியாது.
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால், அந்த நடவடிக்கையானது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது என்று தான் சொல்கிறோம். இந்தப் போராட்டம், எல்லை வரையறைக்கு எதிரானது அல்ல. இந்தப் போராட்டம் நியாயமான எல்லை வரையறையை வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டார்கள்.
இந்தப் போராட்டம் தொகுதி வரையறைக்கு எதிரானதல்ல.
This fight is for fair delimitation" என்று குறிப்பிட்டார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இவை அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பே தெளிவு படுத்தப்பட்ட கருத்துகள் ஆகும். எனவே, இந்தப் பிரச்சினையை இப்போதுதான் கண்டுபிடித்தவர்களைப் போல யாரும் கருத்துச் சொல்லத் தேவையில்லை.
41 பேர் மரணத்துக்கு காரணமான கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிப்பதாலும், பல்வேறு வருமான வரி வழக்குகளாலும் பா.ஜ.க. என்ற பெயரையே உச்சரிக்கப் பயந்து கொண்டு இருப்பவர் முதலமைச்சர் விஜய். அவரது ஆட்சிக்கு இரண்டு உறுப்பினர்களைக் கொண்டு முட்டுக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
எனவே, கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் ஆட்சியையும் அவரால் பகைத்துக் கொள்ள முடியாது. எனவே தான் காங்கிரஸ் இழுப்புக்காக ஒரு கூட்டத்தைப் போடுகிறார். அங்கும் பா.ஜ.க.வை பகைத்துக் கொள்ளாமல் தீர்மானம் போடுகிறார்.
வெளியே வந்துவிட்டதால் சாலையில் 10 நிமிடங்கள் நடக்கிறார். கை காட்டுகிறார். அவ்வளவுதான். இன்றைய கால்ஷீட் முடிந்தது. வீட்டுக்குள் போய் விடுகிறார். இன்றைய ரீல்ஸ் தேறுகிறது. இதைத்தான் தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.






