மு.க.ஸ்டாலின்

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

“சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், பா.ஜ.க.வால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு! இது தமிழ்நாடு!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (14-12-2026) திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ஆற்றிய எழுச்சியுரையின் விவரம்:

முதலில் உங்களைப் பற்றி சொல்கிறேன். மாஸாக – கெத்தாக இங்கு வந்திருக்கும் திரவிடியன் ஸ்டாக்ஸ் எல்லோருக்கும் என்னுடைய முதல் வணக்கம்!

வேலு அவர்களிடம் ஒரு வேலையைச் சொல்லிவிட்டால், அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இந்தக் கூட்டத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக் கூடிய வேலு அவர்களுக்கு என்னதான் தம்பி உதயநிதி நன்றி சொல்லியிருந்தாலும், தலைமைக் கழகத்தின் சார்பில், தலைவர் என்ற முறையில் நானும், நன்றி கூற விரும்புகிறேன்.

எதிரில் இருக்கும் உங்களைப் பார்க்கும்போது, ஒரு ஐம்பது ஆண்டுகள் டைம்-டிராவல் செய்து பின்னால் சென்றது போன்று, எனக்கு இருக்கிறது! உங்களைப் போன்ற இளைஞனாக – கிராமம் கிராமமாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த இளைஞரணியை வளர்த்தெடுத்த ஞாபகங்கள் எல்லாம் வருகிறது!

எத்தனை ஞாபகங்கள்? இரவு பகல் பார்க்காமல், தூக்கம் இல்லாமல், கிராமங்கள்தோறும் கொடி ஏற்றம், திண்ணை பிரச்சாரம், நாடகம், பொதுக்கூட்டம் எனக் கழக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அப்படி உழைத்து, வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட கழகத்திற்கு, புது இரத்தமாக வந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது - புது மகிழ்ச்சியும், நம்பிக்கையும் பிறக்கிறது! அதுமட்டுமல்ல, உங்களுடைய எனர்ஜி எனக்கும் ‘டிரான்ஸ்பர்’ ஆகியிருக்கிறது!

இந்த மாபெரும் இயக்கத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கியபோது, அவருக்கு வயது, 40! தலைவர் கலைஞருக்கு 25 வயதுதான்! பேராசிரியர், நாவலர் என்று பலரும் அவர்களின் இருபதுகளில்தான் இருந்தார்கள்! அவர்கள் எல்லாம் எப்படி ஃபயராக இருந்தார்கள் என்பதற்கு, ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்…

1941-இல் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவுக்கு, புரட்சிக்கவிஞர் – பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து, ஒரு வாழ்த்துப்பா வந்தது. அந்த வாழ்த்துப்பா-இல் புரட்சிக்கவிஞர் எழுதிய வரிகள்தான் “கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை!” இந்த வரிகளைக் கேட்கும்போதே, அந்த இளைஞர்கள் எப்படி ஃபயராக இருந்திருப்பார்கள் என்று உங்களுக்குப் புரியும்! அந்த ஃபயர்பிராண்ட்-தான், நம்முடைய தி.மு.க.!

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

எது எதெல்லாம் இந்த தமிழ்ச்சமுதாயத்தைப் பின்னுக்கு இழுக்குமோ – எது எதெல்லாம் தமிழ்நாட்டை இருட்டிற்குள் தள்ளுமோ அது எல்லாவற்றையும் எதிர்த்து, தோற்கடித்து, புது வரலாறு படைத்தோம்! சும்மா எடுத்தோம் – கவிழ்த்தோம் என்று இங்கு எதையும் செய்துவிடவில்லை.

தெருத்தெருவாக – வீடு வீடாக சென்று பேசி, டீக்கடையையும் – சலூனையுமே, அரசியல் மேடைகளாக மாற்றி, மக்களை எஜுகேட் செய்தோம். உலக வரலாற்றையெல்லாம் சொல்லி, நாம் ஏன் இன்னும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்று எடுத்துச் சொல்லி, மக்களுக்குள் நல்ல மாற்றத்திற்கான விதையை, சிந்தனையாக விதைத்தார்கள்!

அண்ணா பேசுகிறார்… கலைஞர் பேசுகிறார்… நாவலர் பேசுகிறார்… பேராசிரியர் பேசுகிறார் என்று சொன்னால், மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள். அவர்கள் பேச்சில் சொன்னதையெல்லாம், மக்கள் அவரவர்களின் ஊரில் எடுத்துச் சொன்னார்கள். திராவிட இனஉணர்வை வளர்த்தார்கள்.

தமிழை நசுக்க வந்த இந்தி ஆதிக்கத்தை விரட்டினார்கள்! அதனால்தான், “ஏ.. தாழ்ந்த தமிழகமே!” - என்று கவலைப்பட்ட காலத்தை மாற்றி, இப்போது, ”திரும்பிப் பாருங்கள் தமிழ்நாட்டை”-என்று சொல்லும் காலத்திற்கு வந்திருக்கிறோம்! அவர்களது ஜெனரேஷன் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்ததும், அவர்களின் உழைப்பையும் - தியாகத்தையும் - கொள்கை உணர்வையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சிந்தித்து, எண்ணி உருவாக்கியதுதான், இந்த இளைஞரணி!

1980 ஜூலை 20-ஆம் தேதி, மதுரை ஜான்சிராணி பூங்காவில், இளைஞரணியைத் தொடங்கினோம்! அந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார். சோதனைகள் - வேதனைகள் - தோல்விகள் - அடக்குமுறைகள் - சிறைச்சாலைகள் - சித்திரவதைகள் எல்லாம் படைகூட்டி வந்தாலும், இந்தக் கழகம் அசைந்து விடாமல் - தொலைந்துவிடாமல் - மறைந்துவிடாமல் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அடித்தளம் நம்முடைய அமைப்புமுறை! அதனுடன் நம்முடைய இலட்சியப் பயணம் சேர்ந்து தொடரும் என்று முழங்கினார்.

இளைஞரணியை அறிவித்துவிட்டோம் என்று அமைதியாக இருந்துவிடவில்லை. இதற்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று, முதலில் ஐவர் குழுவையும் அடுத்து ஏழு பேர் குழுவையும் தலைமைக் கழகம் நியமித்தது. அந்தக் குழுவில் நான், நாடாளுமன்றத்தில் கர்ஜித்துக் கொண்டிருக்கும் திருச்சி சிவா - வாலாஜா அசேன் - பரிதி இளம்வழுதி - தாரை மணியன் - ஜெயம் ஜூலியஸ் - பஞ்சவர்ணம் ஆகியோர் இருந்தோம்!

நாங்களும் தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாக, தெரு தெருவாகச் சென்றோம்! இளைஞர்களைச் சந்தித்தோம்! கழகத்தின் கொள்கைகளை எடுத்துச் சொன்னோம்! தந்தை பெரியார் மன்றம் - அறிஞர் அண்ணா மன்றம் - சிட்டிபாபு மன்றம் - எம்.ஆர்.ராதா மன்றம் - சத்தியவாணி முத்து மன்றம்- கலைஞர் படிப்பகம் - அஞ்சுகம் படிப்பகம் - டாக்டர் நடேசனார் படிப்பகம்;

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

டி.எம்.நாயர் வாசகர் வட்டம் - சர் பிட்டி தியாகராயர் வாசகர் வட்டம் என்று ஊர் ஊருக்கு மன்றங்களை அமைத்து கொள்கைகளைக் கூர்ப்படுத்தியதோடு, மக்களையும் சந்தித்து கழகத்தை வளர்த்தோம்! இந்தப் பயணத்தில், நாங்கள் சந்திக்காத சோதனைகள் இல்லை; துன்பங்கள் இல்லை; துரோகங்கள் இல்லை; அத்தனையையும் தாண்டி, கழகத்தின் இலட்சியப் பயணத்திற்குத் துணை நின்றது நாங்கள் வளர்த்த இளைஞரணி!

இப்போது அந்த பணியைத் தம்பி உதயநிதியிடமும், உங்களிடமும் ஒப்படைத்திருக்கிறோம்! அவரும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து இன்னும் பவர்ஃபுல்லாகச் செயல்படுகிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இறங்கி அடிக்கிறார்! கொள்கை எதிரிகள், “உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று புலம்புகிறார்கள்! அந்த அளவிற்குக் கொள்கையில் ஸ்ட்ராங்காக இருக்கிறார்! கழகத்திற்கு எது தேவை என்று, உணர்ந்து செயல்படுகிறார் உதயநிதி!

முதலில், அணியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கழகத்தில் சேர்த்தார். அடுத்து, அவர்களை கொள்கை ரீதியாக ஸ்டாராங் ஆக்க வேண்டும் என்று பாசறைக் கூட்டங்கள் நடத்தினார்.

அடுத்து, நம்முடைய கொள்கைகளை இன்றைக்கு இருக்கும் தலைமுறையினரும் புரிந்துகொள்ள, புது பேச்சாளர்கள் அவசியம் என்று உணர்ந்து, ஃபர்ஸ்ட் செட்டில் இருநூறு பேரை உருவாக்கியிருக்கிறார்! அவர்களின் பேச்சையெல்லாம், கழக மேடைகளில் கேட்கும்போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!

அடுத்து, இளைஞர்களான நீங்கள் இன்னும் ஷார்ப்பாக பேச ஸ்ட்ராங்காகக் களமாட, நிறைய புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று, முத்தமிழறிஞர் பதிப்பகம் தொடங்கினார். சரி, இதெல்லாம் செய்துவிட்டோம் என்று சும்மா இருக்கவில்லை. இதெல்லாம் உங்களுக்கு வந்து சேர வேண்டும் என்று, அறிவுத்திருவிழா நடத்துகிறார்! பல இடங்களில் நூலகம் ஆரம்பிக்கிறார். இதுதான், ஒரு பொலிட்டிஷியனுக்கான குவாலிட்டி!

சரி, உதயநிதி இவ்வளவும் செய்கிறார்… அப்படி என்றால், அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி கூட உதயநிதி இங்கே சொன்னார்.

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

நம்முடைய லெகசியை, மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்! கழகத்தை வளர்க்கும் பணியில் கொள்கையை விதைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்!

காலையில் முரசொலி படித்த பிறகு, அதில் வெளியாகியிருக்கும் கட்டுரைகள், கருத்துகள், தலையங்கங்கள், திராவிட இயக்கப் பார்வைகள் என்று எல்லாவற்றையும் உங்களால் முடிந்த அளவிற்கு எல்லோரிடமும் கொண்டு செல்லுங்கள்! அது எல்லாவற்றையும் சுருக்கமாக இன்றைய இளைஞர்களுக்கு புரியும் வகையில், கிரியேட்டிவாக மாற்றி உங்களுக்கு என்று ஒரு ஸ்டைலில் பேசி, எழுதிக் கொண்டு செல்லுங்கள்!

அவர்களுக்கு விழிப்புணர்வையும் - தெளிவையும் ஏற்படுத்தித் தமிழ்நாட்டை உயர்த்தும் கழகத்தின் பாதையில் அவர்களைக் கொண்டுவர வேண்டும்!

இன்றைக்குத் தொழில்நுட்பம் எவ்வளவோ பெருகிவிட்டது! அதே அளவிற்கு, உங்களின் கடமையும் பெருகிவிட்டது!

ஏன் என்றால், ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துவிட்ட ஆணவத்தில், வலதுசாரி அமைப்புகளும் - பிற்போக்குச் சக்திகளும் மிகவும் வேகமாக முன்னெப்போதும் இல்லாத ஆக்ரோஷத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்!

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடிய மக்களிடம், பொய்களை - அவதூறுகளை - பிற்போக்கு எண்ணங்களை - தேன் தடவிய வார்த்தைகளில் கொண்டு சென்று சேர்க்க முயற்சி செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்… எல்லோரும் ஃபேமிலி, ஃப்ரண்ட்ஸ் வாட்ஸ்அப் குழுவில் இருப்பீர்கள்.

அதில், சொந்தங்கள் தங்களின் அன்பை - உணர்வை பரிமாறிப்பார்கள். ஆனால், அதில் ஒருவர் மட்டும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் விஷம் தோய்ந்த கருத்துகளை ஃபார்வர்ட் செய்வார். பலரும், எதையோ படிக்காமல் அனுப்பியிருக்கிறார் என்று கடந்து சென்றுவிடுவீர்கள்.

அதை அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு, அவரும் தொடர்ந்து மெசேஜ் அனுப்புவார். அப்படிப்பட்டவர்களின் பிற்போக்குக் கருத்துகள் தொற்றுநோய் போன்று வேகமாகப் பரவும்! அதைத் தடுக்க வேண்டும் என்றால், அதற்கு மாற்று மருந்தான நம்முடைய கொள்கைகளையும் நாம் தீவிரமாகப் பரப்ப வேண்டும்!

பொய்யை பேசுவதற்கு ஒருவர் தயங்காதபோது, உண்மையைப் பேசுவதற்கு நெஞ்சில் உரமிருக்கும் நாம் ஏன் தயங்க வேண்டும்! எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இப்போது நம்முடைய தோளில், தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டின் பன்மைத்துவத்தையும் காக்க வேண்டிய கடமை இருக்கிறது!

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

இந்தியாவிலேயே பி.ஜே.பி.,க்கு எதிராக ஐடியாலஜிக்கல் ஃபைட் (கருத்தியல் போர்) செய்துகொண்டு இருக்கும் ஒரே மாநிலக் கட்சி, தி.மு.க.,தான்! அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது, நம் தமிழ்நாட்டை மட்டும்தான்! அதனால்தான் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல்! அண்மையில் கூட, என்ன பேசினார்? பீகாரை ஜெயித்துவிட்டோம், “அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்!

மாண்புமிகு அமித்ஷா அவர்களே! நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு! இது தமிழ்நாடு! எங்களின் கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே… அன்புடன் வந்தால், அரவணைப்போம்…

ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்! மீண்டும் சொல்கிறேன். அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்! உங்களை ஜெயித்துக் காண்பிப்போம்!

இங்கு கூடியிருக்கும் இளைஞரணி தம்பிகளுக்கு சொல்கிறேன். ஒவ்வொரு தலைமுறைக்கு முன்பும் வரலாறு ஒரு கடினமான கேள்வியை முன்வைக்கும்! அதற்கு ரியாக்ட் செய்ய முடியாமல், மண்டியிடுகின்றவர்களை, வரலாறும் மறந்துவிடும்! மக்களும் மன்னிக்க மாட்டார்கள்! ஆனால், வரலாறு முன்வைக்கும் கேள்விகளை எதிர்த்து, ஃபைட் செய்து வரலாற்றைத் திருத்தி எழுதுகின்றவர்களை, மக்களும் மறக்க மாட்டார்கள்! வரலாறும் மறக்காது!

நீங்கள் எல்லாம் வரலாறு படைக்க வேண்டும்! அதற்கு எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்களுக்காக இருப்பதுதான் அரசியல்! அந்த அரசியலை செய்யத்தான், உங்கள் எல்லோருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது! மக்களிடம் செல்லுங்கள். அவர்கள் கூடவே வாழுங்கள். அவர்களுக்காகக் குரல் கொடுங்கள். இதுதான் உங்களுக்கான டாஸ்க்!

அரசியலில் சொகுசு எதிர்பார்க்காதீர்கள். இங்கு கடுமையாக உழைப்பவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும்! அந்த இடம், கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல; மக்கள் மனதிலும் நிரந்தரமாக இருக்கும்! பேரறிஞர் அண்ணா அவர்கள், தலைவர் கலைஞரின் உழைப்பை பாராட்டினார்.

தலைவர் கலைஞர் அவர்கள் என்னைப் பற்றி சொல்லும்போது “உழைப்பு… உழைப்பு… உழைப்பு” என்றுதான் சொல்வார். இப்போது நானும் தம்பி உதயநிதி அவர்களின் உழைப்பைப் பார்க்கிறேன். அதே உழைப்பைத்தான் உங்களிடமும் எதிர்பார்க்கிறேன். அந்த உழைப்புக்கு இளைஞரணிப் படை தயாரா? தம்பி உதயநிதி பேசும்போது, வரும் தேர்தலில் இளைஞரணிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார்.

அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது, இன்றைக்கு உள்ளாட்சியில், சட்டமன்றத்தில், அமைச்சரவையில், நாடாளுமன்றத்தில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்குச் செயல்படும் பல பேர், இளைஞரணியில் இருந்து வந்தவர்கள்தான்!

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

நாளைக்கு உங்களிலிருந்து பலரும், அந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிச்சயம் வரத்தான் போகிறீர்கள்! அதற்குத் தயாராக, இளைஞரணி எனும் தாய் வீட்டை பயன்படுத்திக்கொள்ளுங்கள்! இங்கே உதயநிதி சொன்னதுபோல, நீங்கள் ஒவ்வொருவரும் மினிமம் பத்து இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்!

அவர்களுக்கு அரசியல் உணர்வை, நம்முடைய கொள்கைகளை, திராவிட மாடல் அரசின் சாதனைகளைக் கொண்டு செல்லுங்கள்! அவர்கள் ஒவ்வொருவரின் வாக்கும், அவர்கள் குடும்பத்தினரின் வாக்குகளும், அவர்கள் நண்பர்களின் வாக்குகளும் உதயசூரியனுக்கும், நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும்தான் கிடைக்க வேண்டும்!

கடந்தகால ஆட்சியாளர்கள், செய்த தவறுகளை, குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள்! அவர்கள் மீண்டும் வந்தால், தமிழ்நாடு என்னென்ன ஆபத்துகளைச் சந்திக்கும் என்று மக்களிடம் சொல்லுங்கள்!

நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்குத் தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கும், நம்முடைய திட்டங்களைப் பற்றி எடுத்துச்சொல்லுங்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், நாட்டில், ஏன் உலகத்திலேயே எந்த ஆட்சியும் நாம் செய்திருக்கும் அளவிற்கு முத்திரைத் திட்டங்களைச் செய்திருக்க மாட்டார்கள்.

நீங்களே பார்த்திருப்பீர்கள்… நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைபவர்களின் பேட்டிகளை, பல்வேறு ஊடகங்கள் வெளியிடுகிறார்கள். அப்படி, பேட்டி அளித்த ஒரு தாய் பேசினார்கள். தன்னுடைய பிள்ளைகள் பணம் அனுப்பவில்லை என்றாலும், தனக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை வாங்க, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் உதவியாக இருக்கிறது என்று சுயமரியாதை உணர்வுடன் பேசினார்கள்.

மற்றொரு பேட்டியில், பூ விற்கும் பெண் ஒருவர், ஆயிரம் ரூபாயை வைத்து, பூ வாங்குகிறேன், விடியல் பயணத்தில் சென்று அதை விற்றுவிட்டு வருகிறேன்… இதையெல்லாம் முதலீடாக மாற்றிச் சம்பாதிக்கிறேன் என்று சொன்னார்… இப்படி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய, ஒரு கோடியே 30 இலட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்கள் தங்களின் பணத்தேவைக்கு மற்றவர்களை எதிர்பார்த்திருந்த காலம் சென்று, அக்கவுண்ட்டில் மாதா மாதம் பணம் வருவது, புது தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது!

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு”, “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” போன்ற நிகழ்ச்சிகளை ஏன் நடத்துகிறோம்? நம்முடைய திட்டங்களின் பயனாளிகள் தங்களின் அனுபவங்களை, சக்சஸ் ஸ்டோரியை எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்துகிறோம்.

இன்னும் நிறைய சக்சஸ்ஃபுல் மனிதர்களை உருவாக்க வேண்டும். மகளிர் மாதிரியே, கல்லூரி செல்லும் மாணவர்கள், தங்களின் செலவைத் தாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு, அவர்களுக்கு துணையாக இருக்கும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 12 இலட்சத்திற்கும் அதிகமான மாணவ – மாணவியர்கள் பயன்பெறுகிறார்கள்!

அதுமட்டுமல்ல, பசியுடன் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த பிள்ளைகள் பலரும், இப்போது தினம் சூடாக, சுவையாக, சத்தாக காலை உணவு சாப்பிடும்போது, அவர்களின் அப்பா – அம்மா நிச்சயம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை நினைத்துப் பார்ப்பார்கள்!

‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்து, நல்ல வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எல்லாம் நம்முடைய திராவிட மாடலுக்கு நன்றி சொல்கிறார்கள்!

ஒவ்வொரு நாளும் யார் கையையும் எதிர்பார்க்காமல், விடியல் பயணம் திட்டத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் கோடிக்கணக்கான மகளிர், “இதுதான் எங்களுக்கான அரசு பஸ்” என்று பெருமைப்படுகிறார்கள்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், வீட்டிற்கே வந்து மாத்திரை மருந்து வழங்கி பார்த்துக்கொள்வதால் நலமாக இருக்கும் 2 கோடியே 53 இலட்சத்து 49 ஆயிரத்து 475 பேரும், நம்முடைய திராவிட மாடல் அரசு எப்படி கேர் எடுத்து பார்த்துக்கொள்கிறது என்று பாராட்டுவார்கள்!

இப்படி நம்முடைய திராவிட மாடல் அரசில், பட்டியலிட்டு, ஒவ்வொரு துறையிலும் சாதனைகளை “புத்தகம்”-ஆகப் போடும் அளவிற்கு, தினமும் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்! அதனால்தான் பொருளாதார வளர்ச்சியில், தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் ஒன்! ஒன்றிய அரசு வெளியிடும் பல சர்வே அறிக்கையிலும் எல்லாவற்றிவற்றிலும் நம்முடைய தமிழ்நாடுதான், டாப்!

“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

இந்த திட்டங்கள் எல்லாவற்றை பற்றியும், நீங்கள் விரல்நுனியில் வைத்துக்கொள்ள வேண்டும்! இது எல்லாவற்றையும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்! மற்ற கட்சிகள் எல்லோரும்தான் பிரசாரம் செய்வார்கள். ஆனால், அதிலிருந்து தனித்து தெரிவது போன்று உங்களுக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்க வேண்டும்!

வழக்கமாகத் தி.மு.க.,வுக்கு வாக்களிக்காதவர்கள் கூட, “இளைஞரணியின் கேம்பெய்னால்தான், தி.மு.க.வுக்கு வாக்களிக்கப் போகிறேன்” என்று சொல்ல வேண்டும்! அப்படியொரு தாக்கத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்! தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. மக்களிடம் நீங்கள் சொல்லுங்கள். பத்தாண்டுகளில், தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க.வினர் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வாக்கு கேட்பார்கள்!

அதேபோல், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கும் பா.ஜ.க.வினர், வழக்கம்போல் தங்களின் பொய்ப் பரப்புரைகளையும் - பதற்றத்தை உண்டாக்கும் அரசியலையும் வைத்து, தேர்தலை சந்திக்கலாம் என்று வருவார்கள்!

இவர்களிடம் கைகட்டி, வாய் பொத்தி, அடிமை சேவகம் செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழர்களின் சுயமரியாதையை அடகு வைக்கலாம் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்யப் பல கூட்டங்கள் இருக்கிறது!

2026 தேர்தலில், மக்கள் முன்னால் இருக்கும் கேள்வி என்ன என்றால், “இன்னும் ஐம்பது ஆண்டுகள் முன்னோக்கி நடைபோட போகிறோமா? இல்லை. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுக்க முயற்சி செய்பவர்களுக்கு அடிபணியப் போகிறோமா?” அந்தக் கேள்விக்கு மக்கள் அளிக்கப் போகும் விடை: “திராவிட மாடல் ஆட்சி 2.0” அதற்கு நீங்கள் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும்!

ஏன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தில்தான், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழினத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது! அந்த எதிர்காலம், வளம் நிறைந்ததாக, ஒளி நிறைந்ததாக தமிழ்நாடு நம்பர் ஒன் என்று சிங்கநடை போடுவதாக அமைய வேண்டும்!

நீங்கள்தான் திராவிட மாடல் 2.0 அடித்தளமாக, இருக்க வேண்டும்! இருப்பீர்களா? இப்போது சொல்லுங்கள். நமது மிஷன் 2026 என்ன? “திராவிட மாடல் 2.0!” சத்தமாகச் சொல்லுங்கள்… திராவிட மாடல் 2.0! அந்த வெற்றிக்கான பயணத்தை, இன்றைக்கே தொடங்குங்கள்!

banner

Related Stories

Related Stories