மு.க.ஸ்டாலின்

“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் பெ.பழனியப்பன் – ரோஜா தம்பதியரின் மகன் ‘எழில்மறவன் - கிருத்திகா’ ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.12.2025) தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற, முன்னாள் அமைச்சர் பெ.பழனியப்பன் – ரோஜா தம்பதியரின் மகன் எழில்மறவன் மற்றும் வெ.சரவணன் – சாந்தி தம்பதியரின் மகள் கிருத்திகா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து, ஆற்றிய உரை.

நம்முடைய பாசத்திற்குரிய தருமபுரி மேற்கு மாவடடக் கழகச் செயலாளர் திரு.பழனியப்பன் அவர்களின் மகன் திரு.எழில்மறவன் அவர்களுக்கும், கிருத்திகா அவர்களுக்கும் நடக்கும் இந்த திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மண விழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள், புதிய புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள், அதுமட்டுமல்லாமல் கட்சி நிகழ்ச்சிகள், ஆய்வுக்கூட்டங்கள், கழக குடும்பங்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் என இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள், ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு இடையில் உங்களை எல்லாம் பார்க்கும் நேரத்தில், அதுவும் திரு.பழனியப்பன் அவர்களின் இல்லத்தின் மணவிழா நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் பார்க்கும் நேரத்தில் எனக்கே ஒரு ரிலாக்ஸ் ஏற்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம், நம்முடைய மகளிருக்கான திராவிட மாடல் அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் மூலமாக கிடைத்துக்கொண்டிருக்கும் சாதனைகளை அடிப்படையாக வைத்து அந்த சகோதரிகளின் வெற்றிக்கான அடையாளமாக, அதை பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’என்ற தலைப்பில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தினோம். நீங்களும் அதை தொலைக்காட்சிகளில் பாத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 

அதேபோல், நம்முடைய மகளிருக்கு கலைஞர் பெயரால் வழங்கக்கூடிய மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் மாதாமாதம் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வழங்கிக்கொண்டிருக்கின்றோம். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அந்த ஆயிரம் ரூபாயை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்கிறேன்.

“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஏற்கெனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 13 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுவந்தது. ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக மேலும் கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அதாவது 1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

இன்னும் கூட சில தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும்  நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, அது இன்னும் உயரும் என்று கூட சொல்லியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நாளில்தான், மற்றொரு பெருமிதமான செய்தியும் வெளியானது. அதை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். அதாவது, ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான அறிகுறியாக இருக்கும் GDP வளர்ச்சியில் இன்றைக்கு தமிழ்நாடுதான் நம்பர் ஒன் மாநிலமாக உருவாகியிருக்கிறது. இது நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல. ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை!

நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவ்வளவோ தடங்கல்கள். எவ்வளவோ சோதனைகள். அந்த சோதனைகளையெல்லாம் தாண்டி இன்றைக்கு சாதனை படைத்திருக்கும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி. மற்றொரு பக்கம், தேர்தல் வேலைகள். அதில் குறிப்பாக SIR என்ற ஒரு நடைமுறையை கொண்டுவந்து அந்த பணியும் நடைபெற்றுவருகிறது. 

இங்கு எழுச்சி தமிழர் நம்முடைய தொல்.திருமாவளவன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டு சொன்னார். இன்றைக்கு SIR பணிகளை திராவிட முன்னேற்றக் கழகம் எந்தளவுக்கு அதன் கட்டமைப்பு முறையாக  அமைத்திருக்கும் காரணத்தால் அந்த பணிகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார். உண்மைதான்.

அந்த SIR பணிகளை இன்றைக்கு பம்பரம் போல் நம்முடைய தோழர்கள் செய்துகொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து எல்லோரும் அதை குறிப்பிட்டு சொல்கிறார்கள். பெருமைப்படுகிறார்கள். எதற்கு என்றால்,  நம்முடைய வாக்குரிமையை நாம் காப்பாற்றியாக வேண்டும். விழிப்போடு நாம் வேலைகளை பார்த்திருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பாதி வேலைகள்தான் முடிவுற்றிருக்கிறது. இன்னும் பாதி வேலைகள் இருக்கிறது. 

தேர்தல் நடந்து, வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவு அறிவிக்கும் வரை நமக்கு வேலை இருக்கிறது. நீங்கள் மறந்துவிடக் கூடாது. இரண்டு வாரத்தில் டிசம்பர் முடிந்து ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு வரப்போகிறது. அதற்குபிறகு, தேர்தலுக்கு சிறிது நாட்கள்தான் இருக்கிறது. அதனால் நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது நம்முடைய சாதனைகள், திட்டங்கள், நாம் ஆற்றக்கூடிய பணிகள் மக்களுக்கு சென்றடைந்திருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை.

“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முழுவதுமாக அதை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால், என்னதான் சென்றடைந்திருந்தாலும் இங்கு நம்முடைய தொல்.திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டதைபோல், இன்றைக்கு எதிரிகள் நம்மை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள் எவ்வளவுதான் அந்த பணியில் ஈடுபட்டாலும்  நாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். உண்மைதான்.

நம்முடைய சாதனைகளை, திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடத்தில் எடுத்து செல்லக்கூடிய அந்த பணிகளில் ஈடுபட்டு அவையெல்லாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். ஏழாவது முறையாக திராவிடமாடல் ஆட்சி உருவாகியிருக்கிறது என்ற பெருமை நமக்கு வந்தாக வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும். அதில் உங்கள் எல்லோருடைய பங்கும் அதில் நிச்சயமாக இருக்க வேண்டும். 

நம்முடைய திரு.பழனியப்பன் அவர்களைப் பற்றி நான் சொல்லவேண்டும் என்று சொன்னால், அவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர். உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர்.  அவரைப்பற்றி நான் அதிகமாக உங்களிடத்தில் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம், அவர் ஆற்றக்கூடிய பணிகளையெல்லாம் நீங்கள் அறிந்தவர்கள். என்னைப்பொறுத்தவரை, அவர் அதிமுக-வில் இருந்தபோது அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியபோது நாங்களெல்லாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்போம்.

அவர் ஆளுங்கட்சி வரிசையில் அமைச்சராக சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பார். அப்படி அமர்ந்திருக்கும்போது ஒவ்வொரு அமைச்சருக்கும் துறையின் சார்பில் மானியக்கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த அவையில் அதுகுறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதில் சொல்லும் வகையில் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். ஆனால், அதிமுக-வைச் சார்ந்த எந்த அமைச்சர்களும் பொறுப்பாக இவரைப்போல் பதில் சொன்னது இல்லை. 

அதுமட்டுமல்ல. மற்ற அமைச்சர்களெல்லாம் பதில் சொல்லும்போது நாங்களெல்லாம் பாதியில் எழுந்து வெளியே சென்றுவிடுவோம். ஏனென்றால், அந்த அளவிற்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள்.  யேசுவார்கள். விமர்சனம் செய்வார்கள். விமர்சனம் செய்யட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. குறைகளை சொல்லட்டும். தவறில்லை. தனிப்பட்ட முறையில் தாக்கி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆனால், திரு.பழனியப்பன் அவர்கள் பதில் சொல்கிறார் என்றால், நாங்கள் அத்தனை பேரும் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்போம்.  நானே, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொல்வேன்.  திரு.பழனியப்பன் அவர்கள் பதில் சொல்லப்போகிறார்.  நாம் யாரும் வெளியே செல்ல வேண்டாம். உட்காருவோம் என்று நான் சொல்வேன். அந்தளவுக்கு கண்ணியத்தோடு ஜனநாயக மாண்பை பாதுகாத்தவர் நம்முடைய பழனியப்பன் என்று சொன்னால், அது நிச்சயம் மிகையாகாது.

அதனால்தான், அவர் கழகத்தில் வந்து சேந்தவுடனே அவரை வரவேற்றபோது நான் சொன்னேன். உங்களிடத்தில் எனக்கு பிடித்தது, சட்டமன்றத்தில் யாரையும் விமர்சனம் செய்யாமல் கடமையோடு நீங்கள்  அந்த  பணியை நிறைவேற்றினீர்கள். அதுதான் மிகவும் பிடிக்கும் என்று வெளிப்படையாக சொன்னேன்.

அதைதான், அவர் கட்சியில் சேர்ந்ததற்குப் பிறகு கழக தோழர்களிடத்தில், பொதுமக்களிடத்தில், கட்சி நிருவாகிகளிடத்தில் இன்றைக்கும் அந்த முறையை கடைபிடித்துவருவதை பார்க்கும்போது உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய இல்லத்திருமணத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன்.

இன்றைக்கு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் எல்லா வளங்களையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சொன்னதுபோல், வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக இருந்து வாழுங்கள்! மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க. வாழ்க.. வாழ்க... என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories