முரசொலி தலையங்கம்

“சுதந்திர இந்தியாவில் உருவாக்கிய அனைத்தையும் விற்பதுதான் மோடி அரசின் சாதனை” - முரசொலி தலையங்கம்!

மோடி அரசின் பொதுத்துறை பொய்கள் என்று முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“சுதந்திர இந்தியாவில் உருவாக்கிய அனைத்தையும் விற்பதுதான் மோடி அரசின் சாதனை” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக பொதுத்துறை நிறுவனங்களையே மொத்தமாக முகம் இழக்க வைத்துக்கொண்டு இருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதனை பகிரங்கமாகச் செய்கிறார் நிர்மலா. ஆனாலும் பொதுத்துறையை காப்பாற்றும் அவர் நடிப்பு தொடர்கிறது.

"மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய விருப்பமாக இருக்கிறது" என்று சொல்லி இருக்கிறார். சிறப்பாக செயல்படுவது என்பது அதனைக் கவனிப்பதா? அல்லது மொத்தமாக கை மாற்றிவிடுவதா? என்ற கேள்விக்கு நிதி அமைச்சரால் பதில் சொல்ல முடியுமா? தொழில் துறையினர் கூட்டத்தில் நேற்றைய தினம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "அரசு சொத்து பலப்படுத்தப்பட வேண்டும். அதுவே நமது பலமும் கூட. தற்போதைய வலுவிழந்த நிலையில் செயல்பட அனுமதித்தால் பல பொதுத்துறை நிறுவனங்கள் காணாமல் போய்விடும். வளர்ந்து வரும் இந்தியாவின் எதிர்கால விருப்பங்களை பூர்த்தி செய்ய பொதுத்துறை நிறுவனங்களும் வளர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அது அத்தியாவசியம் ஆகும்.

“சுதந்திர இந்தியாவில் உருவாக்கிய அனைத்தையும் விற்பதுதான் மோடி அரசின் சாதனை” - முரசொலி தலையங்கம்!

குறிப்பிட்ட துறைகளில் சில பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாக உள்ளது. இதன் மூலம் மக்களின் வரிப்பணம் ஆரோக்கியமான வகையில் செலவிடுவதை நாம் உறுதிப்படுத்த முடியும். மக்கள் சொத்து தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையில்லாதது. நிராகரிக்கப்பட வேண்டியது" என்று நிதி அமைச்சர் பேசி இருக்கிறார். ஓ! இவர் இவ்வளவு நல்லவரா என்று நினைக்கத் தோன்றும் பேச்சை நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமல்ல; இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதுதானே சந்தேகத்தை அதிகம் ஏற்படுத்துகிறது. இந்திய ரயில்வேயும் துறைமுகமும் இலாபகரமான நிறுவனங்கள்தான். ஆனால் இரயில்வே, துறைமுகங்களின் சொத்துக்கள் எதற்காக தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்? ரயில்களை, ரயில்வே பாதைகளை, ரயில் நிலையங்களை எதற்காக தனியார் மயம் ஆக்க வேண்டும்?

துறைமுகங்களை, துறைமுகம் அமையும் கடலை, கடற்கரைகளை எதற்காக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்? ரயில்வே மட்டுமல்ல; நகர்ப்புற போக்குவரத்து, எரிவாயுக் குழாய்கள், மின்சாரம் ஆகிய துறைகளிலும் பல்வேறு பிரிவுகள் தனியார் மயம் ஆகப்போகின்றன. இன்சூரன்ஸ் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு என்பது 74 சதவிகிதம் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் வங்கிகள் தனியார் மயமாக இருக்கின்றன.இந்த நிதிநிலை அறிக்கையைத்தான் நூறு ஆண்டுகள் இல்லாத அறிக்கைஎன்று பீற்றிக் கொள்கிறார்கள். ஆமாம் சுதந்திர இந்தியாவில் உருவாக்கிய அனைத்தையும் விற்பதுதான் மோடி அரசின் சாதனை. 1947 முதல் உருவாக்கியதை ஆறு ஆண்டுகளில் விற்று முடிக்கப் பார்க்கிறார்கள். நேரு உருவாக்கியதை மோடி முடிக்கிறார்.

"வெற்றியோடு நம் கடமை முடிந்து விடவில்லை. கோடிக்கணக்கான மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும்" என்று 1952 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நேரு உறுதி எடுத்துச்சொன்னார். இதற்காகவே சோசலிசம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டார். தனியார் துறையில் இருந்து பொதுத்துறைக்கு மாறவேண்டிய தொழில்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மாறியாக வேண்டும் என்று பிரதமர் நேரு சொன்னார். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டமானது பொதுத்துறை நிறுவனங்களை அதிகம் உருவாக்கியது.

முழுமையாக நேருவால் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை நேரு உருவாக்கினார். இன்றைக்கு அவைதான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்த கலப்புப் பொருளாதாரம் என்று நேரு சொன்னார். ஆனால் இன்று மோடி ஆட்சியில் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் பொருளாதாரமாக ஆகிக்கொண்டு இருக்கிறது. நாடு தொழில் வளம் மிக்கதாக மாறினால் சாதிமத வேறுபாடுகள் தலைதூக்காது என்று நேரு நினைத்தார். அவரது தொழில் வளர்ச்சி, பொதுத்துறை உருவாக்கம் என்பது பொருளாதார வளமாக மட்டுமல்ல; சமூக சீர்திருத்தமாகவும் சமூக மாற்றமாகவும் பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றைய பா.ஜ.க. அரசு, சாதிமத பிரச்சினைகளை அதிகளவில் கிளப்பினால் நாட்டையே விற்றாலும் மக்களுக்கு அது தெரிய வராது என்று நினைக்கும் அரசாக இருக்கிறது. விவசாயம், சமுதாய வளர்ச்சி, நீர்ப்பாசனம், மின்சக்தி, தொழில்கள், கனிமம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சமூகசேவைகள், வீட்டுவசதி ஆகியவற்றுக்கு முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களும் முன்னுரிமை வழங்கியது. ஆனால் இன்று ராணுவமே முக்கியமானதாக ஆகிவிட்டது. அணுசக்தி, விண்வெளி என்று இந்த அரசாங்கத்தின் நோக்கம் மாறிவிட்டது. அதாவது எல்லைகளை மட்டும்தான் எங்களால் பாதுகாக்க முடியும். மற்ற தொழில்கள் அனைத்தும் தனியார் மயம் என்பதை நோக்கியே மோடி ஆட்சியின் போக்கு போய்க்கொண்டு இருக்கிறது. இந்தப் பொய்யை மறைக்கத்தான் பொதுத்துறையைக் காப்பாற்றுவதற்காக பங்குகள் விற்பனை என்று பொய்சொல்லி வருகிறார் நிர்மலா. அதாவது தனியாரைக் காக்கவே பொதுத்துறை விற்பனை நடக்கிறது என்பதே உண்மை. அது மட்டுமே கலப்படம் இல்லாத உண்மை!

banner

Related Stories

Related Stories