
"முதல்வர் விஜய்யின் சாதனை" என கடந்த கால திமுக ஆட்சியில் இருக்கும் திட்டங்கள், நீண்டகாலங்களாக பின்பற்றப்படும் நடைமுறைகளை புதியது போலவும், தவெக ஆட்சியில் தான் எல்லா செயல்முறைகளும் பின்பற்றப்படுவது போலவும் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை பல உண்மை சரிபார்ப்பு நிறுவனங்களும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியும் வருகின்றன.
முதலாவதாக “முதல்வர் விஜய்யின் கான்வாய் செல்லும் போது, போக்குவரத்து நெரிசலால், சாலையில் பொதுமக்கள் அவதிப்படாமல் சுதந்திரமாக செல்கின்றன. இவ்வாறு நடைபெறுவது இதுவே முதன்முறை” என்று சமூக ஊடகங்களில் தவெக-வினர் தவறான செய்தியை மக்களிடம் பரப்பினர்.
ஆனால், உண்மை என்னவென்றால் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கான்வாய் சாலையில் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு அப்போதே அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக, தனது வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையையும் அவர் அப்போதே குறைத்துள்ளார். இது குறித்த செய்திகள் கடந்த 2021 ஆண்டே ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் முதல்வர் விஜய், நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து 17 கி.மீ. தூரம் பயணித்து தான் தலைமை செயலகம் வரவேண்டும். இதனால், சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் மெரினா காமராஜர் சாலையில் மட்டுமே இருந்த டியூன் லைன் முறை, தற்போது நீலாங்கரை வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், முதல்வர் வரும் போது சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் தற்போது ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பதையும் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.
டியூன் லைன் முறை என்பது சாலையின் ஒரு பகுதியில் மட்டும் 'கூம்புகள்’ வைக்கப்பட்டு, முதல்வரின் கான்வாய்க்காகத் தனி வழி ஒதுக்கப்படும் நடைமுறை ஆகும்.
அடுத்த பொய்யாக தவெக ஆட்சிக்கு வந்தவுடன், “சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளதாக தவறான செய்தியைப் பரப்பினர்.
உண்மை என்னவென்றால், “பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகளை உறுதி செய்ய வேண்டும். எனவே அலுவலகங்களில் பதிவாளர்களுக்கு எதிரில் குறைந்தது இரண்டு நாற்காலிகளாவது இருக்க வேண்டும். சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்களை அமரவைத்து தான் பேச வேண்டும்“ என்று குறிப்பிட்டு கடந்த 2025 ஆம் ஆண்டு மே 15 அன்றே அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “2025 மே 15” என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கையை, தேதி கூட பார்க்காமல் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு போன்று தவெக-வினர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
அடுத்ததாக, கொடுங்கையூர் குப்பை மேட்டில், கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலே, பயோமைனிங் திட்டம் ஆறு தொகுப்புகளாக தொடங்கப்பட்டது. இதன் மூலம் குப்பைகளை இயற்கையான முறையில் சிதைத்து, அந்த நிலத்தை மீட்டெடுத்து வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இத்திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றி 100 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தவெக MLA மரிய வில்சன் பதவியேற்ற ஒரு வாரத்திலே இவ்வளவு மாற்றங்கள் நடந்துள்ளதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்பி வருகிறார்கள். இப்படி வெறும் பொய்யை மட்டுமே பரப்புவதையே முழு நேர வேலையாக தவெக-வினர் செய்து வருகின்றனர். இத்தோடு இது நின்று விடவில்லை.
பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பேருந்துகளில் கேமராவுடன் கூடிய அவசரக்கால பேனிக் (Panic) பட்டன்கள் கடந்த 2022 ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தபட்டு விட்டன.
பேனிக் பட்டனை அழுத்தியதும், MTC தலைமையகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் வழியாக கண்காணித்து, காவல்துறை உதவி எண்ணுக்கு (100) எச்சரிக்கை அனுப்பப்படும்.
இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்ததும் தான் அவசரக்கால பேனிக் (Panic) பட்டன்கள் பேருந்துகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது போன்று தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
அதை விட கொடுமை என்னவென்றால் செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவது எப்படி என்பதை சரியாக செய்து வருகின்றனர்."தமிழ்நாடு முதல்வர் விஜய், காலை பத்து மணிக்கு பணிக்கு வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிடும் காட்சி" என AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பரவ விட்டனர்.

அதே போல் இனி மக்கள் தங்களது புகார்களை அதிகாரப்பூர்வ உதவி எண் மூலம் முதல்வர் விஜய்யிடமே நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்” எனக் கூறி பரப்பப்படும் செய்திகள் தவறானவை.
இது கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போதே தொடங்கப்பட்ட நடைமுறை தான். பின்னர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் போதும் இது தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
குறிப்பாக கடந்த திமுக ஆட்சியின் போது, “முதலமைச்சரின் முகவரி” என்றழைக்கப்படும் ஒரு புதிய ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் துறையும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, “முதலமைச்சர் உதவி மையம்”, “முதலமைச்சர் சிறப்புப் பிரிவு”, “ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு அமைப்பு” மற்றும் “உங்கள் தொகுதியில் முதல்வர்” ஆகிய நான்கு துறைகளையும் ஒன்றிணைப்பதன் மூலம், ஏற்கனவே இருந்த பல புகார் கையாளும் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. இப்படி ஒரு ஆட்சியையும் நிர்வாகத்தையும் மக்கள் கண்டதே இல்லை என்பதே உண்மை.
அடுத்ததாக "தவெக ஆட்சிக்கு வந்தபின்பு தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வாட்ஸ்ஆப் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவிப்பு சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்டுள்ளது" என்று சமூக ஊடகங்களில் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.
இது குறித்தான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இதற்கு முந்தைய திமுக ஆட்சியால் தொடங்கப்பட்டு விட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை அப்போதே தொடங்கியுள்ளது.
மேலும் முதன் முதலாக இந்த அறிவிப்பு கோவிட் பெருந்தொற்று காலத்தின் போதே கடந்த 2021 ஆம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அரசுப்பேருந்து ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கும் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பது பழைய விதிமுறைதான். அது தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசி பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
கடந்த 2022 பிப்ரவரி மாதமே தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்து துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓட்டுநர்கள் பணியின் போது சட்டை பையில் செல்போன் வைத்திருக்க கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 2024 டிசம்பர் மாதம், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பேசினால், 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்ததாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இனி பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யவேண்டும் என்று தவெக அரசு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
கடந்த 2022 மே மாதம் முதலே சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பயோ மெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு பின்பற்றப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி அடுக்கடுக்கான பொய்களைப் பரப்பி மக்களை திசை திருப்பலாம், கடந்த திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம் என முறையினைப் பின்பற்றி பொய் செய்திகளையும் போலிச் செய்திகளையும் மட்டுமே பரப்பி வருகின்றனர்.
ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அழுத்தமாகவும், திரும்பத் திரும்ப சொல்வதன் மூலமும் அது உண்மையாகி விடும் என கூறப்படும் கோயபல்ஸ் தத்துவ முறையை மக்களிடத்தில் விதைக்க முற்படுகிறது தவெக.
எப்படி தவறான செய்திகளை நம்பக்கூடாதோ ஆராய வேண்டுமோ. அதைப்போல் தவெக-வினர் பதிவிடும் செய்திகளையும் துளியும் நம்பக்கூடாது என்பதற்கு அவர்களது செயல்முறையே சாட்சியாக உள்ளது.






