
சென்னை கொளத்தூர் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு ( 75), கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போதே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியானது. இதற்கடுத்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன.
ஆனால், இடையில் வி.எஸ்.பாபு உடல்நிலைகுறித்து எந்தத் தகவலும் வெளியாகாததால், அவரது சிகிச்சை நிலை குறித்த மர்மம் நீடித்தது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றைய தினம் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுமார் 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு, இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியது. இதையடுத்து அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ”கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ”சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.






