
வாக்காளர் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத் துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., மற்றும் சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு தி.மு.கழகத்தின் சார்பில் பின்வரும் கருத்துக்களை எடுத்துவைத்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் (SIR) நடைமுறைகளால் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் அமைப்பின் மீதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஐயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
SIR நடவடிக்கையின் காரணமாகத் தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்களும், இறுதிப் பட்டியலிலிருந்து 74 லட்சம் பெயர்களும் எவ்வித முறையான முன் அறிவிப்புமின்றி தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளன.
ஒரே முகவரியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தகுதியான குடிமக்களின் பெயர்கள் அகற்றப்பட்டிருப்பது வாக்காளர் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
தன்னிச்சையாக நீக்கப்பட்ட வாக்காளர்களைக் கண்டறிந்து மீண்டும் சேர்க்கைக்கான படிவங்களை சமர்ப்பிக்கும் தேவையற்ற பெரும் சுமையை அப்பாவி பொதுமக்கள் மீதே தேர்தல் ஆணையம் திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட இப்பணியால் ஒட்டுமொத்தத் தேர்தல் முறையுமே சீர்குலைந்துள்ளது.

கடந்த காலத்தில் 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற SIR பணியின் போது வீடு வீடாக நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு, வாக்காளர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு, முகவரிகள் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பிறகே அடையாள அட்டை வழங்கப்பட்டன. யாரிடமும் குடியுரிமைச் சான்று கோரப்படவில்லை. தற்போதைய SIR இதை தலைகீழாக்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு பட்டியலுடன் இணைக்க முடியாத ஒவ்வொருவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது குடியுரிமைச் சட்டங்களை (Citizenship Laws) மனதில் கொண்டும், குறிப்பிட்ட வாக்காளர்களின் பெயர்களை மட்டும் பெருமளவில் நீக்கும் உள்நோக்கத்துடனும் இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோ என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
தற்போது காணப்பட்டுள்ள SIR குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை முழுமையாகக் நீக்கிவிட்டு, முந்தைய நம்பகமான வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே வரவிருக்கும் தேர்தல்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
அதுபோல வாக்குச் சாவடிகள் மறுவரைவு செய்யப்படுவதில் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதால்,
வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
முழுமையான வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் விடுபடாமல் சேர்க்கப்பட்ட பின்னரே, அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையைப் பெற்று ஒருமித்த கருத்து அடிப்படையில் வாக்குச் சாவடி மறுவரைவு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்டு, திட்டமிட்டு வாக்காளர்களை நீக்க வழிசெய்த S.I.R. முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும். S.I.R.-க்கு முந்தைய வாக்காளர் பட்டியலைக் கொண்டே இனி வரும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மக்களின் வாக்குரிமையை உறுதிசெய்வதற்கான நடைமுறையாக இருக்க வேண்டுமே தவிர, வாக்குரிமையைப் பறிக்கும் சதி ஆயுதமாக மாற்றப்படக் கூடாது. போதுமான கால அவகாசமும், வாய்ப்புகளும் தரப்பட்டே இனி அப்படிப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. EVM-களில் பதிவான வாக்குகளுக்கும் VVPAT ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் இருப்பது தொடர்ந்து 2 இடங்களில் கண்டுபிடிக்கப்படுவது இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான், VVPAT ஸ்லிப்புகள் முழுமையாக எண்ணப்பட வேண்டுமெனத் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மற்றும் VVPAT செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை பேணப்படுவதோடு அனைத்து கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் தொழில்நுட்ப செயல்முறைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இணைய வழியில் புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களின் முகவரி மற்றும் தகுதிகளை நேரடியாக சரிபார்ப்பு மூலம் ஆய்வு செய்வதற்கு அரசியல் கட்சிகளின் BLA 2 முகவர்களுக்கு மட்டுமன்றி BLO மற்றும் ERO-களுக்கும் கூட போதிய அதிகாரமும், சரிபார்ப்பு வசதிகளும் தற்போது வழங்கப்படவில்லை.
குடிசைப்பகுதிகள், நடைபாதை மற்றும் நடைமேடைகளில் வாழ்பவர்கள், மலைவாழ் குடியிருப்புகள் உள்ளிட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டங்கள் (Public hearing) முறையாக அறவிக்கப்பட்டு விடுமுறை நாட்களில் BLO முன்னிலையில் காணொளிப் பதிவுடன் நடத்தப்பட வேண்டும்.

முன்னறிவிப்பும், விசாரணையுமின்றி எந்த வாக்காளரும் நீக்கப்படக்கூடாது.
"படிவம் 7" ஆட்சேபனைகள் அனைத்தும் பொதுவில் வெளியிடப்பட வேண்டும்.
SIR மூலம் நீக்கப்பட்டவர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை நீக்கப்பட்டதிற்கான காரணங்களுடன் தேடக்கூடிய வடிவில் எப்போது வெளியிடப் போகிறீர்கள்? தமிழில்,
படிவம் 6ல் இடம் பெற்றிருந்த SIR தொடர்பான உறுதிமொழி (Declaration) நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டதா?
SIR மூலம் "இடம் மாறியவர் அல்லது இல்லாதவர்" எனக் கூறி நீக்கப்பட்ட பல லட்சக்கணக்கான வாக்காளர்களில் எத்தனை பேர் வீடு வீடாகச் சென்று நேரடியாக (Door to Door Survey) மூலம் முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளனர்?
தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் விடுபடாமல் சேர்க்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை அனைத்து கட்சியின் ஆலோசனைகளை பெற நீட்டிக்க வேண்டும்.
SIR மூலம் தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் முறையின்றி நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னெடுக்கப்படும் அனைத்து ஜனநாயக போராட்டங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.






