Tamilnadu

தந்தை பலியான அதே இடத்தில் சோகம் : விபரீத முடிவெடுத்த பிளஸ்-2 மாணவி!

திருப்பூர் செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜானகி. இவர் மங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்குச் சாதனா (16) என்ற ஒரே மகள் இருந்தார். சாதனா, தனது தாய் பணியாற்றி வந்த அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர்களது வீட்டில் இருந்து பள்ளி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால், சாதனா தினமும் வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். தினமும் காலையில் தந்தை கார்த்திக், மகளைப் பத்திரமாக அழைத்துச் சென்று தண்டவாளத்தைக் கடக்க விட்டு, பள்ளியில் கொண்டு போய் விட்டுவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் மகள் சாதனாவைப் பள்ளியில் விட்டுவிட்டுக் கார்த்திக் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த ரயில், எதிர்பாராத விதமாகக் கார்த்திக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தன் மீது உயிரையே வைத்திருந்த தந்தையின் திடீர் மரணம், மாணவி சாதனாவை நிலைகுலையச் செய்தது. தந்தை இறந்த சோகத்தில் இருந்து அவரால் மீண்டு வரவே முடியவில்லை. எப்போதும் கலகலப்பாகச் சுற்றித்திரிந்த சாதனா, தந்தையின் மறைவுக்குப் பிறகு மிகவும் அமைதியாகியுள்ளார்.

பள்ளியில் சக மாணவிகளிடம் தனது அப்பாவின் பாசத்தைப் பற்றியும், அவருடன் கழித்த நினைவுகளைப் பற்றியும் தினமும் உருக்கமாகப் பேசி வந்துள்ளார். "அப்பா இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை" என்று கூறி அவர் அடிக்கடி கண் கலங்கியுள்ளார். சக மாணவிகளும், ஆசிரியைகளும் அவருக்குப் பல்வேறு விதங்களில் ஆறுதல் கூறிய போதிலும், மாணவியால் தனது தந்தையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், நேற்று (நவ.18) மாலை பள்ளி முடிந்ததும் மாணவி சாதனா வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது வீட்டின் அருகே தனது தந்தை கார்த்திக் ரயில் மோதி இறந்த அதே இடத்திற்குச் சென்ற சாதனா, சோகத்துடன் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில், தண்டவாளத்தில் பாய்ந்த மாணவி சாதனா ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவி சாதனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு கணவரை ரயில் விபத்தில் பறிகொடுத்த நிலையில், தற்போது ஒரே மகளையும் அதே இடத்தில் பறிகொடுத்த ஆசிரியை ஜானகி, மகளின் உடலைப் பார்த்துக் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. தந்தை இறந்த சோகத்தில், அவர் பலியான அதே இடத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் அல்லது தற்கொ* எண்ணங்கள் ஏற்பட்டால் 14416 / 044-24640050 என்ற தற்கொ* தடுப்பு உதவி எண்களை அழைக்கவும்!

Also Read: உஷார்.. தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள்.. உள்ளே நுழைந்த கட்டுவிரியன் பாம்பு.. கள்ளக்குறிச்சியில் சோகம்!