
இந்தியாவின் கூட்டாட்சி முறையையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையும் தகர்த்து, முறைகேடுகளை கட்டவிழ்த்து அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வினால் பல்வேறு குதர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் முதன்மை முறைகேடு நடவடிக்கையாக, தேர்தல் நேரங்களில் எளிய மக்களின் வாக்குகள் திருடப்படுவதும், பா.ஜ.க ஆதரவாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை வழங்கப்படுவதுமான செயல்பாடுகள் அமைந்துள்ளன.
இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.14) டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குத் திருட்டைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இதில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு சட்டத்தில் மாற்றம் செய்து தலைமை தேர்தல் ஆணையரை பாதுகாக்கிறது. தேர்தல் ஆணையம், பா.ஜ.க.விற்கு ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.
இதன் விளைவாக, தேர்தல் நேரங்களில் ஒரு பக்கம் வாக்குகளைத் திருடும் பா.ஜ.க, மறுபக்கம் வாக்குக்கு ரூ.10,000 வழங்கி வருகிறது. பா.ஜ.க.வினரின் டி.என்.ஏ.வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது” என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி, “தேர்தல் ஆணையத்தின் SIR முறைகேடு மற்றும் வாக்குத்திருட்டு மீது நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றச்சாட்டு வைத்தபோது, அதனை மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களை பாதிக்கும் முறைகேடுகள் குறித்து விவாதிக்க மோடி அரசுக்கு தைரியம் இல்லை.
பா.ஜ.க.விற்கு தேர்தல் ஆணையத்தின் உதவி தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையம் இல்லாமல் நரேந்திர மோடியால் வெற்றிபெற முடியாது என்பதே அதற்கு காரணம்.
பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு, தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன” என கண்டனம் தெரிவித்தார்.






