
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் மூலச்சல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கல்லூரித் தோழிகள் ஆவர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் கல்லூரியிலிருந்து வீட்டிற்குச் செல்ல பேருந்திற்காக நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகக் காரில் வந்த தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த த.வெ.க மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், காரை நிறுத்தி, "நானும் அந்த ஊருக்குத்தான் செல்கிறேன், வாருங்கள்" என்று கூறி மாணவிகள் இருவரையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் த.வெ.க பெண் நிர்வாகியை மூலச்சல் பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, காரில் இருந்த மற்றொரு மாணவியிடம் "நான் குலசேகரம் தான் செல்கிறேன், உங்களை அங்கு இறக்கிவிடுகிறேன்" எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். வழியில் மழை பெய்துகொண்டிருந்தபோது காரை நிறுத்தி, அந்த மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் நிலைகுலைந்த மாணவி, அவரைத் திட்டித்தாக்க முயன்றதுடன், காரிலிருந்து குதித்துத் தப்பிக்கவும் முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்துபோன கிறிஸ்டோபர், அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு அருகாமையில் இறக்கிவிட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவி நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும், தனது கல்லூரித் தோழியான த.வெ.க பெண் நிர்வாகியிடமும் இதுகுறித்து அழுது புலம்பியுள்ளார். தனது கட்சிக்காரரால் தனது தோழிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்துப் போலீசில் புகார் செய்வோம் எனக் கூறி, அந்த மாணவியைக் கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் புகார் அளித்துள்ளார்.
போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்டோபரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இத்தகவலை அறிந்து அங்கு வந்த த.வெ.க வழக்கறிஞர்களும் நிர்வாகிகளும், வழக்கைப் பதிவு செய்யவிடாமல் தடுத்து, அதை வெறும் புகார் மனுவாக மட்டும் மாற்றியுள்ளனர்.
மேலும், மாணமியை மிரட்டி அவரது புகாரையும் வாபஸ் பெறச் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த 'சிங்கப்பெண்' படையும் வரவில்லை. சிங்கமாய் வர வேண்டிய போலீசும் மௌனமாகிவிட்டது. இருப்பினும், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளி மீது வழக்கப் பதிவு செய்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் உறுதியாக இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தக்கலை போலீசார், உதவுவது போல் நடித்துக் கல்லூரிப் பெண்ணிடம் உடல் ரீதியான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி கிறிஸ்டோபர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
த.வெ.க ஆட்சியில் இதுபோன்ற ஒரு கொடுமை குமரி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள நிலையில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, கட்டப்பஞ்சாயத்து செய்து இந்தப் பிரச்சினையை இல்லாமல் ஆக்க முயற்சித்த சம்பவம், குற்றவாளிக்கு உதவும் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.






