முரசொலி தலையங்கம்

பட்ஜெட் 2021ல் ‘கரைத்தல்’ மட்டுமே உள்ளது: “உருவாக்கியதை உருக்குலைத்த அரசு” - முரசொலி கடும் விமர்சனம்!

கஷ்ட காலத்தில் இருக்கும் நிறுவனங்களை விற்ற காலம் போய் லாபத்தில் இயங்குவதையும் விற்பதால் யாருக்கு லாபம்? தனியாருக்குத்தான் லாபம். அதைத்தான் செய்கிறது பா.ஜ.க.

பட்ஜெட் 2021ல் ‘கரைத்தல்’ மட்டுமே உள்ளது:  “உருவாக்கியதை உருக்குலைத்த அரசு” - முரசொலி கடும் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு தாக்கல் செய்த 2021ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை விமர்சித்து முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-

உருவாக்க அறுபது ஆண்டுகள் தேவை. ஆனால் உருக்குலைக்க ஆறு ஆண்டுகள் போதும் என்பதை பா.ஜ.க. அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது. அரசு என்பதன் நோக்கத்தையே சிதைத்த அரசுதான், பா.ஜ.க. அரசு. இதனை அரசு என்று சொல்வதைவிட தனியாரின் அரசு என்று சொல்லலாம்.

எதையும் உருவாக்க இவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் உருக்குலைக்க மட்டுமே தெரிகிறது. நிர்மலா சீதாராமனுக்கு, இந்தியாவின் நிதி நிர்வாகத்தை நிர்மூலம் செய்யும் காரியம்தான் தரப்பட்டுள்ளது போலும்! இதற்கு அவர் திருவள்ளுவரை மேற்கோள் காட்டுவது திருவள்ளுவருக்கே அவமானம்! ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ - என்று நிர்மலா சீதாராமன்களுக்காக திருவள்ளுவர் தீட்டவில்லை. நிதியை உருவாக்குபவர்களுக்காக எழுதினார். உருக்குலைப்பவர்களுக்கு அல்ல!

பட்ஜெட் 2021ல் ‘கரைத்தல்’ மட்டுமே உள்ளது:  “உருவாக்கியதை உருக்குலைத்த அரசு” - முரசொலி கடும் விமர்சனம்!

விதை நெல்லை விற்பவர்களுக்காக திருக்குறள் தீட்டப்படவில்லை. விதை நெல் மூலமாக விளைவிப்பவர்களுக்காகத் தீட்டினார். ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நிதி நிலை அறிக்கை மூலமாக எந்தெந்த பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கினோம் என்பதைச் சொல்வதில்லை பா.ஜ.க.! எந்தெந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்றோம் என்று சொல்கிறார்கள். இதற்குப் பெயர் எப்படி பட்ஜெட் ஆகும்? பரம்பரைச் சொத்தை விற்றுக் கஞ்சி குடிப்பவன் எப்படி முதலாளி என்று சொல்லிக்கொள்ள முடியாதோ அப்படித்தான் இதுவும்! இதோ நிர்மலா சீதாராமன் ஏலம் விடுகிறார்.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்று கொண்டு "பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுகக் கழகம், ஐ.டி.பி.ஐ. வங்கி, பவன் ஹன்ஸ் (ஹெலிகாப்டர் நிறுவனம்), கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் அமலாக்கப்படும். 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் - அரசு கூட்டுப்பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெறமுடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார்பங்களிப்பு அவசியம்". இதுதான் நிர்மலா சீதாராமனின் தனியாருக்குத் தாரை வார்க்கும் படலம். இப்படி நிர்மலா பேசி வரும் போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘அதானி - அதானி’ என்று முழக்கமிட்டார்கள். யாருக்காக நிர்மலா சீதாராமன் பேசுகிறார் என்பதை எம்.பி.க்கள் சொன்னார்கள்.

கஷ்ட காலத்தில் இருக்கும் நிறுவனங்களை விற்ற காலம் போய் லாபத்தில் இயங்குவதையும் விற்பதால் யாருக்கு லாபம்? தனியாருக்குத்தான் லாபம். அதைத்தான் செய்கிறது பா.ஜ.க. லட்சக்கணக்கான கோடி ரூபாய் உடைய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை எதற்காக விற்க வேண்டும்? இன்சூரன்ஸ் துறையில் 49 சதவிகிதம் உள்ள அந்நிய நேரடி மூலதனத்தை எதற்காக74 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்? என்ன நோக்கத்துக்காக இவை செய்யப்படுகின்றன? "இந்தியாவின் சொத்துக்களை பிரதமரின் செல்வந்த நண்பர்களுக்கு விற்கும் பட்ஜெட்" என்று ராகுல் காந்தி சொல்லி இருப்பதுதான் இதன் உண்மையான நோக்கம்.

இதற்கான பம்மாத்து வார்த்தைதான் "சுயச்சார்பு." "யாருடைய சுயச்சார்பு? ஒரு அரசு, தன் சுயத்தை இழப்பதுதான் சுயச்சார்பா? ஒரு அரசு, தனது நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் சுயச்சார்பா? அதுவும் குறிப்பிட்ட ஒன்றிரண்டு வடமாநில நிறுவனங்களின் வசதிக்காக விற்பதுதான் சுயச்சார்பா?" வளர்ச்சியின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளது இந்த பட்ஜெட் என்கிறார் பிரதமர்! யாருடைய வளர்ச்சி என்று சொல்லவில்லை! "மத்திய பட்ஜெட் என்பது வெளிப்படையானது" என்கிறார் நிர்மலாசீதாராமன்.

ஆமாம் வெளிப்படையாகவே தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான். அதை ஒளிவு மறைவு இல்லாமல் செய்கிறார்கள். இந்த வரிசையில், என்னைப் போலவே மாநில அரசுகளும் பொதுத்துறை பங்குகளை விற்றுக் கொள்ளுங்கள் என்ற அறிவுரையையும் நிர்மலா சொல்லி இருக்கிறார். இதில் இயற்றலும் இல்லை. ஈட்டலும் இல்லை. காத்தலும் இல்லை. காத்த வகுத்தலும் இல்லை. ‘கரைத்தல்’ மட்டுமே இருக்கிறது! இன்னும் ஐந்தாண்டில் நாடாளுமன்றக் கட்டடத்தைத் தவிரஅனைத்தையும் விற்று விடுவார்கள்.

banner

Related Stories

Related Stories