Tamilnadu
#NEET: அரியலூரில் மேலும் ஒரு மாணவன் பலி: பெற்றோர்களின் ஓலம் கேட்கவில்லையா?- அரசுகளுக்கு கி.வீரமணி கேள்வி!
நீட் தேர்வால் அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக் குரல் எழுந்த போதும், அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், நீட் தேர்வை நடத்தியே தீருவது என்று ஆளும் பா.ஜ.க அரசும், அதற்கு ஆதரவாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. இதோ இன்னுமொரு களப் பலி!
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அரியலூர் அனிதா நீட் தேர்வால் பலியானார். அதனைத் தொடர்ந்து எத்தனை இளம் குருத்துகள் பலிகொடுக்கப்பட்டுவிட்டன. நேற்று அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த இரண்டு முறை தேர்வெழுதி மூன்றாம் முறையாக இவ்வாண்டு தேர்வெழுதத் தயாராகி வந்த அவர், தேர்வு அழுத்தத்தால் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இன்னும் இந்தக் கொடுமை தொடர்வதா?
மத்திய அரசு, தன் நோக்கத்தில் உறுதியாக இருக்குமேயானால், மாநில அரசு தனக்கு உள்ள சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திப் போராட வேண்டாமா? எத்தனைப் பேரை நாம் இழப்பது? எத்தனை ஆண்டுகள் இக்கொடுமை தொடர்வது?
பலியாகியுள்ள மாணவர் விக்னேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், இரங்கலும் சொல்வதே கடினமானதாயிற்றே! எத்தனைக் கனவுகளை அவர்கள் சுமந்திருப்பார்கள்? அரசுகளுக்கு அந்தப் பெற்றோரின் ஓலம் கேட்கிறதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!