
தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு அடுத்தடுத்து நோட்டீஸ்கள்! மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே அவற்றுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது! சென்னை டூமிங் குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் டிடிடிசி நகர் மஸ்ஜிதே குபா திருவள்ளுவர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மெய்யூர் குருபுரம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்கள் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பள்ளிவாசல்களை அகற்றுவது தொடர்பாக அரசு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
சென்னை டூமிங் குப்பம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்றக் கோரி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதியில் 1,484 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான திட்டத்தைச் சுட்டிக்காட்டி, பள்ளிவாசலை பத்து நாட்களுக்குள் தாங்களாகவே அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தொடர்பாகவும் ஏற்கெனவே அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை மெய்யூர் குருபுரம் பள்ளிவாசல் உள்ள மற்றொரு பள்ளிவாசல் அப்பகுதி வட்டாச்சியரால் எவ்வித முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டுள்ளது என தொடர்ச்சியாக அகற்றும் நடவடிக்கை அச்சத்தையும் பதற்றத்தையும் எற்படுத்தியுள்ளது.
இவ்வாறு வெவ்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்கள் தொடர்பாக அடுத்தடுத்து எழும் நிர்வாக நடவடிக்கைகள், தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்த நியாயமான கேள்விகளை எழுப்புகின்றன.
ஒரு பள்ளிவாசல் அல்லது வேறு எந்த மத வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், அதன் நில உரிமை, வக்ஃப் ஆவணங்கள், வருவாய்த்துறைப் பதிவுகள், நீண்டகாலப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தையும் முறையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நீதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.
தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தனது அரசியலமைப்புக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளிவாசல்களை இலக்காகக் கொண்டு அரசு நிர்வாகம் செயல்படுகிறது என்ற அச்சமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் உருவாக இடமளிக்கக் கூடாது.
எனவே, தமிழக அரசுக்கு நான் முன்வைக்கும் கோரிக்கைகள்:
டூமிங் குப்பம் பள்ளிவாசலை அகற்றக் கோரும் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
கூடுவாஞ்சேரி மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தொடர்பாக நிலவும் பிரச்சினைக்கு சட்டப்படியும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டும் தீர்வு காண வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிவாசல் அதே இடத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகங்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, வெளிப்படையான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளில் மதச்சார்பற்ற அணுகுமுறையையும் அரசியலமைப்பு உத்தரவாதங்களையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
கட்டடங்களைக் கட்டுவது வளர்ச்சி; மக்களின் வழிபாட்டுரிமையைப் பாதுகாப்பது அரசின் கடமை!
சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவது என்பது ஒரு சமூகத்தின் மத உரிமை மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் அடையாளமாகும்.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் பள்ளிவாசல்கள் தொடர்பாக அடுத்தடுத்து உருவாகும் அச்சுறுத்தல்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






