
தமிழ்நாட்டுப் பெண்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்திற்காக தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகள் பலருக்கு, இம்மாதத்திற்கான தொகை விடுவிக்கப்படாதது சர்ச்சையாகியுள்ளது.
இதனைக் கண்டித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைந்துவந்த பலருக்கு இம்மாதத்துக்கான தொகை வரவில்லை என்று தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடுப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் சுயமரியாதையும் கருத்தில் கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமல்படுத்தினார் எங்கள் கழகத் தலைவர்.
1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கழக ஆட்சியில் தவறாமல் ஒவ்வொரு மாதமும் 14, 15-ம் தேதிகளில் வரவு வைக்கப்படும். ஆனால், நவம்பர் மாதத் தொகை பயனாளிகளுக்கு இதுநாள்வரை சென்று சேரவில்லை.

சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு மகளிர் உரிமைத்தொகை முழுமையாக சென்றடையவில்லை என்ற தகவல் தெரியுமா?
நான் முதலமைச்சரானால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைக்கூட தகுதியுள்ள பெண்களுக்குத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்துவது எந்த வகையில் நியாயம் முதல்வரே..
கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விரைவில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்தார். அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகையைத் தொடர்ந்து வழங்காமல் நிறுத்த முனைவது ஏன்?
எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கேள்விகளுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மெளனமாக இருக்கும் முதல்வர் இதற்காவது உரிய விளக்கத்தை அளிப்பாரா?
தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவது நல்லாட்சிக்கான அடையாளமல்ல; மக்களின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம்.
எனவே உடனடியாக அனைத்து பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்!







