தமிழ்நாடு

“11.9% பொருளாதார வளர்ச்சி” : பேரவையில் அ.தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு 11.9% வளர்ச்சி அடைந்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்று பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“11.9% பொருளாதார வளர்ச்சி” : பேரவையில் அ.தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நேற்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதேபோல் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி, "தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாடு 11.9% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசே அறிவித்துள்ளது. இந்த இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெருமையாகக் கருதுகிறோம். ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒற்றை இலக்க வளர்ச்சி மட்டுமே இருந்தது. மேலும், ஒன்றிய அரசு உத்தரப் பிரதேசத்திற்கு அதிக நிதி பகிர்வை வழங்கி, தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிறது," என்று தெரிவித்தார்.

அதேபோல் அமைச்சர் எ.வ.வேலு தனது பதிலில்,”அ.தி.மு.க ஆட்சியில் 13.32 லட்சம் கோடியாக இருந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP), தற்போது 40.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 21.64 லட்சம் கோடி உயர்வாகும். ஒருபுறம் வறுமையை ஒழித்து, மறுபுறம் ஜிடிபியை உயர்த்தி பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளோம்” என்றார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி , அரசின் முதலீடுகள் குறித்து பேசும் போது ”ஓராண்டு உற்பத்தி அதிகரித்ததற்கே தினந்தோறும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறீர்கள்” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார். "தி.மு.க அரசு தனது சாதனைகளை வெளிப்படையாகவும் உரக்கவுமே சொல்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories