Tamilnadu

“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!

தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறை சார்பில் மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது என சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில் 'ராம் யாத்ரா' என்ற பெயரில் அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழுவினருடன் இணைந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநாட்ட வேண்டிய ஒரு அரசே, தனது அதிகாரப்பூர்வ துறையின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத இதிகாச மரபையும், குறியீடுகளையும் முன்னிறுத்தி இந்நிகழ்ச்சியை நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

சுற்றுலாத் துறை என்பது தமிழ்நாட்டின் பன்முகப் பண்பாடு, வரலாறு, இயற்கை வளங்கள் மற்றும் கலைகளை உலகிற்கு பறைசாற்றும் அமைப்பாக இருக்க வேண்டும். அதை விடுத்து, அரசு நிர்வாகமே நேரடியாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு துணை போவது மதச்சார்பின்மைக்கு எதிரானது.

மேலும், சுட்டெரிக்கும் கடுமையான வெயிலில் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகளை நீண்ட நேரம் காவி ஆடைகளுடன் நிற்க வைத்து நடனமாடச் செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் உயர்த்திப் பிடிக்கும் மத அடையாளங்களுடன் குழந்தைகளை ஈடுபடுத்தியது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் பன்முகத் தன்மையையும், மதச்சார்பற்ற அமைதியையும் சீர்குலைக்கும் இத்தகைய போக்குகளை அரசாங்கம் பின்பற்றுவது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு விழாக்களும், துறை சார்ந்த நிகழ்வுகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பற்ற கோட்பாடுகளுக்கு உட்பட்டே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!