Tamilnadu

“கவுன்சிலர் சீட் முதல் அரசு பதவி வரை கமிஷன் தர வேண்டும்” : த.வெ.க நிர்வாகி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (த.வெ.க.) ஆட்சியில், அரசுப் பதவிகள் மற்றும் டெண்டர்களில் முறைகேடு தொடர்பாக கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ‘குஷி’ மோகன்ராஜ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், நடிகர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, த.வெ.க.வின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் ‘குஷி’ மோகன்ராஜ், அரசுப் பதவிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் சீட்களுக்கு விலை நிர்ணயித்து வசூலில் ஈடுபட்டுள்ளதாக கட்சியினரே குற்றம்சாட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், குவாரி பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு தனது ஆதரவாளர்களுடன் நேரில் சென்ற மோகன்ராஜ், “இனி அனைத்து டெண்டர்களிலும் மாதந்தோறும் கமிஷன் வழங்க வேண்டும்” என அதிகாரிகளிடம் கேட்டதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சில அதிகாரிகள், “ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கும்போது, நீங்கள் மட்டும் தனியாக வந்து கேட்பது எப்படி?” என கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் த.வெ.க. நிர்வாகிகளிடம், நகராட்சி கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.3 லட்சம், ஒன்றிய கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.5 லட்சம், மாவட்ட கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.10 லட்சம் என பேரம் பேசப்பட்டதாகவும் ஜூனியர் விகடன் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஆவின் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சம், அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக த.வெ.க. பிரமுகர்களே தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே “குதிரை பேரம்” மூலம் த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது கட்சியின் நிர்வாகிகள் அரசுப் பதவிகள் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் விலை நிர்ணயித்து பேரம் பேசி வருவதாக வெளியாகியுள்ள இந்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”கோயபல்ஸ் உத்தியை பின்பற்றும் தவெக.. பொய் மேல் பொய்.. போலிக்கே போலி.. தவெக-வின் முரட்டு உருட்டுகள்”