தமிழ்நாடு

“ ‘ஆயுர்வேதா’ இந்திய மருத்துவ முறை.. இந்து மருத்துவ முறையல்ல” - மோடி அரசை சாடிய மருத்துவர்கள் சங்கம்!

ஆயுர்வேதா மருத்துவ முறை வளம் பெற்றதில் புத்த, சமண மதங்களுக்கும் , பண்டைய சமூகத்தில் நிலவிய பல்வேறு வகைப்பட்ட தத்துவஞானப் போக்குகளுக்கும் மிகப் பெரிய பங்குண்டு.

“ ‘ஆயுர்வேதா’ இந்திய மருத்துவ முறை.. இந்து மருத்துவ முறையல்ல” - மோடி அரசை சாடிய மருத்துவர்கள் சங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மருத்துவ கல்வியிலும் மருத்துவ சிகிச்சை முறையிலும் மூடநம்பிக்கைகளையும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும்,போலி அறிவியலையும் காலாவதியான மருத்துவ முறைகளையும் புகுத்தி வருவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ஆங்கிலேய ஆட்சி முறை இந்தியாவில் ஏற்பட்டிருக்காவிட்டாலும், தொழிற் புரட்சி, அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, இயல்பாகவே நவீன அறிவியல் மருத்துவம் இந்தியாவிலும் தோன்றியிருக்கும். அதை யாரும் தடுத்திருக்க முடியாது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

"ஆயுர்வேதா" என்பது இந்திய மருத்துவ முறை, "இந்து மருத்துவ முறை" என்ற கருத்தும் ஆட்சியாளர்களிடம் உள்ளது. ஆயுர்வேதா பண்டைய இந்திய மருத்துவ முறை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதை ‘இந்து மருத்துவ முறை’ எனக் கருதுவது தவறு.

அதை இந்து மருத்துவ முறையாக மாற்ற முயல்வது உள்நோக்கம் கொண்டது எனவும், ஆயுர்வேதா மருத்துவ முறை வளம் பெற்றதில் புத்த, சமண மதங்களுக்கும் , பண்டைய சமூகத்தில் நிலவிய பல்வேறு வகைப்பட்ட தத்துவஞானப் போக்குகளுக்கும் மிகப் பெரிய பங்குண்டு. பண்டைய மருத்துவர்களுக்கும்,மருத்துவ வளர்ச்சிக்கும் எதிராக அன்றைய பிராமணியம் செயல்பட்டது.

அது நமது மருத்துவ அறிவியல் வளர்ச்சியை தடுத்தது. மருத்துவர்களை இழிவு படுத்தியது. அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. இவற்றை மறைப்பதற்கான முயற்சிகள் தற்பொழுது மேற்கொள்ளப்படுவதோடு, ஆயுர்வேதாவை இந்துப் பண்பாட்டின் கூறாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

‘ஒரே தேசம் ஒரே மருத்துவ முறை’ என்ற திட்டத்தை கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. அந்தத் திசைவழியில், இதர பாரம்பரிய மருத்துவ முறைகளை புறக்கணிக்கும் போக்கும், நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

நவீன அறிவியல் மருத்துவம் என்ற புதிய கள்ளை, கலப்படம் செய்து ஆயுர்வேதா என்ற பழைய மொந்தையில் அடைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. நவீன அறிவியல் மருத்துவத்தை "திருதராஷ்டிர கட்டித் தழுவல்" மூலம் அழித்திடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.” இவ்வாறு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories