
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை பிப்.17 ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதேபோல் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு, நீட் விவகாரம், மாநில சுயாட்சி குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
"இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு பாதுகாப்போடு இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு; பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமும் இதுவே. தமிழ்நாட்டில்தான் குற்றச் செயல்கள் மிக மிகக் குறைவு. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்ப வேண்டும் என்பதற்காகவே சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறிவருகிறார். இரவு 11 மணி அளவில் கூட பெண்கள் பேருந்திலிருந்து இறங்கித் தனியாகச் செல்கிறார்கள்; அதனை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் பார்க்கலாம்.
தமிழகத்தில் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு விழிப்புணர்வுகளை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம். போக்சா வழக்குகள் தொடர்பாகப் புகார் அளிக்க முன்வருவோருக்குத் தேவையான தைரியத்தை இந்த அரசு வழங்கியுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை. இதுவரை இருந்த ஒன்றிய அரசுகளின் நிலைப்பாடு வேறு, தற்போது இருக்கின்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு வேறு. தற்போதைய அரசு மாநில சுயாட்சியைப் பறிக்கும் எண்ணத்தில் இருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
நாங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் மாநில சுயாட்சி கேட்கவில்லை, அனைத்து மாநிலங்களுக்குமாகச் சேர்த்துதான் கேட்கிறோம். நீட் தேர்வு குறித்து இங்கே பேசும்போது, 'நீட்' தமிழகத்திற்குள் வராமல் விலக்கு வாங்கித் தந்தவர் கலைஞர் அவர்கள்.






