Tamilnadu

“இந்துக்கள் நலன் என கூப்பாடு போடும் பாஜக கிராமப்புற கோயில்களை அழிக்கிறது” - பூசாரிகள் நலச்சங்கம் புகார்!

பூசாரிகள் தங்களது கடந்த கால வாழ்க்கை கடுமையாகவும், வறுமையாகவும், சோதனை நிறைந்ததாகவும் இருந்ததை எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இனி எதிர்காலமாவது வறுமை நீங்கி செழுமை நிறைந்ததாக அமைய வேண்டும் என எண்ணத் தொடங்கிவிட்டனர்.

கேட்பாரற்று கிடந்த பூசாரிகள் தங்களது வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை அமையாதா என ஏங்கித் தவித்து வருகின்றனர். பூசாரிகளின் வாழ்க்கையை ஒளிமயமாக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பூசாரிகள் நல வாரியம் அமைத்து அவர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்திக் கொடுத்தவர் டாக்டர் கலைஞர்.

அவர் ஏற்படுத்திய பூசாரிகள் நல வாரியம் கடந்த 10 ஆண்டு காலமாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. நல வாரியத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பயன்கள் ஏதும் கிடைக்காமல் பூசாரிகளின் வாழ்க்கை கானல் நீராக காட்சியளிக்கிறது.

அறநிலையத் துறையால் வீரட்டியடிப்பு!

நலத்திட்ட உதவியை நாடி அணுகினால் இந்து சமய அறநிலைத்துறை பூசாரிகளுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் விரட்டியடிக்கும் நிலைதான் உள்ளது. இதனால் கோயில் பூசாரிகள் அனைவரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஓய்வூதியம் கோரி விண்ணப்பம் செய்த பூசாரிகளில் 4000 பேருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் மரணமடைய நேரிட்டால்தான் மற்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் பெற வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த அவல நிலைக்கு தீர்வு காண ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கையை 15,000 ஆக உயர்த்த வேண்டும். வயது முதிர்ந்த ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்த பூசாரிகளுக்கு அவர்களுடைய மறைவிற்குப் பிறகு ஓய்வூதிய ஆணை கிடைக்கப் பெறுகிறது. பூசாரி இறந்த பிறகு ஓய்வூதிய ஆணை வருவது என்ன நீதி. அதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது. இது வெறும் கண்துடைப்பாக அமையுமே தவிர உண்மையில் பூசாரிகளுக்கு எவ்விதப் பயனும் இல்லை வயது முதிர்ந்த பூசாரிகள் உயிர் வாழ ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பம் செய்தால் அந்த விண்ணப்பத்தை அலட்சியம் செய்வது எந்த வகையில் நியாயம்.

Also Read: “ ‘ஆயுர்வேதா’ இந்திய மருத்துவ முறை.. இந்து மருத்துவ முறையல்ல” - மோடி அரசை சாடிய மருத்துவர்கள் சங்கம்!

தொற்று காலத்திலும் பணியாற்றிய பூசாரிகள்!

கொரோனா தொற்று இருந்த காலத்தில் கூட கடமை தவறாமல் கோயில் பூஜை செய்த பூசாரிகளுக்கு குறைந்த அளவே கொரோனா நிதியுதவி கிடைத்தது. நோய் தொற்று காரணமாக மாண்ட பூசாரிகள் பலர் உள்ளனர். வறுமையில் தவித்தவர்கள் பலர் உள்ளனர். அதே சமயம் நோய்த்தொற்று காலத்திலும் கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணி கல்லா கட்டி அதன் மூலம் அறநிலைத்துறை நிர்வாக அதிகாரிகள் அரசிடம் நற்பெயர் வாங்கிக் கொண்டனர். ஆனால் பூசாரிகளுக்கு எவ்வித நிதி உதவியையும் வழங்க ஏற்பாடு செய்யவில்லை.

இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் வழிபாட்டு பயிற்சி முகாம்களிலும் பூசாரிகளை சேர்ப்பதில் தயக்கமும் அலட்சியமும் காட்டுவது ஏன். கோயில் நிதியை அரசு நிதியாக மாற்றத் துடிக்கும் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க தயக்கம் காட்டுவது ஏன். வேலை மட்டும் வாங்கிக் கொண்டு ஊதியம் கொடுக்க முன்வராமல் இருப்பது எவ்வகையில் நியாயம்.

தட்சணையையும் தடுக்கும் அவலம்!

மேலும் தட்டு காணிக்கையும், தட்சணையும் வழங்கக் கூடாது என கோயில்களில் நிர்வாக அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைக்கும் அவல நிலையும் தற்போது அரங்கேறி வருவது அவல நிலையின் உச்சக் கட்டம். கோயில்களில் அன்றாடம் பூசாரிகளை பூஜை செய்ய வேலை வாங்கிக் கொண்டிருக்கும் அறநிலையத் துறை நிர்வாக அதிகாரிகளும், அரசும், பூசாரிகளும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் செலவினங்கள் உண்டு என நினைத்து, அவர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என என்றைக்காவது ஒரு வினாடி நேரமாவது நினைத்துப் பார்த்தார்களா என்றால் பதில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் கோவில்களுக்கு இலவச மின்சாரம்!

கடந்த தி.மு.க. ஆட்சியில் கோயில்களுக்கு இலவச மின்சாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அடுத்து வந்த ஆட்சியில் வழிபாட்டுத் தலங்களுக்கு வணிக நோக்கத்தோடு மின்சார கட்டணம் அமல்படுத்தப்பட்டது. இதை தடுத்து நிறுத்த நிர்வாக அதிகாரிகள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் பல கோயில்களில் நிதி ஆதாரங்கள் குறைந்து அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புற கோயில்கள் மின் கட்டணம் செலுத்த வழியின்றி இருளில் மூழ்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பணி நிதியிலும் ஜி.எஸ்.டி.!

கிராமப்புற கோயில்களுக்கு வழங்கப்படும் திருப்பணி நிதி மீது மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்து அவதிக்கு ஆளாக்கி வருகிறது. இதுதான் கிராமப்புற கோயில்களை பாதுகாக்கும் வழியா என்று பார்த்தால், உண்மையில் அந்த கோயில்களை சீரழிக்கவே மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை திருப்பணி நிதி மீது சுமத்தி வருகிறது. சனாதன தர்மம் இந்து சமய மேம்பாடு இந்துக்களின் நலனில் அக்கறை என்ற பல்வேறு கோஷங்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ அரசு கிராமப்புற கோவில் பூசாரிகளின் நலனில் அக்கறை ஏதும் செலுத்தவில்லை.

இந்து சமயத்தைப் பாதுகாப்பதிலும் கிராமப்புற கோயில்களை பாதுகாப்பதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பூசாரிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த மத்திய பா.ஜ. அரசு இதுவரை எந்த முயற்சியையும் ஈடுபாட்டையும் காட்டாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உயரிய நோக்கத்தோடு தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிபாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஆனால் அப்படி பயிற்சி பெற்ற 200 மாணவர்களில் இருவருக்கு மட்டுமே அடுத்து வந்த ஆட்சியில் பூஜை பணி நியமனம் வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 198 பேருக்கும் பணி நியமனம் வழங்க தற்போதைய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை ஆண்டவன் பெயராலும் ஜெயலலிதாவின் பெயராலும் ஆட்சி நடத்துபவர்களிடம் இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் ஒரு பயனும் இது வரை ஏற்படவில்லை என்பது வேதனைக் குரிய விஷயம்.

கலைஞர் ஆட்சிக் காலத்தில் பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி. சிதறிக்கிடந்த பூசாரிகளுக்கு உதவி செய்ய கோவில் பூசாரிகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கலைஞர் அரசு செய்ததை மறக்க இயலாது.

கழக ஆட்சி மலரும் பூசாரிகள் வாழ்வும் மலரும்!

கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் 16வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் பூசாரிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார். பூசாரிகள் நல வாரியம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் அதில் உறுதி கூறியுள்ளார். எனவே மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பூசாரிகள் நலனில் அக்கறையும் ஆர்வமும் காட்டுவார் என்ற நம்பிக்கை பூசாரிகள் மத்தியில் உள்ளது.

நன்றி - தினகரன் நாளேடு

Also Read: “இந்து மதத்தை வைத்து எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்” : அமித்ஷாவிற்கு மம்தா நேரடி எச்சரிக்கை!