முரசொலி தலையங்கம்

“தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி செல்கிறது” : திராவிட மாடல் அரசை பாராட்டிய ஒன்றிய அரசு - முரசொலி!

நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாட்டின் ‘தோழி’ விடுதிகள் உள்ளன.

“தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி செல்கிறது” : திராவிட மாடல் அரசை பாராட்டிய ஒன்றிய அரசு - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (31-01-2026)

ஒன்றிய அரசு மீண்டும் பாராட்டுகிறது!

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடு வேறு மாநிலங்களுக்குச் செல்வதாக ஆளுநர் ரவி கூறி வரும் நிலையில் ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்துள்ளன.

‘பொருளாதார ஆய்வறிக்கை 2025–26’ என்ற ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதியன்று ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வெளியாக இருக்கிறது. அதற்கு முன் பொருளாதார ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடுவது வழக்கம். இந்த அறிக்கையை நேற்றைய தினம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவை ஒவ்வொரு துறைரீதியாகப் பிரித்து அதன் நிலைமைகளை இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

இந்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 7.4 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஆய்வறிக்கையாக அது இருந்தாலும் தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் செயல்பாட்டை, அதன் வளர்ச்சியை ஒன்றிய ஆய்வறிக்கை பல்வேறு இடங்களில் பாராட்டி இருக்கிறது.

•இந்தியாவின் உற்பத்தித் துறையில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் போன்ற மாநிலங்கள் 40 விழுக்காடு பங்கு வகிக்கின்றன.

•அதிநவீன தொழில்நுட்பம், ஐ.டி., நிதி போன்ற துறைகளின் வளர்ச்சி தென் மாநிலங்களில் அதிகளவில் உள்ளது.

•புதிதாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு மேம்படுத்தி உள்ளது.

•தொழில் ஊக்குவிப்பை ஒற்றைச் சாளர அனுமதி, ஆன்லைன் அனுமதி, நிலச் சீர்திருத்தம் சாத்தியப்படுத்தி உள்ளது.

•சூரிய மின் உற்பத்திப் பூங்கா, மாவட்ட அளவிலான கார்பன் குறைப்புத் திட்டங்களில் சிறப்பான தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

•மின்நுகர்வு குறைப்புத் திட்டங்களிலும் தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கை சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

•உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

•நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் சுமார்15 விழுக்காடு பங்களிப்புடன், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்த அறிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது. உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் குஜராத் 13 விழுக்காடும், மகாராஷ்டிரா 13 விழுக்காடும், உத்தரதப் பிரதேசம் 8 விழுக்காடும், கர்நாடகா 6 விழுக்காடும் உள்ளன.

•இந்தியாவில் ஆலைத் தொழிலாளர்களில் 60 விழுக்காட்டினர் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் உள்ளனர்.

•நாட்டில் பெரும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள முதல் 8 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

•நாட்டுக்கே முன்னோடியாக தமிழ்நாட்டின் ‘தோழி’ விடுதிகள் உள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி வேலைவாய்ப்பைப் பெருக்க தமிழ்நாட்டின் ‘தோழி விடுதி’ திட்டம் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. பெண்களின் வேலைவாய்ப்பைப் பெருக்க நினைக்கும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசின் ‘தோழி விடுதி’ திட்டம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

•பெண்கள் வேலைவாய்ப்பைப் பெருக்கும் திட்டங்களை தீட்ட தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

– இவ்வாறு பல்வேறு இடங்களில் தமிழ்நாட்டைப் பாராட்டி இருக்கிறது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கை.

“தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோக்கி செல்கிறது” : திராவிட மாடல் அரசை பாராட்டிய ஒன்றிய அரசு - முரசொலி!

உற்பத்தித் துறை வேலை வாய்ப்பு தான் இதில் மிகமிக முக்கியமானது. அதில் நாட்டின் ஒட்டுமொத்த வேலை வாய்ப்பில் தமிழ்நாடு 15 விழுக்காடு பங்களிப்பைத் தந்து முதலிடத்தை வகிப்பது தான் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது ஆகும். பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த சூழலில் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றி மட்டுமல்ல, எதிர்கால வளர்ச்சியின் போக்கையும் கணிக்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி யானது அனைத்து வகையிலும் முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தி வருவதை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த ஆண்டும் இதே போன்ற ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. 31.1.2025 அன்று 2024–25ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை அப்போது முன் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையிலும் தமிழ்நாடு அரசு பாராட்டப்பட்டது.

•இந்தியாவின் தோல்பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38 விழுக்காடு பங்களிப்பும் இந்தியாவின் மொத்த தோல்பொருள்கள் ஏற்றுமதியில் 47 விழுக்காடு பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கி யுள்ளது. இது பெண்களுக்கான வேலை வாய்ப்பை வளர்த்துள்ளது.

•தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத் தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள் மற்றும் நில விலை மானியங்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசு சிறப்பாக வழங்கி வருகிறது.

•தமிழ்நாட்டின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை ஒரு புதுமையான முயற்சி. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் பள்ளிக் கல்வித் துறையால் கொண்டுவரப்படும் பல்வேறு திட்டங்கள் ஆகும்.

– இவை மூன்றும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தரப்பட்ட பாராட்டு ஆகும். இதே போன்ற பாராட்டுத் தான் இந்த ஆண்டு அறிக்கையிலும் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ளது.

சிறப்புத் திட்டங்கள் தராமல், நிதி தராமல் இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒப்புக் கொண்டு அறிக்கையில்மறக்காமல் குறிப்பிடும் ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவிக்கத்தான் வேண்டும்.

banner

Related Stories

Related Stories