
ஒரு சதவீதம்கூட உண்மையில்லாத ஒரு தகவலை வைத்து ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறது ஜீனியர் விகடன் இதழ் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, ”13.11.2026 அன்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நெடுஞ்சாலைத்துறையில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். அதற்கு நான் ஏற்கனவே முழுமையான விளக்கம் அளித்துவிட்டேன்.
நெடுஞ்சாலைத்துறையைப் பொறுத்தவரை, கோட்டப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் தலைமையில்தான் பணிகள் அனைத்தும் நடைபெறும். நான் அமைச்சராக இருந்த காலத்தில், உரிய ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) கோரப்படாமல் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதற்கான ஆதாரங்களை உரிய பதிவேடுகளைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், கோட்டப் பொறியாளர் தலைமையில் டெண்டர் முறையாக விடப்பட்டுள்ளதா மற்றும் கணக்கு வழக்குகள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்க, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் 'உள் தணிக்கை' (Internal Audit) நடைபெறுகிறது.
சாலையோரச் செடிகளை வெட்டுதல், மரங்களுக்கு வர்ணம் பூசி எண் எழுதுதல், பாலங்களைச் சீரமைத்தல், சிறுபாலங்கள் மற்றும் கல்வெட்டுகளின் நீர்வழிப் பாதைகளைச் சுத்தம் செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பராமரிப்புப் பணிகள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெறக்கூடியவை ஆகும்.
அரசால் ஒதுக்கப்படும் நிதியில் 80 சதவீதப் பணம் இப்பராமரிப்புப் பணிகளுக்கும், மீதமுள்ள 20 சதவீதப் பணம் மழை மற்றும் வெள்ளம் போன்ற அவசரக் காலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இதற்கான முழுமையான நடைமுறை விளக்கங்கள் அரசு அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
இந்நிலையில், ஒரு சதவீதம்கூட உண்மையில்லாத ஒரு தகவலை வைத்து ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறது ஜீனியர் விகடன். என்னைப் பற்றி தவறான செய்தியை பரப்பிய அவர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். மான நஷ்ட ஈடாக ரூ.10 கோடி வழங்கி, பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதி கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.
இரண்டு முறை அமைச்சராக இருந்திருக்கிறேன். ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்காகச் செய்திருக்கிறேன். பொதுவாழ்வில் இருக்கும் என்னைப் பற்றி வேண்டுமென்றே புறங்கூறும் நடவடிக்கை மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது." என தெரிவித்துள்ளார்.






