தமிழ்நாடு

வேட்பாளரிடம் பணம் பெற்றுகொண்டு சீட்... தவெக IT Wing நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!

வேட்பாளரிடம் பணம் பெற்றுகொண்டு சீட்... தவெக IT Wing நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இதுவரை ஒரு முறை கூட மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சுந்தர்ராஜ் மாவட்ட நிர்வாக வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், மாநிலத் தலைமை தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாகக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் தாம், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளராகவும், மாவட்ட வர்த்தக அணி, கொள்கைப் பரப்பு அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளின் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருவதாக எம்.சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தின் சில செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லாததால், கடந்த நவம்பர் 13-ம் தேதி மாவட்டச் செயற்குழு, மாநகரச் செயற்குழு, கோர் டீம் மற்றும் அணிகளின் வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து முன்னறிவிப்புடன் விலகியதாகவும், எனினும் தாம் கட்சியின் அடிப்படை உறுப்பினராகவும் மண்டல இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமது விலகல் செய்தி அறிந்து சுமார் 140-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தம்மைத் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.மாதவன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார் ஆகியோரின் தலைமையிலான மாவட்ட நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அறவே இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வேட்பாளரிடம் பணம் பெற்றுகொண்டு சீட்... தவெக IT Wing நிர்வாகியின் வீடியோவால் பரபரப்பு!

மாவட்டச் செயற்குழு, மண்டலப் பொறுப்பாளர்கள், மாநகர, நகராட்சி, ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் அணித் தலைவர்கள் என 38 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவரை ஒரு முறை கூட நடத்தப்படவில்லை என்றும், கடந்த 2025 நவம்பர் 18 மற்றும் இந்த ஆண்டு நவம்பர் 4 ஆகிய தேதிகளில் கூட்டம் கூட்ட வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட பெர்வின் கிங்ஸ் என்பவரிடம் தேர்தல் நேரத்தில் ரூ.50 லட்சம் பேரம் பேசியதாகவும் அவரால் அதனை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் கருத்து வேறுபாடு உருவாக்கப்பட்டு தற்போது அவர் கட்சியிலிருந்து முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.சுந்தர்ராஜ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேர்தல் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்ட அவர், மாற்றுக் கட்சிகளிலிருந்து வருபவர்களைச் சக நிர்வாகிகளுக்கு முறையாக அறிமுகப்படுத்தாமல் புதியவர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் ஒதுங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாவட்டச் செயற்குழு முடங்கியுள்ளதாகவும், கட்சிப் பணிகள் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ள அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் மாநிலத் தலைமை இவ்விவகாரத்தில் தலையிட்டு விசாரித்து, அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2026 தேர்தலில் வேட்பாளரிடம் பணம் பெற்றுகொண்டுதான் சீட் வழங்கியது உறுதியாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories