அரசியல்

பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!

தயக்கத்தில் மட்டுமே திளைத்திருக்கும் த.வெ.க.வின் அலட்சிய ஆட்சியாளர்களின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவே வித்திடுகிறது.

பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தேசிய அளவில் எளிய மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் வகையில், ‘நீட்’ நுழைவுத் தேர்வு என்னும் தேவையற்ற, ஒரு சார்பு மக்களை மட்டுமே மருத்துவராக்குகிற, ஒரு தேர்வு முறையை அறிமுகம் செய்து, அதற்கும் சரியான செயல் வடிவம் கொடுக்காத தோல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு.

அனிதா தொடங்கி, நீட் நெருக்கடியால் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டவர்கள் ஏராளம். இதற்கு எதிராக தேசிய அளவில் கண்டனங்கள் வலுத்து வருவது, கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

மாணவர்கள், தங்களது கல்விக் கனவை அடைவது, கல்விக்கு பிறகு உரிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் பொருளியல் நெருக்கடிக்கு உள்ளாவது என நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள், எண்ணற்ற தடைகளை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர்.

இந்த தடைகளை தகர்த்தெரியும் வகையில், நீட் தேர்வை முடித்துக்கட்டும் வகையில், ஒன்றிய ஆட்சியாளர்களின் அவல ஆட்சியை அவிழ்த்தெறியும் வகையில், டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்துள்ள மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டம், இன்று தேசிய அளவில் வலுத்து வருகிறது.

மாணவர்கள்தான் அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகிறவர்கள் என்பதன் எடுத்துக்காட்டாய், தலைநகரில் தோன்றிய புரட்சி, இன்று பரவலாக பல மாநிலங்களிலும் கிளர்ந்தெழுந்து வருகிறது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கல்விக் கண் திறந்த காமராசர் ஆகியோர்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கும் த.வெ.க.வும், அதன் தலைவரான முதலமைச்சர் விஜய்யும், உண்மையில் இப்போராட்டத்திற்கு முதல் ஆளாக ஆதரவுக் குரல் எழுப்பியிருக்க வேண்டும்.

பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!

ஆனால், இன்றளவும் வெற்று திரைப்பட விளம்பரங்களுக்கு பதாகை வைக்க சண்டையிட்டுக் கொள்வது, யார் சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளனர் என கணக்குக் காட்டிக்கொள்வது ஆகியவற்றில்தான் த.வெ.க.வினருக்கு ஆர்வம் கூடியுள்ளதே தவிர, மக்களின் சிக்கல்களுக்கு தோளோடு தோள் நிற்கும் மனநிலைக்கு ஆர்வம் கூடுவதாக இல்லை.

தமிழ்நாட்டின் அரசும், ஆளுங்கட்சியும் மக்களோடு இல்லை என்பதை உணர்ந்து, சாலையில் இறங்கி போராட தமிழ்நாட்டின் மாணவர்களும், இளைஞர்களும் துணிந்த நேரத்தில், அதுவரை வாய் மூடி, கைக்கட்டி இருந்த தமிழ்நாடு அரசின் காவல்துறை, அறப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மட்டும் முந்திக்கொண்டு வந்துள்ளது.

தனது கைக்குள் இருக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த, முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரமில்லாமல் இருந்தால், பதவியை வைத்து என்னதான் செய்ய?

அப்படி ஒருவேளை அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது என்றால்... மாணவர்களின் போராட்டத்திற்கு வழிவிட எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது?

ஆள்வது த.வெ.க.வாக இருந்தாலும், நடவடிக்கைகள் பா.ஜ.க.விற்கு சார்பாக இருப்பதன் பின்னணிதான் என்ன?

ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியிலும் அறப் போராட்டத்தில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்; தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் அறப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றால், தமிழ்நாடு தேடிப் பெற்ற மாற்றம் இதுதானா?

பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!

முதலமைச்சர் பதவி என்பது, வெறும் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு தேய்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல. மாநிலத்திற்கான உரிமையையும், மக்களுக்கான உரிமையையும், இளைஞர்கள் - மாணவர்களின் எதிர்காலத்தையும் உறுதி செய்வதும்தான்.

இத்தனை கோடி மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என மார்தட்டிக் கொள்வதில் இருக்கிற நெஞ்சுரம்; நான் மக்களோடு இருக்கிறேன் என மேடைப் பேச்சுகளில் காட்டுகிற நெஞ்சுரம்; கள அரசியலிலும் தேவை முதலமைச்சர் அவர்களே..!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் என்ற பெயரில் தங்க மோதிரம் இடுவதைவிட, அக்குழந்தைகளின் எதிர்காலத்திற்கான உரிய சமூகக் கட்டமைப்பை உறுதி செய்வது முக்கியமானது.

அரசியல் என்பது வெறும் அதிகாரத்திற்கானது மட்டுமல்ல, அதிகாரம் என்பது அலங்கார நாற்காலியில் உட்காருவதற்கு மட்டுமல்ல, மக்கள் சேவைப் பணியில் மக்களுக்கான பணி இருந்திட வேண்டும்.

மக்களின் வாக்கைப் பெற்று, மக்களின் வரிப்பணத்தை அனுபவிக்கும் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள், மக்களின் நிகராளிகளாக இருக்க வேண்டுமே தவிர, அதிகார அத்துமீறலுக்கான கருவியாக இருந்திவிடக் கூடாது.

பிறப்பு, கல்வி, சமூகம், மதம், சாதி என பல வகைகளில் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் கருத்தியலைக் கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் அட்டூழியத்தை வெளிப்படுத்த தி.மு.க தயங்காதபோது, பொதுவுடைமையாளர்கள் தயங்காதபோது, அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் தயங்காதபோது, சரியான தமிழ் தேசியம் பேசுபவர்கள் தயங்காத போது;

தயக்கத்தில் மட்டுமே திளைத்திருக்கும் த.வெ.க.வின் அலட்சிய ஆட்சியாளர்களின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவே வித்திடுகிறது. இதனை த.வெ.க.வினர் விரைவில் திருத்திக்கொள்ளாவிட்டால், மக்கள் திருத்தும் நேரம் வெகு தொலைவில் இல்லை.

banner

Related Stories

Related Stories