Tamilnadu

‘வன்னியர் இடஒதுக்கீடு சும்மா அறிவிப்பு மட்டுமே’ : உண்மையை ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ்!

தமிழகத்தில், கடந்த 2020 ஆண்டு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாகவே, தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதை அறிந்த அ.தி.மு.க அரசு கடைசி நேரத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீட்டை அறிவித்தது.

தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடரில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு ஒதுக்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 68 சாதிகளை கொண்ட சீர்மரபினர் பிரிவுக்கு 7 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வன்னியர்கள் நிறைந்த எடப்பாடி தொகுதியில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீட்டை முதல்வர் அமல்படுத்தியுள்ளார் என்றும், உண்மையிலேயே வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்தச் சட்ட மசோதா இயற்றப்பட்டு உள்ளது என்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதே என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, வன்னியர் இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படும். அப்போது வன்னியர் இட ஒதுக்கீடு கூடுவதற்கும் அல்லது குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சால் வன்னியர் சமூகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 10.5 சதவீத உள் ஒதுக்கீடு என்பது தேர்தல் நாடகமா?, உங்கள் வெற்றிக்காக எங்களை பகடைக்காயாக பயன்படுத்துவதா என வன்னியர் சமூகத்தினர் அ.தி.மு.க அரசுக்கு எதிராக கொதிப்படைந்துள்ளனர்.

Also Read: தமிழர்களோடு சேர்ந்து #GoBackModi ட்ரெண்ட் செய்யும் பாஜக , அதிமுக அடிமைகள்!