
உள்ளூர் மக்கள் எதிர்ப்பையும் மீறி, வழமையாகச் சங் பரிவார் கூறும் ஆகம முறைகளையும் புறந்தள்ளி, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., வழக்கமாகக் கடைப்பிடிக்கும் மதக் கலவரத்தைத் தூண்டி, அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் மண்ணைக் கலவரப் பூமியாக மாற்ற எண்ணினால், பெரியார் மண்ணான தமிழ்நாடு அத்தகையவர்களைப் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட ஓட விரட்டியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
திருப்பரங்குன்றம் பிரச்சினைக்காகத் தேசிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, தமிழ்நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன், அதன் தேசியத் தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு வந்து கலந்து முடிவெடுப்பதாக இரண்டு நாள்களுக்கு முன்பு (11.12.2025) திருச்சியில் ஓர் அறிவிப்புத் தந்துள்ளார்! சூட்சுமம் புரிகிறதா?
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு உள்நோக்கம் கொண்டதே!
தந்திரம், சூழ்ச்சி, எதிலும் உள்ளொன்று வைத்து புறமொன்று கூறுவதையே தமது வாடிக்கையாகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர், திருச்சி கூட்டத்தில் பேசும்போது, ‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினையில், ‘ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்’’ என்று, ஏதோ இதுவரை திருப்பரங்குன்றத்தில் மதவாத உணர்வை சில ஆண்டுகளாகக் கிளப்ப முயற்சிப்பதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும், ‘‘ஹிந்து முன்னணியினரோ அல்லது பா.ஜ.க.வினரோ மட்டும் நடத்தினார்கள்; எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை.
இனி நீங்கள் அழைத்தால், இதை ‘‘மூலதனமாக்கி’’ மற்றொரு அயோத்தி – பாபர் மசூதிபோல, மதக் கலவரம், வெறுப்புப் பிரச்சினையைத் தொடங்குவோம்’’ என்பது போலவும் உரைப் பாயிரம் பாடக் கிளம்பியுள்ளார்கள்.
இதன் முக்கிய நோக்கம், அதன் நூற்றாண்டை மக்கள் இயக்கமாகக் கொண்டாட முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பி.ஜே.பி. தலைமையுடன் உள்ளுக்குள் ஒரு பனிப்போர் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருவது ஒருபுறம் என்றாலும், அதையும் தாண்டி, கலவரத்தை உருவாக்கி, தங்கள் நூற்றாண்டைக் கொண்டாட நினைக்கிறார்களா?
திருப்பரங்குன்றம் உள்ளூர் மக்களின் கருத்தென்ன?
தமிழ்நாட்டில் உள்ள திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றுவதை ஒரு ‘‘பிரச்சினையாக்குவது’’ யார்? அவ்வூரில் வாழும் மதத்தவர்களா? இல்லையே! ‘வேலை போன’ அண்ணாமலைகள் ஆர்ப்பாட்டம் நடத்தி, தனது கட்சியை வளர்ப்பதும், தி.மு.க. ஆட்சியின்மீது உண்மையில்லாத ‘சட்டம் – ஒழுங்கின்மை’ என்ற ஒரு போலிக் குற்றச்சாட்டைக் கூறி, ஊடக வெளிச்சத்தைப் பெற முயன்று தோற்றவர்கள், மல்லு கட்டிப் பார்க்கிறார்கள்.
‘‘ஒற்றுமையாக – மத நல்லிக்கத்துடன் ஒன்றுபட்டு, அண்ணன் – தம்பிகளாய், ‘மாமன் – மச்சான்களாக’ உள்ள எங்களை வைத்து, ஏன் அரசியல் செய்கிறீர்கள்?’’ என்று செவுளில் அறைவது போல் உள்ளூர் மக்கள் கேட்டது, இவர்களுக்கு ஏனோ வசதியாக மறந்துவிட்டது!
பக்திப் போர்வையில், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தங்களை வளர்த்துக் கொள்ள வெளியூர் ஆட்களைக் கொண்டுவந்து இறக்கி, கலவரம் செய்ய முயன்றார்கள்!
சிவ ரூபத்தில் ருத்திராட்சப் பூனைகள்!
‘‘சிவ ரூபத்தில் உள்ள ருத்திராட்சப் பூனைகள்'' அண்மைக்காலத்தில், இதற்கு ஆதரவாக நீதித் துறையில் உள்ள மதவாத வெறியர்களான சில நீதிபதிகள் – குறிப்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்றவர்களும் துணை நிற்பது, அவர்களது கடமை தவறிய, (அரசியலமைப்புச் சட்டத்தின்மீது) எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு எதிரான ஒன்று என்பதை மதச் சார்பற்ற அனைத்து முற்போக்குச் சக்திகளும், அமைப்புகளும் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே எழுதியும், பேசியும் வரும் நிலை ஏற்பட்டு விட்டது!
‘‘ஆகமத்தை மீறலாமா?’’ என்று வழக்கமாகக் கேட்கும் ஆரியத் திருக்கூட்டம், இப்போது அதே கேள்வியை சமயக் கோயில்களின் பராமரிப்புப் பொறுப்பினைச் சட்டப்படி ஏற்றுச் செயல்படும் இந்து அறநிலையத் துறையும், தமிழ்நாடு அரசும் கேட்டால், பதில் இல்லை.
எல்லைத் தூண், தீபத் தூணா?
அந்தக் கோயிலில் வழக்கமாக விளக்கு எங்கு ஏற்றவேண்டுமோ, அங்கு அவர்களது வழமைப்படி நடக்கும், இப்போது தர்கா அருகில் உள்ள ஓர் எல்லைத் தூணை, ‘தீபத்தூண்’ என்று இல்லாத ஒன்றை, அயோத்தி போல தொடங்கி, அதற்கு நீதிமன்றத்தையும் சாய்ந்த நீதித் தராசு போல செய்ய முன்வரவேண்டுமா என்பதே பொது நிலையாளர்களின் நியாயமான கேள்விகளாகும்!
இந்நிலையில், நாடாளுமன்றத்தில், பேரவைத் தலைவரிடம், இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் உள்பட 120 எம்.பி.,க்கள் கையொப்பமிட்டு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது ‘‘இம்பீச்மெண்ட்’’ மனு கொடுத்தனர். பிறகு குடியரசுத் தலைவரிடமும் மனு கொடுத்துள்ளனர்.
‘‘டபுள் என்ஜின்கள்’’ என்று கூறப்படும் மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு!
அந்தக் குறிப்பிட்ட குற்றச்சாட்டிற்கு ஆளான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு ஆதரவாக, ஒரு தலைப்பட்சமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கும், நாடாளுமன்ற மரபுக்கும் எதிரான கூற்று அல்லவா?
இந்நிலையில், தமிழ்நாடு தி.மு.க. அரசிற்கு, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவும், வளர்ச்சிப் பாதையில், ஆயிரம் தடைகள், முட்டுக்கட்டைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியதையும் மீறி, ரிசர்வ் வங்கியே அதன் அறிக்கையின்படி, மற்ற முன்னேறிய மாநிலங்களைவிட, ‘டபுள் என்ஜின்கள்’’ என்று தற்பெருமை பேசும் மாநிலங்களைவிட, மிகச் சிறப்பான வகையில், ‘‘தடைக்கற்கள் உண்டென்றாலும், தாண்டும் – தாங்கும் தடந்தோள்கள் எங்களுடையது’’ என்று உலகுக்கே காட்டும் வண்ணம், பொருளாதாரத்திலும் அசைக்க முடியாத கற்பாறை போல, மக்களின் பேராதரவுடன் நாளும் ஜொலிக்கிறது!
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்கத் திட்டமா?
இதற்கு எதிராக, அந்த வளர்ச்சியைத் தடுக்க, ஒடுக்க கடைசி வழிகள் இரண்டு.
1. எஸ்.அய்.ஆர்.மூலம் வாக்காளர்கள் பட்டியலிருந்து பல லட்சம் பேரை நீக்குவது?
2. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், மதக்கலவரங்களை ஏற்படுத்திடத் திட்டமிடுதல் என்பதற்கு, ஆதரவுத் தரத்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் தூண்டுதல் பேச்சு!
இதற்கு எதிராக, சீறும் புயலாக, ஒன்றுபட்டு, ‘‘அமைதிப்பூங்காவான – பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி அமளிக்காடாக்க ஒருபோதும் அனுமதியோம்’’ என்ற உணர்வுடன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் – இயக்கங்கள் மட்டுமல்ல – அமைதியை விரும்பும் அனைவரும் இதில் ஒன்றுபட்டு, ‘‘மதவெறியை மாய்ப்போம் – மனிதநேயத்தை – சகோதரத்துவத்தை காப்பாற்றுவோம்’’ என்று முழங்கி, கலவரத் தீவட்டிகளை விரட்டி, தந்தை பெரியாரின் சமத்துவ அறிவுச் சுடரை ஒங்கிப் பிடிப்போம்!
1971 தேர்தலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியது என்ன?
இப்போது, பக்திக்கும்,
விஷப் பாம்பிற்கும் – நாத்திகத்திற்கும் போட்டியில்லை!
முன்பு 1971 தேர்தலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், மக்களுக்குத் தந்த அந்த அறிவுரை, வேண்டுகோள் – அறிவுத் தெளிவு இப்போதும் தேவை!
‘‘இன்று ‘ஆஸ்திகம்’ என்பது உயர்ஜாதியினரின் நலம்.
இன்று ‘நாஸ்திகம்’ என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலன்.
உங்களுக்கு இதில் எது வேண்டும்?’’
‘விடுதலை’, 18.02.1971
களம் காண ஆயத்தமாகுங்கள்!
தமிழ் மண்ணைக் கலவர பூமியாக்க
பெரியார் மண் அனுமதிக்காது!
இந்த மண்ணைக் காவிகள், கலவர பூமியாக்க ஒருபோதும் இடந்தராது, பின்னங்கால் பிடரியில் பட, ஓட ஓட விரட்டி அடிப்போம் – அணிவகுத்துப் பணி முடிப்போம்! அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டைக் காப்போம், காப்போம்! வாரீர்! வாரீர்!!






