
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2021ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டமான விடியல் பயணத்திட்டத்தில், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண் பயணிகள் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடியல் பயணம் தொடங்கப்பட்டதில் இருந்து 57.81 லட்சம் பெண்கள் தினசரி பேருந்துகளில் பயணம் செய்வதாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றது. தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 7,705 மகளிர் விடியல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 1,711 பேருந்துகள் மகளிருக்காக இயக்கப்படுகின்றன. அண்மையில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பெண்களுக்கான பிரத்யேக கட்டணமில்லா பிங்க் பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையின் படி மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் ஒரு பயனாளி மாதம் ஒன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.888 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை சேமிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தொகை வேலைக்கு செல்லும் பெண்களின் மாத வருமானத்தில் 11.4 சதவீதமாகும். இதில் சேமிக்கப்படும் பணத்தை கொண்டு குழந்தைகளின் கல்வி, சத்தான உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்காக பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வேலூரை சார்ந்த கலைவாணி மற்றும் ஆற்காட்டை சேர்ந்த பானுமதி ஆகிய 2 பெண்கள் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை 6 நாட்களாக மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் பேசுகையில், “இந்தியாவில் முதன்மையாக திகழும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மகளிர் விடியில் பயணம் பேருந்து திட்டத்தில் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்று மக்கள் பலருக்கும் தெரியவில்லை.
அதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பிப்ரவரி 1ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் என ஒவ்வொரு ஊர்களிலும் மகளிர் விடியல் பேருந்தில் பயணம் செய்து 6ம் தேதி மாலை சென்னைக்கு மகளிர் விடியல் பயணம் மூலம் பயணம் செய்து வந்திருக்கிறோம்”.
“தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புகள் உள்ளது என்பதற்காக விழிப்புணர்வு பயணமாக இதை மேற்கொண்டு இருக்கிறோம். எல்லா நேரமும் பெண்களிடம் காசு இருக்காது. அந்த நேரங்களில் இந்த இலவச பேருந்து பயணங்கள் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் இந்த ஆட்சியை வெற்றி ஆட்சியாக பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது”.

தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெண்கள் இவ்வளவு தூரம் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதற்கு சான்றாக நாங்கள் பயணித்திருக்கிறோம். திருச்சியில் அமைச்சர் நேருவை சந்தித்து அவரிடமும் வாழ்த்துக்களை பெற்றோம். அமைச்சர்கள் அதிகாரிகள் அலுவலர்களின் பலரும் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
6 நாட்களாக பயணம் செய்வதற்கான பயண சீட்டும் வைத்திருக்கிறோம். உங்களுக்கு உதவிகள் வேண்டும் எதுவும் வேணுமா என்று பொதுமக்களும் கேட்டதாகவும், தமிழ்நாடு அரசுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்” வழிநெடுகிலும் பெண்கள் கூறினர்.
பெண்களுக்கான 'பிங்க் பஸ்' சேவை தொடங்கப்பட்டு அதில் பெண்கள் பாதுகாப்பாக பயனிப்பதாகவும், மிகவும் உதவியாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு பயணம் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.






