இந்தியா

முரண்டுபிடிக்கும் பா.ஜ.க அரசு.. போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதி- தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

சட்டங்களை திரும்பப்பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசும் உறுதியாக இருப்பதால் 8-ம் கட்டமாக நடந்த இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

முரண்டுபிடிக்கும் பா.ஜ.க அரசு.. போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதி- தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவவசாயிகளின் போராட்டம் இன்று 44-வது நாளை எட்டியுள்ளது.

மத்திய அரசுக்கும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே 7 சுற்றுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இன்று 8வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டெல்லியில் விக்யான் பவன் அரங்கில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

“போராட்டத்தின் மூலம் வெற்றியை எட்டுவோம்; இல்லையெனில் உயிரை விடுவோம்” என்று எழுதப்பட்ட பதாகையை பேச்சுவார்த்தை நடைபெறும் மேஜையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், 2 மணி நேரத்திற்கும் குறைவாக நீடித்த இன்றைய பேச்சுவார்த்தையும் எந்தவித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை அரங்கில் விவசாயிகள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முரண்டுபிடிக்கும் பா.ஜ.க அரசு.. போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதி- தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விவசாய சங்கங்களும், சட்டங்களை திரும்பப்பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசும் உறுதியாக இருப்பதால் 8-ம் கட்டமாக நடந்த இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

இரு தரப்புக்கும் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 15-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலர் ஹனன் மொல்லா கூறுகையில், “இன்று நடந்த ஆலோசனையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதை தவிர வேறு எதுவும் தேவையில்லை என தெரிவித்தோம். சட்டங்கள் நீக்கப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டெல்லியில் தேசியக் கொடியுடன் டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசின் பிடிவாதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “விவசாயிகளின் கோரிக்கைகளை பா.ஜ.க அரசு இன்றைய பேச்சுவார்த்தையின்போதும் நிராகரித்தது மிகவும் கவலைக்குரியது; கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் போராட்டத்திற்கு தி.மு.க-வின் தொடர் ஆதரவைத் தெரிவிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories