
முரசொலி தலையங்கம் (08-07-2026)
அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்!
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு, வருமான வரி வழக்குகள், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட மணவிலக்கு வழக்கு என பல்வேறு வழக்குகளில் சிக்கி இருப்பவர்தான் இன்றைய முதலமைச்சர் விஜய். அவரைப் போலவே அவரது அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளிலும் புகார்களிலும் சிக்கி வருகிறார்கள்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் : கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இவர். விஜய் வரும் நேரத்தை மாற்றிச் சொல்லிமக்களை முன்கூட்டியே வர வைத்தவர் இவர்தான். நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து புகார் பெட்டி வைத்தாலே போதும் ஆனந்த் மீது ஏராளமான புகார்கள் குவியும். இந்த நிலைமையில், ஐந்து லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஞானசௌந்தரி தாக்கல் செய்துள்ள வழக்கில், அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான கெடு ஜூன் 29ஆம் தேதி மாலை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகலிலேயே நியமன பட்டியல் என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதாகவும், இதுகுறித்து மாவட்டச் செயலாளரிடம் விசாரித்தபோது அதுதான் இறுதி பட்டியல் என கூறியதால் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுகின்றனர்; த.வெ.க. மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கூட்டுசேர்ந்தும், த.வெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை அடிப்படை யிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனவே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்கள் மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதே மாதிரியான நியமனக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் பல நாட்கள் தலைமறைவாக இருந்தவர் இவர். கரூர் வழக்கை இப்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. த.வெ.க. ஆட்சியில் குதிரை பேரம் நடப்பதாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய இடங்களில் பல்வேறு புகார் மனுக்கள் பதிவாகி வருகிறது. இவை அனைத்திலும் சிக்கப் போகிறவர் இவர்தான். இவரது மனைவி மீது லாட்டரி தொடர்பான வழக்குகள் உள்ளன.
அமைச்சர் நிர்மல்குமார் : கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இவர். ‘கூட்டம் அதிகமாக இருக்கிறது, விஜய் வரத் தாமத மானால் அசம்பாவிதம் நடக்கும், எனவே அவரை சீக்கிரம் வரச் சொல்லுங்கள்' என்று காவல் துறை அதிகாரிகள் சொன்னது இவரிடம்தான். இது முதல் தகவல் அறிக்கையிலேயே இருக்கிறது. குதிரை பேர வழக்குகளிலும் சிக்குவார்.


அமைச்சர் மரிய வில்சன்: நிதி அமைச்சரான இவர், கட்டையைத் தூக்கி ஒரு குடும்பத்தைத் தாக்கும் வீடியோ இணைய தளத்தில் பரவி அனைவரும் பார்த்த காட்சிகள் ஆகும். மரிய வில்சனுக்கும் அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது. 8.8.2022 ஆம் நாள் புதுச்சேரியில் உள்ள மரிய குளோத்தின் வீட்டுக்குச் சென்று அவரையும் அவரது மனைவியையும் கட்டையை வைத்து தாக்கி இருக்கிறார் மரிய வில்சன். கதறக் கதற தாக்கி இருக்கிறார். வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. மரியவில்சன், அவரது அப்பா நெஸ்தோஸ் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மரியவில்சன், கடந்த 4 ஆம் தேதியன்று நீதிமன்றத்திற்கு நேரில் சென்றிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அவரை மீண்டும் 18 ஆம் தேதியன்று வரச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.
அமைச்சர் சரத்குமார் : பொது இடத்தில் போதை மருந்தைப் பயன்படுத்தி மாட்டிக் கொண்டவர் இவர். ‘குழந்தைக்கு மாத்திரையை நசுக்கிக் கொடுத்தேன்' என்பதை அந்தக் குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது. இது மட்டுமல்ல, பல வீடி- யோக்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த வீடியோக்களை வெளியிட்டார் என்று சொல்லி சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரும் பதிவாகி இருக்கிறது.
அமைச்சர் விஸ்வநாதன் : விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஓடிய மாணவிகள் காலை நீட்டி உட்கார்ந்திருந்தபோது அருவெறுப்பாக நடந்து கொண்டுள்ளார் உயர் கல்வி அமைச்சர் விஸ்வநாதன். மாணவிகளது காலைத் தொட்டும், அவர்களது விரல்களுக்கு சொடுக்கு எடுத்தும் மிக மோசமாக நடந்து கொண்டார். இவை அனைத்தும் போக்சோ சட்டப்படி குற்றங்கள் ஆகும். இவர் மீது போக்சோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நல அமைப்புகள் டெல்லி குழந்தைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி இருக்கின்றன. ஆளுநரிடம் பா.ஜ.க. நேரடியாக புகார் தந்துள்ளது.
- இப்படி லஞ்சம், ஊழல், 41 பேர் மரணம், பாலியல், போக்சோ, போதைமருந்து, அடிதடிகள், தாக்குதல்கள், குதிரை பேரம் இப்படி தண்டனைச் சட்டத்தின்அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு வழக்குகளில் தூயசக்தி அமைச்சர்கள் துர்நாற்றம் அடிக்கும் வகையில் சிக்கி வருகிறார்கள்.






