இந்தியா

“இன்றைய பேச்சுவார்த்தையில் எங்கள் நம்பிக்கையை உடைத்தெறிந்துவிட்டது பா.ஜ.க அரசு” - விவசாயிகள் அதிருப்தி!

பா.ஜ.க அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று பிடிவாதமாக இருப்பதால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

“இன்றைய பேச்சுவார்த்தையில் எங்கள் நம்பிக்கையை உடைத்தெறிந்துவிட்டது பா.ஜ.க அரசு” - விவசாயிகள் அதிருப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து 40வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிரது. இதுவரை பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும் மத்திய அரசின் பிடிவாதத்தால் இதுவரை சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எட்டாம் தேதி நடைபெறும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்து நம்பிக்கையையும் உடைத்தெறிந்திருப்பதாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வரும் 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கருத்துகளை தெரிவிக்கும்படி அமைச்சர்கள் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்றும் அமைச்சர்கள் தெரிவித்ததாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சட்டங்களை முதலில் திரும்பப்பெற வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருந்ததாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்பதால் மீண்டும் எட்டாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால், பா.ஜ.க அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று பிடிவாதமாக இருப்பதால் எட்டாம் தேதி பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக நாளை விவசாய சங்க பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories